Published:Updated:

மோடி, லேடி, டாடி... நூறு கோடி!

நா.சிபிச்சக்கரவர்த்தி

மோடி, லேடி, டாடி... நூறு கோடி!

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:

'சந்நிதானத்தின் ஆசீர்வாதத்துடன் இந்த வாரக் குறும்புக் கேள்விகள் அமர்க்களப்படட்டும்... டும்!'' - குஷியாகத் தயாராகிறார் மதுரை ஆதீனம்.

''தம்பி... எதிர்க் கட்சி ஆளுங்களைப் பத்தி குந்தாங்கூறா ஏதாச்சும் சொல்லிருவேன்... அதெல்லாம் நீங்களே சென்சார் பண்ணிக்கோங்க!'' - ரணகள ஓப்பனிங் கொடுக்கிறார் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

''நாலு கேள்விகள் மட்டும்தானா... நாலு பக்கப் பேட்டியே தர்றேண்ணே... - 'அம்மாவின் பொற்கால ஆட்சி’ பத்திப் பேசிட்டு, அப்படியே ஸ்டாலின் பத்தி திட்டிவிட்ரவா... வேணாமா? சரி... கேளுங்க!'' - அம்மா புகழ் பாடத் துடிக்கிறார், சமீபத்தில் அ.தி.மு.க-வில் இணைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ்.

''இப்பதான் எலெக்ஷன் ஃபீவர் முடிஞ்சு ஃப்ரியா இருக்கேன். கேளுங்க... கேளுங்க. நம்ம அரசியல் நாலெட்ஜ் எப்படி இருக்குனு பார்ப்போம்!'' - சுய பரிசோதனைக்குத் தயாராகிறார் காஞ்சிபுரம் ம.தி.மு.க. வேட்பாளர் மல்லை சத்யா.

மோடி, லேடி, டாடி... நூறு கோடி!

''நேர்மையாகப் பதில் சொல்லுங்கள்... வைகோ, அன்புமணி ராமதாஸ், சுதீஷ், ஆ.ராசா இவர்களில், யார் வெற்றி பெறுவார்கள்... யார் தோல்வி அடைவார்கள்?''

மதுரை ஆதீனம்: யோசிக்கிறார்... ''40 தொகுதி களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் வெற்றி பெறும். கண்டிப்பாக வெற்றி பெறும்; நிச்சயமாக வெற்றி பெறும்; உறுதியாக வெற்றி பெறும்; மாபெரும் வெற்றி பெறும்.  (அடுத்து என்ன 'வெற்றி பெறும்’ என்று சொல்லலாம் என யோசிக்கிறார்) 40 தொதிகளிலும் வெற்றி பெற மகா சந்நிதானத்தின் ஆசீர்வாதமும் அம்மாவுக்கு இருக்கு. ('அதெல்லாம் இல்லை... மனச்சாட்சிப்படி பதில் சொல்லுங்கள்’ என்று அழுத்திக் கேட்டதும்) ''அன்புமணி ராமதாஸ், ஆ.ராசாவா?'' மீண்டும் யோசிக்கிறார்... ''அப்படி தனிநபர்கள் பத்தி சொல்ல முடியாது. அம்மா ஜெயிப்பாங்க. அதுதான் இங்கே பாயின்ட். மத்த விஷயங்களைப் பத்தி சொல்ல சந்நிதானம் இஸ் நாட் எ அஸ்ட்ராலஜர்!'' என்று சிரிக்கிறார்.

எ.வ.வேலு: ''தமிழகம் முழுக்க தலைவர் கலைஞரின் சுற்றுப்பயணம், தளபதியின் அனல் பிரசாரம், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை... இதெல்லாம் பார்க்கிறப்போ, 40 தொகுதிகள்லயும் தி.மு.க-வுக்குத்தான் ஜெயம். அம்மையாரின் அ.தி.மு.க. மண்ணைக் கவ்வும். தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வெற்றி உறுதி. வைகோ, அன்புமணி ராமதாஸ், சுதீஷ்... மூணு பேருக்கும் மூணாவது இடம்தான் கிடைக்கும். அது ஒரு விநோதக் கூட்டணி. ஒரே இடத்தில் இருந்தாலும், நவக்கிரகங்கள் எப்படி ஒன்றை ஒன்று பார்க்காதோ. அதுபோலத்தான் அந்தக் கூட்டணியும்!''

ஜே.கே.ரித்தீஷ்:  ''இதுல என்ன டவுட்டு? 40-க்கு 40 'அம்மா’தான் ஜெயிப்பாங்க. எங்க தொகுதி ராம்நாட்ல, 'அ.தி.மு.க. மூணாவது இடம்தான் வரும்’னு கருத்துக் கணிப்புல சொன்னாங்க. ஆனா, தொகுதி பல்ஸ் பார்த்தா, இரட்டை இலைதான் லீடிங். தமிழ்நாடு முழுக்க இதே டிரெண்டுதான். 'இது எங்க கோட்டை’னு அந்தக் கட்சிக்காரங்க சொல்வாங்க. ஆனா, கோட்டை எல்லாம் இடிஞ்சு மெகா சைஸ் ஓட்டை ஆயிடுச்சு. நீங்க சொன்ன யாருமே ஜெயிக்க மாட்டாங்க. அதுவும் ஆ.ராசாவுக்கு சான்ஸே இல்லை. குறைஞ்சது ரெண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்துல தோப்பாரு. இது உறுதி!''

மல்லை சத்யா: ''எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பிரதமர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதனால் தமிழகம், புதுவையில் எங்களுக்குத்தான் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு. ஒரு சில மாநிலக் கட்சிகள், ஒவ்வொரு தொகுதிக்கும்  30 கோடி ரூபாய்க்கும் மேல செலவு பண்றாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி நாங்கதான் ஜெயிப்போம். ('மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்!’ என்று அழுத்திக் கேட்டதும்) எங்க கூட்டணி, 30 தொகுதிக்கு மேல ஜெயிக்கும். தலைவர் வைகோ, மருத்துவர் அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் மச்சான் சுதீஷ் மூணு பேரும் ஜெயிப்பாங்க.

தமிழகத்தின் பெருமையை திகார் வரை கொண்டுபோன ஆ.ராசா, பணத்தை வாரி இறைச்சிருக்கார். ஆனாலும் அவர் ஜெயிக்க மாட்டார்!''

மோடி, லேடி, டாடி... நூறு கோடி!

''தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், 'நிர்வாகத்தில் யார் சிறந்தவர், மோடியா... இல்லை இந்த லேடியா?’ என்று சவால் விட்டவர் யார்?''

பதில்: தமிழக முதல்வர் ஜெயலலிதா.

மதுரை ஆதீனம்:  (கேள்வியை முடிக்கும் முன்னரே...) ''இது உண்மையானது. நிர்வாகத்தில் சிறந்தவர் லேடி. நம்ம 'அம்மா’ ஜெயலலிதாதான் அந்த லேடி. (போதும் சந்நிதானம்... பதில் சொல்லிட்டீங்க!) அம்மாவின் நிர்வாகத் திறமைகளைப் பார்த்து, தமிழ்நாடு ஐ.ஜி-ல இருந்து அமைச்சர் வரை எல்லாரும் பயப்படுறாங்க. (நீங்களும்தானே!) இதனால்தான் 'இந்தியாவின் சிறந்த நிர்வாகி’ தமிழ்நாட்டின் லேடி என்று சந்நிதானம் பெருமிதமாக அறிவிக்கிறது!'' (ஸ்ஸ்ஸ்... முடியலை!)

எ.வ.வேலு: ''மோடி, லேடி இந்த ரெண்டு பேருமே இல்லை. தமிழகம் முழுவதையும் தி.மு.க-வின் கோட்டையாக மாற்றிக்கொண்டிருக்கும் எங்கள் தளபதியின் டாடி, கழகத் தலைவர் கலைஞர்தான் நிர்வாகத்தில் சிறந்தவர்!'' என்று சொன்னவர் சின்ன இடைவெளிவிட்டு, ''தம்பி... எழுதும்போது தளபதியின் பெயரை விட்டுட்டு வெறும் 'டாடி’னு மட்டும் போட்ராதீங்க. 'தளபதியின் டாடி’னு மறக்காம எழுதுங்க!''

ஜே.கே.ரித்தீஷ்:  'வேற யாரு எங்க அம்மாதான்! இதுக்கு நடுவுல ஒருத்தர் புகுந்து, 'எங்க டாடிதான் சிறந்த நிர்வாகி’னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கார். எங்க அம்மா சொன்னதுக்கு கவுன்டர் கொடுக்கிறாராமா? போய் ஓரமா காமெடி பண்ணச் சொல்லுங்க!'' என்று சொல்லிவிட்டு, எதையோ நினைத்து நினைத்து 'கபகப’வெனச் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சிரிப்புக்குக் காரணம் கேட்டதற்கு, ''அட விடுங்கண்ணே... காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு இல்லையா!'' என்று மீண்டும் மீண்டும் சிரிக்கிறார்.

மல்லை சத்யா: ''மு.க.ஸ்டாலினா..? இல்லையா?'' என்று யோசித்தவர் கேள்வியை அவராகவே ஒரு முறை சொல்லிக்கொண்டவர், ''ஓ... இந்தம்மா தன்னைத்தானே புகழ்ந்துக்கிட்டாங்கல?'' என்று சிரிக்கிறார். ''அதுக்குப் பதில் சொல்லத்தான், 'மோடியும் இல்லை... லேடியும் இல்லை... எங்க டாடி’னு ஸ்டாலின் சொன்னாரா..? சரியாப்போச்சு!''

''மூன்று நாள் தேர்தல் விடுமுறைக்கு முந்தைய நாளன்று, டாஸ்மாக் மது விற்பனை எத்தனை கோடி ரூபாய்களை எட்டியது?''

பதில்: ''100 கோடி ரூபாய்க்கு மேல்!''

மதுரை ஆதீனம்:  ''வாங்கிக் குடிக்கணும்னு நினைக்கிறவங்க, வாங்கிக் குடிச்சிட்டுத்தான் இருப்பாங்க. டாஸ்மாக் லீவு விடப் போறாங்கனு தெரிஞ்சா, ஸ்டாக் வாங்கி வெச்சிட்டுக் குடிப்பாங்க. அதுல என்ன தப்பு? 'கள்ளன் பெரிதா... காப்பான் பெரிதா?’னு என்னைக் கேட்டா, 'கள்ளன்தான் பெரிது’னு சொல்வேன். சரி... பதில் என்ன? 100 கோடிக்கு மேலயா?'' (ஏதோ யோசிக்கிறார்...) ''தம்பி... இதை நீங்க ஒரே நாள் விற்பனைனு பார்க்கக் கூடாது. மூணு நாளுக்கான ஒரே நாள் மொத்த விற்பனைனு நினைச்சுக்கணும். ஒரே நாள்லயா அத்தனை மதுவையும்  எப்படிக் குடிக்க முடியும்? மூணு நாளைக்கு அந்தப் பணத்தைப் பிரிச்சா, ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் சொச்சம் வரும். அப்ப... அது நார்மல்தானே!'' என விடாமல் சிரிக்கிறார்.

எ.வ.வேலு: (அவசர அவசரமாக ஆளுங்கட்சியைத் திட்டத் தொடங்குகிறார்) ''இந்த ஆட்சியில் பல வகைகளிலும் டாஸ்மாக்தான் பிரதானப் பங்கு வகிக்கிறது. கடை மூடி இருந்தாலும் இப்பவும் பிளாக்ல ஆளுங்கட்சி ஆளுங்களுக்கு மட்டும் வித்துட்டு இருப்பாங்க. (அதுதான் உங்க கவலையா?!) இதனால் ஜெ. குரூப்புக்கு ஏக லாபம் குவியும்!''

ஜே.கே.ரித்தீஷ்:  '' '100 கோடி’னு சொல்றாங்கண்ணே. சரியாண்ணே!'' ('ஆமாம்’ என்றதும் சத்தம் போட்டுச் சிரிக்கிறார்.)

மல்லை சத்யா: ''என் பிரசாரத்தில் நாள்தோறும் டாஸ்மாக் பத்திதான் பேசினேன். டாஸ்மாக்கை வெச்சு இந்த அரசு எப்படி எல்லாம் சம்பாதிக்குதுனு பட்டியல் போட்டா தலை சுத்தும். ஆனா, நீங்க கேட்ட விவரத்தை நான் கவனிக்கலையே. இருந்தாலும் லீவுலகூட ஆளுங்கட்சி ஆளுங்களுக்கு சரக்கு சப்ளை ஆகிட்டுதான் இருக்கு. (இவருக்கும் அதே ஆதங்கம்) சரி... எவ்வளவு வித்தாங்களாமாம்?!'' என்று பதிலைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.

'' 'ஒரு குற்றமும் செய்யாத அழகிரியைக் கட்சியில் இருந்து நீக்கியது, ஓரவஞ்சனை’ என்று தே.மு.தி.க. பிரமுகர் ஒருவர் குரல் கொடுத்திருக்கிறார். அவர் யார்?''

பதில்: பிரேமலதா விஜயகாந்த்.

மதுரை ஆதீனம்: ''விஜயகாந்த்தானே இப்படிச் சொல்லியிருப்பாரு. இல்லையா?'' ('பதிலுக்குப் பக்கத்துல நெருங்கிட்டீங்க’ என்றதும்) ''அப்ப பிரேமலதாவா? ரெண்டு பேரும் ஒண்ணுதானே! ஆனா, சந்நிதானம் என்ன நினைக்கிறார்னா, அப்பாவும் மகனும் மீண்டும் ஒண்ணு சேர்ந்திருவாங்க.

மோடி, லேடி, டாடி... நூறு கோடி!

அப்புறம் நம்ம விஜயகாந்த் பத்தி ஒண்ணு சொல்றேன். ரெண்டரை ஆண்டுக்கு முன்னாடி நடந்ததைச் சொல்றேன். அப்ப சந்நிதானத்தின் ஆசீர்வாதம் வாங்க விஜயகாந்த் வந்திருந்தாரு. 'நீங்க எதிர்க் கட்சித் தலைவராக இருக்கீங்க. அதனால, 'அம்மாவை விட்டுப் போகாதீங்க’னு சொன்னேன். ஆனா அவர், 'கட்சி நிர்வாகிகள் விரும்பலை. ஒரு மேயர் பதவிகூட எங்களுக்குக் கொடுக்கலை... அது இது’னு சொல்லி ஃபீல் பண்ணார். ப்ச்... நான் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கலையே!''

எ.வ.வேலு:''பிரேமலதா பேசினதா பேப்பர்ல படிச்சேன். ஆடு நனையுதேனு...'' என்று ஆரம்பித்து ஏதோ சொல்ல வந்தவர், ''வேணாம் தம்பி... போதும்!'' என்று முடித்துக்கொண்டார்.

ஜே.கே.ரித்தீஷ்: சட்டென பதில் வருகிறது... ''பிரேமலதா. எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. 'ஆடு நனையுதேனு ஓநாய் அழுததாம்...’ அதுதான் இது!''

மல்லை சத்யா: சந்தேகத்துடன்... ''கேப்டன்தானே இப்படிச் சொன்னார். இல்லையா? அப்ப அண்ணியார் பிரேமலதா சொல்லி இருப்பாங்க. மத்தபடி இந்தக் கேள்விக்கு நோ கமென்ட்ஸ்!'' என்று சிரிக்கிறார்.