Published:Updated:

அர்ஷியாவின் பேரிழப்பு!

க.பாலாஜி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

அர்ஷியாவின் பேரிழப்பு!

க.பாலாஜி, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

மேஜர் முகுந்தின் இறப்பு, இந்தியாவின் இழப்பு! காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலியான மூன்று ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த முகுந்தும் ஒருவர்.

எந்தச் சூழ்நிலையிலும் தன் குடும்பத்தினர் கண்ணீர் சிந்துவதை முகுந்த் விரும்பியது இல்லையாம். அதனால் அவர் தந்தை வரதராஜன், மனைவி இந்து... என அனைவரும் துக்கத்தை அடக்கிக்கொண்டு மெல்லிய புன்னகையுடனே இறுதி ஊர்வலத்தில் எல்லோரையும் எதிர்கொண்டனர். ஆனால், தந்தையின் சவப்பெட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்த முகுந்தின் துறுதுறு மகள் அர்ஷியாவைப் பார்த்த அனைவருக்கும் நிச்சயம் துக்கம் பன்மடங்கு அதிகரித்திருக்கும்.

அர்ஷியாவின் பேரிழப்பு!
அர்ஷியாவின் பேரிழப்பு!

'தந்தை இறந்துவிட்டார்... இனி வரவே மாட்டார்’ என்ற நிதர்சனம் உணர முடியாத வயது அர்ஷியாவுக்கு. 'அப்பா... எப்பம்மா வருவார்?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தவளிடம், 'அப்பா தூங்கிட்டு இருக்கார்மா... சீக்கிரம் எந்திரிச்சிடுவார்’ என்று சமாதானப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். அரசு மரியாதை செலுத்துவதற்காக துப்பாக்கிகள் முழங்கியபோது, 'ஹேய்... துப்பாக்கிச் சத்தம் கேட்டு அப்பா எந்திரிச்சிடுவார்... அவருக்கு துப்பாக்கினா ரொம்பப் பிடிக்கும்’ என்று துள்ளிக் குதித்திருக்கிறாள் அர்ஷியா. ஆனால், அர்ஷியாவின் ஆசை எப்படி நிறைவேறும்!?

முகுந்தின் சடலம் எடுத்துச் செல்லப்படும்வரை 'அப்பா எழுந்திருப்பார்’ என்று காத்திருந்து சோர்ந்துபோன அர்ஷியா, சின்ன சோகத்துடனேயே இருந்தாள். ஆனால், ஒரு துளி கண்ணீர்கூட சிந்தவில்லை அவள். அப்பாவின் மனதைப் புரிந்துகொண்டிருப்பாள் போல!