Published:Updated:

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

அரசு மருத்துவமனைகளின் அவலம்டி.அருள் எழிலன், ஓவியம்: ஹாசிப்கான்படங்கள்: தி.விஜய்,சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, பா.கார்த்திக்

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

அரசு மருத்துவமனைகளின் அவலம்டி.அருள் எழிலன், ஓவியம்: ஹாசிப்கான்படங்கள்: தி.விஜய்,சொ.பாலசுப்ரமணியன், பா.காளிமுத்து, பா.கார்த்திக்

Published:Updated:

பிரதான கட்டுரைக்குச் செல்வதற்கு முன் ஒரு சின்ன தகவல்...

இந்தியாவிலேயே 'மெடிக்கல் டூரிஸ’த்தில் சென்னைக்குப் பிரதான இடம். தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் 10 பேரில் இருவர் வெளிநாட்டினர். காரணம்... தரமான மற்றும் விலை மலிவான மருத்துவ சிகிச்சைகள். 'நிர்க்கதியான நிலையில் சென்னை வந்தோம். ஆனால், எங்கள் சொந்தத்தை மீட்டுவிட்டோம்!’ என்று வெளிநாட்டினர் கண்ணீர் மல்கப் பேட்டியளிப்பது இங்கு அனுதின வாடிக்கை!

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது பிரதான கட்டுரைக்குச் செல்வோம்.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியிருக்கும் ஏழைத் தமிழர்களின் நிலையோ கவலைக்கிடம். நோயுடன் மருத்துவமனைக்குச் சென்றால், மன உளைச்சல் அதிகரிப்பதே பக்கவிளைவாக இருக்கிறது. இதற்கு தமிழகம் தழுவிய அளவில் மிகச் சில உதாரணங்கள் இங்கே...

உயிர்வதைக் கூடங்களா அரசு மருத்துவமனைகள்?

ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில், தன் மனைவி மேரி பவுலினாவை பிரசவத்துக்காக அனுமதித்துப் பறிகொடுத்தவர் ராஜா. ''என் மனைவியைப் பிரசவத்துக்காக அங்கே சேர்த்தேன். பிரசவ வலி வந்தப்போ, 'டாக்டர் இல்லை’னு சொன்னாங்க. போன்ல டாக்டர்கிட்ட விவரம் கேட்டுட்டு, சில ஊசி போட்டாங்க. திடீர்னு பதறியடிச்சு ஓடி வந்த நர்ஸ், 'நீங்க போய் டாக்டரைக் கூட்டிட்டு வாங்க’னு சொன்னாங்க. டியூட்டி நேரத்துல அரசு மருத்துவமனையில் இல்லாம, அவரோட சொந்த க்ளினிக்ல இருந்தார் டாக்டர். நான் போய் அவரை ஆட்டோல கூட்டிட்டு வந்தப்போ, என் மனைவி இறந்திருந்தாங்க. என்ன நடந்துச்சுனு இப்போ வரை எனக்குத் தெரியலை. மனைவி இல்லாம நான் தவிக்க, அந்த டாக்டர் கொஞ்ச நாள் சஸ்பெண்ட்ல இருந்தார். அப்புறம் திரும்பவும் வேலைக்கு வந்துட்டார்!'' - ஜீவனே இல்லாமல் பேசுகிறார் ராஜா.

கன்னியாக்குமரி மாவட்டத்தின் கடைக்கோடி குட்டிக் கிராமம் செம்பொன்கரை. சில்லறை தேங்காய் வியாபாரி கணேசன், தன் இரண்டு பிள்ளைகளோடு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார். கர்ப்பத்தடை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற, தன் 33 வயது மனைவி ருக்மணி இறந்ததை இன்னமும் அவரால் நம்ப முடியவில்லை.

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

''கருத்தடை ஆபரேஷனுக்காக கன்னியாக்குமரி மாவட்டம் ஆசாரிப் பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ருக்மணியை சிகிச்சைக் காகச் சேர்த்தேன். ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டுபோனாங்க ரொம்ப நேரம் ஒரு தகவலும் இல்லை. போய்ப் பார்த்தா, நினைவில்லாம உடம்பு எல்லாம் கருத்துப்போய் கிடந்தா. 'என்ன நடந்துச்சு?’னு கேட்டா விளக்கம் சொல்லாம, மதுரைக்குக் கொண்டுபோகச் சொன்னாங்க. மதுரையில் 160 நாள் வெச்சிருந்தோம். எந்த முன்னேற்றமும் இல்லை. வேலூர் சி.எம்.சி-ல காமிச்சும் பயன் இல்லை. கடைசி வரை நினைவு திரும்பாமலேயே ருக்மணி இறந்துட்டா.

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கருத்தடை ஆபரேஷன் நடந்தப்போ, ஆக்சிஜனுக்குப் பதிலா மூளையைச் செயலிழக்கவைக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுவை, தவறுதலா என் மனைவிக்குக் கொடுத்திருக் காங்க. இது ரொம்ப நாள் கழிச்சுதான் எனக்குத் தெரிஞ்சது!''-விரக்தித் ததும்புகிறது கணேசனின் குரலில். இந்தப் பிரச்னை தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை இல்லை.

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் நினைவின்றி அசைவற்றுக்கிடக்கும் 31 வயதுடைய தன் மனைவி சீதாலட்சுமியைவிட்டு நகர முடியவில்லை சுப்பிரமணியனால். என்ன நடந்தது சீதாலட்சுமிக்கு?

''கழுத்துல தைராய்டு மாதிரி ஒரு நீர்க்கட்டி இருந்துச்சு. அதை ஆபரேஷன் பண்ணி நீக்குறதுக்காக, குழித்துறை அரசு மருத்துவமனைக்குப் போனேன். ஆபரேஷன் தியேட்டருக்குள் போகிற வரை பேசிச் சிரிச்சிட்டு இருந்த என் மனைவியை, அப்புறம் நான் அலங்கோலமாத்தான் பார்த்தேன். ஆபரேஷன்ல 'மூளை நரம்பு அறுந்து மூளை செயலிழந்து போயிருச்சு’னு சொன்னாங்க. பல மாசமா ஒவ்வொரு ஆஸ்பத்திரியா ஏறி இறங்கிட்டு இருக்கேன். எந்த முன்னேற்றமும் இல்லை. என் இரண்டு குழந்தைகளையும் கவனிக்க ஆள் இல்லாம ஊர்ல தெரிஞ்சவங்க, நண்பர்கள் வீட்டுல வெச்சுப் பார்த்துட்டு வர்றேன். இவ்ளோ நடந்திருக்கு... ஆனா, 'தப்பு நடந்தது உண்மைதான். அதுக்குக் காரணமானவங்க இவங்கதான்’னு இதுவரை ஒரு சின்ன விளக்கம்கூட வரலை. முதல்வர் கொடுத்த நிவாரண நிதியை வெச்சு ஏதோ சமாளிச்சுட்டு இருக்கேன்!'' என்று வெடித்து அழுகிறார் சுப்பிரமணியன்.

இப்படி இன்னும் பலப் பல உதாரணங்கள்... ஆனால், அவையல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் 'அம்மா உணவக’ங்களே சுத்தம் சுகாதாரத்துடன், வாடிக்கையாளர் மனம் கோணாமல் நடக்கும்போது, உயிர்காக்கவேண்டிய அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலானவற்றின் நிலை ஏன் தரம் தாழ்ந்தே இருக்கிறது!? அடிப்படை வசதிக் குறைபாடுகள், மருத்துவர்களின் அலட்சியம், தவறான சிகிச்சை... என எல்லாவிதத்திலும் நோயாளிகள் பாதிக்கப்படுவது ஏன்?

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

என்னதான் பிரச்னை?

அரசு மருத்துவமனைகள் செயல்பாடு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களைப் பெற்று அதன் அடிப்படை யில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கும் ஆனந்த் குமார் அடுக்கும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

''தமிழகம் முழுக்க சராசரியாக தினமும் 2.5 லட்சம் மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். மருத்துவ மனைகளில் உயிர்காக்கும் கருவிகளும் உபகரணங்களும் மிகவும் அவசியம். ஆனால், குறைமாத சிசுக்களைப் பாதுகாக்கும் இன்குபேட்டர்களே பற்றாக்குறையில் இருக்கின்றன. முறை வைத்து சிசுக்களை இன்குபேட்டரில் பாதுகாக்கும் நிலைதான் உள்ளது. 2.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் தலைமை மருத்துவமனைகளுக்கு வெறும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்தத் தண்ணீரைக் கொண்டு கழிப்பிடம் முதல் பிரசவ அறை வரை எப்படிப் பராமரிக்க முடியும்? அதுதான் சுகாதாரக் கேட்டை உருவாக்குகிறது. ஒரு மருத்துவர் செய்யும் தவற்றை விசாரிக்க, மருத்துவர்களைக் கொண்டே குழுவை அமைப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரும்பாலும் நீதி கிடைப்பது இல்லை!'' என்கிறார் ஆனந்த் குமார்.

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

தவறுகளுக்குத் தண்டனை உண்டா?

மருத்துவமனை மற்றும் மருத்துவர்களை மையமாக வைத்து, கடந்த சில வருடங்களில் பரபரப்பு செய்திகளாகக் கவனம் ஈர்த்த சில சம்பவங்களின் தற்போதைய நிலை என்ன?

2007-ல் மணப்பாறையில் 'மதி சர்ஜிக்கல் அண்ட் மகப்பேறு மருத்துவமனை’ நடத்திவந்த மருத்துவர் தம்பதி முருகேசன்-காந்திமதி, 15 வயதுடைய தங்களின் மகன் திலீபன்ராஜைக் கொண்டு ஒரு பெண்ணுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்து, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த சம்பவம் நினைவிருக்கிறதா? அப்போதைய பரபரப்பில் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு மருத்துவர் தம்பதியையும் கைதுசெய்யப்பட்டனர். அந்த வழக்கு, இன்னும் விசாரணையில் இருக்கிறது.

ஜாமீனில் வெளிவந்த அந்த மருத்துவத் தம்பதி, அதே மணப்பாறையில் 'ஜி.கே.எம். நவீன அறுவைசிகிச்சை மருத்துவமனை’ என்ற பெயரில் இன்னொரு மருத்துவமனை தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார்கள். அந்த மருத்துவமனையைத் திறந்துவைத்தவர், அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு. தமிழகச் சுகாதாரத் துறை இணை இயக்குநரும் அந்த விழாவில் கலந்துகொண்டார். முந்தைய வீடியோ பதிவு சம்பவத்தில், இந்த மருத்துவத் தம்பதி கைதாவதற்கு அதே சுகாதாரத் துறையின் புகார்தான் காரணம்.

சில மாதங்களுக்கு முன் சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், இறந்த குழந்தையின் சடலத்தை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் தமிழ்நாடு எங்கும் அதிர்ச்சியை விதைத்தது. சம்பவத்தின் தீவிரம் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க, எலிகளைப் பிடிக்க உத்தரவிட்டு, சில நாள்களுக்கு எலிகள், பாம்புகள் எல்லாம் பிடிக்கப்பட்டன. ஆனால், அந்த மருத்துவமனையில் இன்னும் எலிகள் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. ஆனால், பார்வையாளர்களுக்கான கெடுபிடிகள்தான் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன!

சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் 'கிட்னிவாக்கம்’. யாருக்காவது கிட்னி தேவைப்பட்டால், வில்லிவாக்கத்துக்குச் சென்று ஆள் பிடிப்பார்கள். இது அரசுக்கும் தெரியும். 2004-ம் ஆண்டு சுனாமி, சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப்போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் பெண்கள் பலர் தங்கள் கிட்னிகளை விற்றார்கள். ஆனால், அதிலும் மோசடி செய்த புரோக்கர்கள், கிட்னிகளைக் கவர்ந்துகொண்டு பணம் தராமல் ஏமாற்றினார்கள்.

அப்போதைய கமிஷனர், ''29 மீனவப் பெண்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது. சென்னையில் ஐந்து மருத்துவமனைகளும், மதுரையில் மூன்று மருத்துவமனைகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்றார். சென்னை திருவொற்றியூர் சுனாமி நகர் கிட்னி திருட்டையொட்டி 13 மருத்துவமனைகள் விசாரணை வளையத்தினுள் கொண்டுவரப்பட்டு, அவற்றின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டன. அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைவரும் தப்பினர்.

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

இப்போது கிட்னி திருடர்கள் சென்னை கடற்கரையில் இருந்து தங்களின் முகாமை நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு மாற்றியிருக்கிறார்கள். நோயாளிகளிடம் இருந்து ஐந்து லட்சம் வரை பணம் பெறும் இந்த புரோக்கர்கள், ஏழைகளுக்கு சில ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து கிட்னியை எடுத்துக்கொள்கிறார்கள். கிட்னி ஒன்றுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் பெறும் புரோக்கர் மற்றும் மருத்துவர்களை, தருமபுரியில் கைதுசெய்தார்கள் காவல் துறையினர். ஆனால், இந்த புரோக்கர்கள் எல்லாம் தூண்டிலில் வைக்கப்பட்ட இரைகள்தான். சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துவிட, கிட்னிகளைத் தின்று வாழும் மருத்துவத்

திமிங்கிலங்கள் சுதந்திரமாக இன்னும் வலம் வருகின்றன.

செவிலியர்களின் சேவையைக் குறை சொல்லாதீர்கள்!

அரசு மருத்துவமனைகள் தரப்பில், விளக்கமாக யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. இந்த நிலையில், மருத்துவமனை செவிலியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி பேசினார் செவிலியர் ரவி.

''நிதி பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை, தினமும் அதிகரிக்கும் நோயாளிகள்... என பல சங்கடங்களையும் தாண்டி அரசு மருத்துவ மனைகள் பெரும்பாலானவர்களுக்குச் சேவை செய்ய முடிகிறது என்றால், பிரதிபலன் எதிர்பாராமல் பணியாற்றும் செவிலியர்களே மிக முக்கியமான காரணம். ஒவ்வொரு நர்ஸும் 10 நர்ஸ்கள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பார்க்கிறார்கள். ஒரே ஒரு நர்ஸை மட்டுமே கொண்டு ஆயிரக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்குகின்றன. தொடர்ச்சியாக 18 நாள்கள் விடுமுறையே இல்லாமல் இரவு- பகலாக வேலை செய்த நர்ஸ்களும் உண்டு.

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு என நியமிக்கப் பட்ட மருத்துவர்கள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்தால், எதற்காக இந்த நர்ஸ்கள் பிரசவம் பார்க்க வேண்டும்? நர்ஸ்களுக்கு சுமார் 7,700 ரூபாய்தான் ஊதியம். அதுவும் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். சரி, அதைக்கூட சமாளித்துக்கொள்ளலாம் என்றால், பாலியல் தொல்லைகள் பெரும் கொடுமை. நர்ஸ்கள் தங்கள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக முனகினால்கூட, அவர்களைக் கண்காணாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்துவிடுகிறார்கள். ஆக, ஊழியர் களைக் குறை சொல்லாமல் அடிப்படைப் பிரச்னைகளைச் சரி செய்தாலே, அரசு மருத்துவ மனைகளின் சேவைத் தரம் பன்மடங்கு பெருகும்!'' என்கிறார் ரவி.

ஏழைத் தமிழன் என்றால் கிள்ளுக்கீரையா?

சுகாதாரம் இல்லாத குடிநீர், தரம் இல்லாத ரேஷன் அரிசி, மின்வெட்டுப் புழுக்கம், அடிப்படை சுகாதாரம் இல்லாத குடிசைப் பகுதிகள், அனைவருக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுக்காதது... என அடிப்படையான வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்காத அரசாங்கம், அந்த எளிய மக்களின் மருத்துவ வசதியையும் இந்த அளவுக்கு அலட்சியத்தோடு எதிர்கொள்வது என்ன நியாயம்?

''நிவர்த்திசெய்து வருகிறோம்!''

சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

ட்டுமொத்த மருத்துவத் துறையில் நிலவும் குறைபாடுகள்  தொடர்பாக, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனை தலைமைச் செயலகத்தில் சந்தித்தேன்.

''பிறக்கும்போது இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் பிரசவத்தின்போது இறந்துபோகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை குறைந்து, இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 2011-ம் ஆண்டு பதிவின்படி 1,000 குழந்தைகள் பிறந்தால், அதில் 22 குழந்தைகள் மட்டுமே தமிழகத்தில் மரணிக்கின்றன. இந்த அளவு இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு இரண்டாவது இடம். வியக்கத்தக்க நடவடிக்கைகள் மூலம் இறப்பு விகிதத்தைக் குறைத்து முதல் இடம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

2011-12ம் ஆண்டுகளில் தாய் இறப்பு நிகழ்வுகள் 767-ஆகப் பதிவாகியிருக்கின்றன. இதுவும் குறைவுதான். ஆனால், இது குறைவு என்று திருப்தியடையாமல் இந்த இரண்டு இறப்புகளுமே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதுதான் எங்களுடைய பணி. லட்சக்கணக்கானோர் புற நோயாளிகளாக வந்து செல்லும் அரசு மருத்துவமனைகளில், ஆங்காங்கு இதுபோல நடக்கும் நிகழ்வுகளில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.  

மருத்துவத் துறையில்  சுகவீனம் ஆனவர் இறந்துபோவதை எந்த மருத்துவரும் விரும்ப மாட்டார். ஒரு நோயாளி இறந்துபோனால் அது மருத்துவருக்கு மன வேதனையை அளிக்குமே தவிர, மகிழ்ச்சியை அளிக்காது. ஒரு சிலர் தவறு செய்திருந்தால், விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோக, மருத்துவமனை கட்டமைப்புகள் தொடர்பாக அதாவது பணியாளர்கள், உபகரணங்கள், கட்டடங்கள், படுக்கை வசதிகள்... என 50 விதமான தேவைகளைப் பட்டியல் எடுத்து அதை விரைந்து நிவர்த்திசெய்து வருகிறோம்.''

''தமிழகத்தில் தரமான சிகிச்சை நிச்சயம்!''

ருத்துவத் துறையில் நிலவும் குறைபாடுகள், பிரசவ மரணங்கள், செவிலியர்கள் மீதான பாலியல் தொல்லைகள் பற்றி பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் கேட்டேன்.

''வட இந்திய மாநிலங்களை ஒப்பிடும்போது, தரமான சிகிச்சை கிடைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் சில புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டு, 'குழந்தை இறப்பு விகிதமும் கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு விகிதமும் குறைந்திருக்கிறது’ என்றார். அதோடு, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகளுடன்  ஐந்து மருத்துவர்களோடு 24 மணி நேரமும் இயங்குகின்றன. கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியில் இருப்பார்கள். மீதி நேரங்களில் செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். பணி நேரத்தில் அவர்கள் இல்லை என்றால், 104 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தகவல், மருத்துவ ஆலோசனை, புகார்கள்... என எல்லாவற்றுக்கும் உடனே இந்த எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம்.

செவிலியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சில வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், விரைவில் காலிப் பணியிடங்களுக்கு செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஊதியம் தொடர்பாக சில இடங்களில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். பாலியல் புகார்களில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது நாங்கள் கருணை காட்டுவதே இல்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி இதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்'' என்றார் குழந்தைசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism