Published:Updated:

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

டி.அருள் எழிலன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

டி.அருள் எழிலன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

'அரசியல் சாசனப்படி வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதையும், உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஏற்க முடியாது. ஒருவர் தன் பாலினத்தை மாற்றிக்கொண்டால், மாற்றிக் கொண்ட பாலினம் எதுவோ, அந்த உரிமைகள் அனைத்தும் அவருக்கும் உண்டு. ஆகவே, திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து, அவர்களுக்கு சமூகத்தின் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்!’ - திருநங்கைளை சட்டரீதியாக அங்கீகரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பின் சாராம்சம் இது!

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

இரு பாலினத்திலும் சேராத திருநங்கைகளுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கோரி, தேசிய சட்ட மையம் தொடுத்த பொதுநல மனு மீதான வழக்கில் வழங்கப்பட்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு. அத்துடன் திருநங்கைகளை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சகல உரிமைகள், சிறப்பு உரிமைகள் அனைத்தையும் வழங்குவதோடு மாநில அரசுகள் இது தொடர்பாக உரிய சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சமூகப் புரிதல் இல்லாமல் இழிவாகவும் கரிசனமற்றும் எதிர்கொள்ளப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களை, மரியாதையாக 'திருநங்கை’ என்று முதன்முதலாக அழைத்தது தமிழகம்தான். பல ஆண்டுகளுக்கு முன்பே வாக்கு உரிமை, வாரியம் என்ற அங்கீகாரங்கள் தமிழகத்தில் கிடைத்துவிட்டாலும், அனுதின வாழ்வில் திருநங்கைகள் எதிர்கொள்ளவேண்டிய சங்கடங்களுக்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல!

இந்தத் தீர்ப்பின் சாதக பாதகங்கள், உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரவேண்டிய நடைமுறைகள் குறித்து சில திருநங்கைகளிடம் பேசினேன். தங்களுக்கான சின்னச்சின்ன உரிமைகளுக்குக்கூட போராடி தத்தமது துறையில் மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்திருப்பவர்கள் இவர்கள்.

பல கட்டத் தடைகளுக்குப் பிறகு, 'திருநங்கை’ அந்தஸ்துடன் குரூப் 4 தேர்வு எழுதித் தேர்வாகி, குரூப் 2 தேர்வு எழுதி அதன் முடிவுக்காகக் காத்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த சொப்னா. ''தெருக் கடையில் தேநீர் குடிப்பது முதல் சினிமா தியேட்டரில் டிக்கெட் எடுப்பது வரை எங்களின் ஒவ்வொரு செயலையும் நாங்கள் போராட்டத்தோடே அணுக வேண்டியிருக்கிறது. 'உங்களைப் போல நாங்களும் மனிதர்கள்தான்... எங்களுக்கும் திறமைகள் உண்டு’ என்று நிரூபிப்பதிலேயே நாங்கள் களைத்துவிடுகிறோம்.

நான் படிக்கும் வகுப்பறையில் என்னைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், பொதுவெளியில் இன்னும் பெரு மாற்றம் தேவைப்படுகிறது. இப்போது இந்தத் தீர்ப்பில்கூட 'மூன்றாவது பாலினம்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படியெனில், முதல் மற்றும் இரண்டாம் இடத்துக்குப் பிறகுதான் நாங்கள் வருகிறோம். ஆக, உயிரியல் மற்றும் உளவியல்ரீதியாகவும் எங்கள் இருப்பை வரையறுக்க வேண்டும்.

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

எனது பள்ளிச் சான்றிதழ்களில் எனது பழைய பெயரை நீக்கிவிட்டு, 'சொப்னா’ என்று சேர்க்க நான் என்ன செய்ய வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் கேட்டபோது, 'சட்டப்படி அப்படி மாற்ற முடியாது’ என்றார்கள். ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, 'ஃபோர்ஜரி பண்ணி வேலை வாங்கப் பார்க்கிறீங்களா?’ என்று கேட்டார்கள். இப்போது நாங்கள் இதற்காகச் சட்டரீதியாகப் போராட இருக்கிறோம். ஆக, எங்களுக்குச் சீர்திருத்தம் போதாது. சமமான வாழ்வுரிமையே முக்கியம்!''

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் பானு. தற்போது பொறியியல் கல்விக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்.

''சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலைதான் திருநங்கைகள் எதிர்கொள்ளும் முதல் சவால். பெரும்பாலும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள், அல்லது பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு என்று உரிய வாழ்வை குடும்பமும், சமூகமும், அரசும் அமைத்துக்கொடுத்திருந்தால் ஏன் பாலியல் தொழிலில் ஈடுபடப்போகிறார்கள்?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியில் திருநங்கைகள் சேர முடியுமா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, 'முடியாது. இது அரசு விதி’ என்றார்கள். திருநங்கைகள் கலை மற்றும் அறிவியல் கல்விதான் பயில வேண்டும். பெண்கள் கல்லூரியில் சேர முடியாது. பெண்கள் விடுதியில் தங்கக் கூடாது. இருபாலர் பயிலும் கல்லூரிகளில் மட்டுமே படிக்க வேண்டும்... இப்படி திருநங்கைகளை இறுக்கிப் பிடிக்கும் கட்டுப்பாடுகளை ஏகமாக விதித்திருக்கிறது அரசாங்கம்.

ரயில், பேருந்து பயணங்களில் இன்னமும் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம். ஆண்களால் துன்புறுத்தப்படும் அதே நேரம், பெண்களால் நிராகரிக்கப்படுகிறோம். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இருப்பது போல 'திருநங்கை கள் பாதுகாப்புச் சட்டம்’ என்ற ஒன்று இயற்றினால், எங்கள் மீதான வன்முறை குறையும்.

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

இன்னொரு மிக முக்கியமான விஷயத்தையும் பதிவுசெய்ய வேண்டும். ஆணாகப் பிறந்து தன்னைப் பெண்ணாக உணர்ந்து திருநங்கையாக மாறுவதும், பெண்ணாகப் பிறந்து தன்னை ஆணாக உணர்ந்து திருநம்பியாக மாறுவதும் பள்ளிப் பருவத்தில்தான். மிகவும் மனக்குழப்பமான பருவம் அது. அப்போதெல்லாம் ஆசிரியர்கள், சக மாணவர்கள், குடும்பம் என எவரிடமும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழலே நிலவுகின்றன. அப்படியே வெளிப்படுத்தினால், சகல தரப்பிலும் வன்முறையை ஏவுவார்கள். ஒரு திருநங்கை அல்லது திருநம்பியின் வாழ்வு இருட்டில் தள்ளப்படுமா அல்லது அவர்களும் பிரகாசமான வாழ்வை வாழ முடியுமா? என்பதைத் தீர்மானிக்கும் பருவம் அதுதான்.

திருநங்கைகளுக்காக அரசு செய்யவேண்டிய முதல் வேலை, இந்தப் பாலின மாற்றம் நடக்கும் பள்ளிப் பருவத்தில் அவர்களை குடும்பம், பள்ளிக்கூடம், சமூகம்... எனப் பலதரப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். அந்தப் பருவத் தைப் பக்குவமாகக் கடந்தாலே, பின்னாளில் ஒவ்வொரு திருநங்கையும் இந்தச் சமூகத்துக்குத் தன்னாலான பங்களிப்பை மற்ற பாலினத்தவர்களைக் காட்டிலும் சிறப்பாகத் தர முடியும்!''

தொண்டு நிறுவனப் பணியாளரான பிரித்திகா யாஷினி சொல்வது, முற்றிலும் வித்தியாசமான கோணம்.

''நான் என்னைத் திருநங்கையாக உணர்ந்தபோது, வீட்டில் இருந்து துரத்தப்பட்டேன். பி.சி.ஏ., முடித்துவிட்டு சென்னைக்கு வந்தபோது, பெண்கள் விடுதி ஒன்றில் நான் திருநங்கை என்பதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் வார்டன் ஆகச் சேர்ந்தேன். எட்டு மாதம் அப்படி 'தலைமறைவாக’ இருந்து, பிறகு வெளியேறி வேறு வேலையில் சேர்ந்தேன்.

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

பெரும்பாலான திருநங்கைகள், கிட்டத்தட்ட இந்தத் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இல்லையெனில், பாலியல் தொழில். இந்த இரண்டில் எதையும் தேர்ந்தெடுக்காமல் மற்ற குடிமக்களைப் போல சிவில் உரிமை பெற்று வாழ்வதற்கான வாய்ப்பை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இப்போது திருநங்கைகளும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், அவர்களின் திருமணம் ஆண், பெண் என்ற பிரிவில்தான் நடக்கிறது. திருநங்கை திருமணங்களும் சட்டபூர்வமாக்கப் பட வேண்டும். இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பற்ற திருநங்கைகளும், திருநம்பிகளும் சட்டபூர்வமாக குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவும் அவர்கள் வாழ்வில் மிக முக்கியமான அம்சம்!''

டை வடிவமைப்புத் தொழிலில் முத்திரை பதித்திருக்கும் ஸ்ரீநிதி, ''இந்தத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகளுக்குப் பெரும் பங்கு இருக்கிறது'' என்கிறார்.

''உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பை மாநில அரசுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். உரிய சட்டங்களை இயற்றி திருநங்கைகள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். திருநங்கைகள் பற்றி ஓரளவு விழிப்பு உணர்வு உருவாகியுள்ள நிலையில், திருநம்பிகள் பற்றிய விழிப்பு உணர்வையும் உருவாக்க வேண்டும்.

திருநங்கைகளும் திருநம்பிகளும் எதிர்கொள்ளும் வன்முறைகளின் அளவுகோல்கள் வேறுபடலாம். ஆனால், வன்முறையின் பண்பு ஒன்றுதான். தமிழகம் முழுக்க பல்லாயிரம் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளனர். இவர்கள் பற்றிய முறையான கணக்கெடுப்பு எதுவும் இல்லை. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் தமிழகம் முழுக்க உள்ளனர். இவர்களுக்கான சமஉரிமைகளை வழங்குவதே பெருமிதமாக இருக்கும்!''

திருநங்கை திருமணம்... தேவை அங்கீகாரம்!

மூக ஆர்வலரான திருநங்கை சுதா, தமிழக அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில கருத்துகளை முன்வைத்தார்.

''ஒரு திருநங்கை அல்லது திருநம்பி எதிர்கொள்ளும் சமூக வன்முறை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. தொடர்ச்சியான நிராகரிப்புகளும் புறக்கணிப்புகளும் உள்ள சமூகத்தில், எங்களை நிலைநிறுத்திக்கொள்ள, இந்தத் தீர்ப்பு நிச்சயம் உதவும்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, ஏப்ரல் 15-ம் தேதியை 'திருநங்கைகள் நாள’£க அறிவித்தார்கள். வாரியத்தின் அடையாள அட்டை 2,328 பேருக்கும், 1,238 பேருக்கு ரேஷன் அட்டையும் அப்போது கொடுக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகம் அமைத்த அந்த வாரியத்தால் ஓரளவுக்கேனும் எங்களுக்கு நன்மைகள் கிடைத்தன. ஆனால், இப்போது அந்த வாரியம் செயல்படவில்லை. வாரியத்தை மூடிவிட்டதாக அறிவிக்கவில்லையே தவிர, முழுக்கவே முடமாகிக்கிடக்கிறது திருநங்கைகள் நல வாரியம்.

புதிதாக அடையாள அட்டை யாருக்கும் வழங்கப்படவில்லை. அடையாள அட்டை இல்லையென்றால், நாங்கள் ரேஷன் அட்டையோ, வாக்காளர் அட்டையோ பெற முடியாது. 'இந்த வாரியத்தை முடக்காமல் நடத்த வேண்டும்’ என்று அமைச்சர் வளர்மதியிடம் பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால், பதில் எதுவும் இல்லை. அ.தி.மு.க. அரசு உடனடியாக திருநங்கைகள் வாரியத்துக்கு திருநங்கை களையே பொறுப்பாளர்களாக நியமித்து உரிய நிதி ஒதுக்கி சீர்திருத்தப் பணிகளைத் தொடக்க வேண்டும்!''

இது அவசியம்... அவசரம்... தமிழக அரசின் கவனத்துக்கு!