Published:Updated:

கானகத் திருவிழா!

மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: ரா.சதானந்த்

கானகத் திருவிழா!

மா.அ.மோகன் பிரபாகரன், படங்கள்: ரா.சதானந்த்

Published:Updated:

த்தியமங்கலம் காட்டுக்குள் அரங்கேறிய அதுவும் ஒரு 'சம்மர் கேம்ப்’தான். ஆனால், நிச்சயம் தமிழகத்தின் வேறு எந்த கோடை முகாம்களைவிடவும் பிரத்யேகமானது; விசேஷமானது!

சத்தியமங்கலம் வனப்பகுதி, மைசூர் செல்லும் பாதையில் நான்கு கிலோமீட்டர் நடந்து சென்றால், பழைய ஆசனூர் வரும். அங்குள்ள 'சுடர் உண்டு உறைவிடப் பள்ளி’யில் நடந்த முகாமில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவரும் மலைவாழ் பழங்குடிக் குழந்தைகள். இவர்கள் 10 மாத பள்ளி வகுப்பறைக் களைப்பைப் போக்கிக்கொள்ள, அந்த முகாம் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்கள் அத்தனை பேரும் சிறப்புப் பள்ளிக் குழந்தைகள்.

அதென்ன சிறப்புப் பள்ளி? 'சுடர்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நடராஜ் விளக்குகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சத்தியமங்கலம் வனப்பகுதியின் மொத்தப் பரப்பளவு ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டர். இதில் உள்ள பெரும்பாலான மலைக் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள்கூட கிடையாது. ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்கு, அடர்ந்த காடு வழியே நடந்துதான் செல்ல வேண்டும். அந்தப் பாதையில் யானைகள் மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகம். எனவே விலங்குகளுக்குப் பயந்து, குழந்தைகள் பள்ளிக்கு வருவதே இல்லை. இந்தக் கிராம மக்களுக்கும் போதிய கல்வியறிவு இல்லாததால், அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதும் இல்லை.

கானகத் திருவிழா!

பல குழந்தைகள், சிறு வயது முதலே பள்ளிக்குப் போகாமல் விவசாயக் கூலி வேலைகளுக்கும், காட்டு வேலைகளுக்கும் செல்கிறார்கள். தப்பித்தவறி பள்ளிக்கு வரும் சில குழந்தைகளும் பள்ளி சூழல் புரியாமல் படிப்பையே நிறுத்திவிடுகிறார்கள். இன்னொரு பக்கம் காட்டுக்குள் பள்ளிகள் இருப்பதால் ஆசிரியர்களும் ஆர்வமாக வருவது இல்லை. அப்படிப்பட்ட

15 வனப்பகுதிக் கிராமங்களில், மத்திய அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் கல்வித் திட்டத்தின் கீழ் நாங்கள் சிறப்புப் பள்ளிகளை நடத்தி வருகிறோம். இதில் இரண்டு பள்ளிகள், ஷிஷிகி திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் கல்வி போதிப்பதைவிடவும், பள்ளிக்கு, குழந்தைகள் தொடர்ந்து வருவதற்கான சூழலை உருவாக்கித் தருகிறோம். இந்த 15 பள்ளிகளிலும் 450-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இரண்டு வருடங்கள் எங்களிடம் பயின்ற பிறகு, அவர்களுக்குப் பள்ளிச் சூழல் புரியும்போது, அவர்கள் விரும்பும் பள்ளியில் அவர்களைச் சேர்த்துவிடுகிறோம். கல்வி மீது இவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கவைப்பதே இந்த முகாமின் நோக்கம்!'' என்று அறிமுகம் கொடுத்தார்.

இந்த முகாமில் குழந்தைகளுக்கு ஆட்டக்கலை, சிலம்பாட்டம். ஒயிலாட்டம், வில்-அம்பு எறிதல், கதை சொல்லல் ஆகியவற்றுடன் நடனம், பாடல், நூல் வாசிப்பு, கானக உலா, புகைப்படம் எடுத்தல், ஓவியம், விளையாட்டு மற்றும் ஓரிகாமி போன்ற கலைகளும் பயிற்றுவிக்கப்பட்டன.

கானகத் திருவிழா!

முகாமில் குன்றி, கத்தரிமலை, தாமரைக்கரை, ஒண்ணகரை, பங்களா தொட்டி, சோளகர் தொட்டி, விளாங்கோம்பை... என 10-க்கும் மேற்பட்ட ஊரில் இருந்து 45 குழந்தைகள் அழைத்துவரப்பட்டிருந்தனர். ஆண்ட்ராய்டு மொபைல், ஃபேஸ்புக் என நகரத்துக் குழந்தைகள் டெக்னாலஜியில் பின்னியெடுக்க, இந்தப் பழங்குடி குழந்தைகளில் பலர் பேருந்தைக்கூடப் பார்த்தது இல்லை.

முகாமில் கலந்துகொண்ட சந்தோஷ் என்கிற சிறுவனின் கண்களில் அத்தனை சந்தோஷம்.

'அண்ணா... நான் இதுவரைக்கும் பள்ளிக்கூடம் போனதே இல்லை. விவசாயக் கூலி வேலைக்கும், விறகு பொறுக்கவும் போய்ட்டு இருந்தேன். வேலை இல்லாதப்ப தம்பி, தங்கச்சியைப் பார்த்துப்பேன். எங்க வீட்டுல டி.வி-கூட கிடையாது. இந்த ஸ்கூலுக்கு வந்த பின்னாடிதான் வெளி உலகமே தெரியுது!'' என்கிறான் கண்கள் மின்ன.

சிறுவன் கவினின் வாழ்க்கை துயரமானது. 'என் அம்மாவுக்குச் சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிருச்சு. நான் பொறந்ததும் அவங்க செத்துப்போய்ட்டாங்க. அப்பா, வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவருக்கு என்னையைப் பிடிக்கவே இல்லை. அடிச்சிக்கிட்டே இருந்தார். அதனால பாட்டி வீட்டுக்குப் போயிட்டேன். அங்க இருந்து ஒரு மெக்கானிக் கடைக்கு வேலைக்குப் போனேன். அங்கே என்னைப் பார்த்த சார் கூட்டிட்டு வந்து ஸ்கூல்ல சேர்த்துவிட்டார். இப்போ ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்.

போன வருஷம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு போட்டி வெச்சாங்க. அதில் 'ஆற்றல் இழப்பு’னு ஒரு தலைப்பு கொடுத்தாங்க. குழந்தைத் திருமணத்தால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் இழப்புகள், அவங்க குழந்தைகளுக்கு ஏற்படும் இழப்பு, மொத்த வாழ்க்கையில் ஏற்படும் இழப்புனு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். வித்தியாசமான சிந்தனைனு கவர்னர் கையால் பரிசு வாங்கினேன். அந்தப் பரிசை வாங்கப் போனப்ப ஹோட்டல்ல தங்கவெச்சிருந்தாங்க. நான் குளிக்கலாம்னு பைப்பைத் திருகினா, மேலே இருந்து தண்ணி கொட்டுது. என்னமோ ஏதோனு பயந்துட்டு வெளியே ஓடி வந்துட்டேன். அப்புறம்தான் அது ஷவர்னு சொல்லிக் குடுத்தாங்க. குளிக்கிறதுக்கு இவ்வளவு வசதியானு ஆச்சர்யமா இருந்துச்சு. நாங்க ரொம்பப் பின்தங்கி இருக்கோம். நல்லாப் படிச்சு நிறைய சம்பாதிக்கணும். வருங்காலத்தில் எங்களை மாதிரி பழங்குடிப் பசங்க வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டுவரணும்!'' என்கிறான் உறுதியான குரலில்.

கானகத் திருவிழா!

முருகேசன் படிப்பது எட்டாம் வகுப்புதான். ஆனால், அவன் வாழ்வில் அத்தனை சோகம். 'அப்பா இறந்தப்போ, எனக்கு ஆறு வயசு. அப்பா வாங்கியிருந்த கடனை அடைக்க அண்ணா, நான், தம்பி எல்லாம் வேலைக்குப் போனோம். கடனை அடைச்சதும் எங்களைப் படிக்கவைக்க அண்ணன் மட்டும் வேலைக்குப் போனான். வீட்டுக்குக்கூட வராம வெளியூர்ல தங்கி வேலை செஞ்சு பணம் கொடுப்பான். அவனுக்கு என்னைவிட ரெண்டு வயசுதான் ஜாஸ்தி. எங்க அம்மாவையும் அவன்தான் பார்த்துக்கிறான். எங்க அண்ணாவுக்காக நாங்க நல்லாப் படிப்போம்ணா!'' - அத்தனை பாசம் வழிகிறது முருகேசன் குரலில்.

விஜய் சொல்வது யோசிக்கவேண்டிய விஷயம். 'நான் கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சேன். பெரும்பாலும் டீச்சர் யாரும் வர மாட்டாங்க. அப்படியே அவங்க வந்தாலும் எங்களைப் பத்தி கவலைப்பட மாட்டாங்க. நான் ஸ்கூலுக்கு மட்டம் போட்டு, அருவியில் குளிக்கிறது, முயல் பிடிச்சு வறுத்துச் சாப்பிடுறது, தேன் எடுக்கிறதுனு ஜாலியாத் திரிஞ்சேன். அப்புறம் படிப்பு மேல ஆர்வம் வந்து ஏழாம் கிளாஸ் படிக்கிறேன். போன வருஷம்தான் பஸ், கார் எல்லாம் முதல் தடவையாப் பார்த்தேன். வெளியூருக்கு வந்தப்ப, வேலை செய்ற பசங்களைப் பார்த்தேன். சாராயக் கடை வாசல்ல காத்துக்கிடக்கிறாங்க; சிகரெட் பிடிக்கிறாங்க. யாரும் கேள்வி கேட்காத நாங்களே ஒழுக்கமா இருக்கோம். ஊர்ல அவ்வளவு பேர் இருந்தும் யாரும் கேட்க அவங்களைக் கேட்க மாட்டாங்களாணா?'' என்கிறான் பொறுப்பான குரலில்.

இந்தப் பழங்குடி மக்களிடம் பேசிப் பார்த்ததில் ஒரு விஷயம் புரிந்தது. பெரும்பாலான தம்பதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வே இல்லை. குடும்பக் கட்டுப்பாடு என்பது தெய்வக் குற்றம் என்கிறார்கள். ஒவ்வொரு தம்பதிக்கும் குறைந்தது ஐந்து முதல் ஏழு குழந்தைகள். இங்கு மருத்துவ வசதிகள் குறைவு. பிரசவங்களைக்கூட தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். தொடர் பிரசாரங்கள் மூலம் இப்போதுதான் அவர்களுக்குக் கொஞ்சம் விழிப்பு உணர்வு வர ஆரம்பித்திருக்கிறது.

முகாமில் கலந்துகொண்ட ஒரு குழந்தையின் தந்தை கரியதம்புடி பேசும்போது, ''நாங்க இயற்கையின் குழந்தைகள். எங்களால காட்டு வாழ்க்கையைவிட்டு வெளியே வர முடியாது. வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்தப்ப, நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டோம். 10 மாசம் என்னை முகாம்ல அடைச்சு வெச்சு சித்ரவதை பண்ணினாங்க. கரன்ட் ஷாக்லாம் கொடுத்தாங்க. கல்வியறிவு இல்லாத காரணத்தால், எங்களால எதிர்த்துக் கேள்வி கேட்க முடியலை. அரசாங்கமோ, அதிகாரிகளோ, யாருமே எங்களைப் பாதுகாக்கலை; நீதியும் கிடைக்கலை. எங்களை மாதிரி எங்க குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது. அதனால ஆறேழு கிலோமீட்டர் நடந்தாலும் பரவாயில்லைனு படிக்க வெக்கிறோம்!'' என்கிறார் வேதனையான குரலில்.

''நகர்ப்புறக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சலுகைகளில் இவர்களுக்குப் பாதிகூட கிடைப்பது இல்லை. அதைப் பற்றி நாம் யோசிப்பதும் இல்லை. காடுகளின் பாதுகாவலர்களான பழங்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த மக்களும் அரசாங்கமும் உதவணும்'' என்று வேண்டுகோளோடு முடிக்கிறார்கள் முன்னாள் DSP மயில்சாமி மற்றும் செங்குந்தர் கல்வி குழுமத் தலைவர் சிவானந்தன் ஆகியோர்.

இது தமிழக அரசின் கவனத்துக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism