Published:Updated:

வாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்!

வீ.கே.ரமேஷ், ஏ.ராம், மா.அ.மோகன் பிரபாகரன்படங்கள்: க.தனசேகரன், கே.குணசீலன், ரமேஷ் கந்தசாமி

வாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்!

வீ.கே.ரமேஷ், ஏ.ராம், மா.அ.மோகன் பிரபாகரன்படங்கள்: க.தனசேகரன், கே.குணசீலன், ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

2014  நாடாளுமன்றத் தேர்தல்... நிச்சயம் இந்திய அரசியல் வரலாற்றில் வித்தியாசமான ஒரு தேர்தல்!

தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி அலையில் மோடி என்கிற கட்டுமரம், கூட்டணிக் கட்சித் துடுப்புகளின் உதவியுடன் எப்படியும் கரை ஏறிவிடும் என்றே பலரும் கணித்திருக்க, 'தனி மெஜாரிட்டி’ என அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் நரேந்திர மோடி. இது பா.ஜ.க. முகாமே எதிர்பாராத முடிவு என்பதற்கு, தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்குச் சற்று முன்னர் வரைகூட, 'ஆட்சியமைக்க எந்தக் கட்சியுடனும் கூட்டணிக்குத் தயார்’ என்ற பா.ஜ.க. பிரபலங்களின் அறிவிப்பே சாட்சி.

வாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய அளவில் இந்தக் காட்சி. தமிழகத்திலோ, முற்றிலும் வேறு காட்சி. 70-க்குப் பிறகான சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு இடையில்தான் நேரடிப் போட்டி இருக்கும். இந்த இரு அணிகளிலும் இடம் கிடைக்காத கட்சிகள், பெயரளவுக்கு 'மூன்றாவது அணி’ என்று களத்தில் நிற்கும். ஆனால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் கண்டது முற்றிலும் வித்தியாசமான களம்.

அ.தி.மு.க தனித்துக் களம் இறங்க, மிகச் சொற்ப கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி சேர, கையறு நிலையில் காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் தனித்து நிற்க, பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி பரபரப்பு கிளப்ப... தமிழகத்தில் ஐந்து முனைப் போட்டி உண்டானது. அதோடு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 'நோட்டா’வுக்கு எனப் பிரத்யேக பட்டன் வைக்கப்பட, அதுவே ஆறு முனைப் போட்டியை உண்டாக்கியது.

இப்படியான தேர்தல் களம், புது அனுபவம்தான். வாக்கு வங்கி, வாக்குப் பிரிப்புகளை முன்கூட்டியே அனுமானிக்க முடியாத இந்தக் களத்தில் எடுக்கப்பட்ட தேர்தல் சர்வேக்களிலும் ஏக வித்தியாசம்.

இந்தப் பின்னணியில்தான் வாசகர்களுக்குத் தேர்தல் முடிவுகளைக் கணிக்கச் சொல்லி போட்டி வைத்திருந்தோம். கடினமான சவாலாக இருக்கும் என்பதால், பரிசுத்தொகையை ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தினோம். மேலும், விகடன் தேர்தல் போட்டிகளில் முதல்முறையாக ஆன்லைன் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மூலம் கணிப்புகளைப் பதியவும் ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால், நிலவரம் எத்தனை கலவரமாக இருந்தாலும், சளைக்கவில்லை விகடன் வாசகர்கள்! பற்பல கணிப்புகளுடன் 18,743 கூப்பன்களை அனுப்பி, மலைக்கவைத்து விட்டார்கள். அத்தனை தேர்தல் கூப்பன்களையும் மிகக் கவனமாகப் பரிசீலித்தோம். அதில் நாம் உணர்ந்த விஷயங்கள் இங்கே...

பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கிட்டத்தட்ட 75 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் கணித்திருந்தார்கள்.

தமிழகத்தில் அ.தி.மு.க அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்திருந்தவர்கள்கூட, தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றிப் பெறாமல், இப்படிப் படுதோல்வி அடையும் என்று குறிப்பிடவில்லை. தமிழகத்தில் 37 இடங்களை அ.தி.மு.க கைப்பற்றும் என்று மிகவும் சொற்பமான கணிப்புகளே இருந்தன. கிட்டத்தட்ட 90 சதவிகிதக் கூப்பன்களில், 'வைகோவுக்கு வெற்றி’ என்றும், 'அன்புமணி ராமதாஸுக்குத் தோல்வி’ என்றுமே கணிப்புகள் பதியப்பட்டிருந்தன. ஆனால், தேர்தல் முடிவு வேறாக இருந்தது. சரிபாதி கூப்பன்களில் சுப.உதயகுமாரன், கார்த்திக் சிதம்பரம், சுதீஷ் ஆகியோருக்குத் தோல்வி என்றும் கணிப்புகள் இருந்தன. இதில் மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், தி.மு.க கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்திருந்த வாசகர்கள்கூட, 'ஆ.ராசா தோற்றுவிடுவார்’ என்று குறிப்பிட்டிருந்ததுதான்!

ரி... 18,743 கூப்பன்களில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற வெற்றியாளர்கள் யார்?

''அ.தி.மு.க-வுக்கு எதிரா அதிருப்தி இல்லை!''

இந்தியா மற்றும் தமிழகத்தின் வெற்றி-தோல்வி நிலவரத்தை கிட்டத்தட்ட மிகச் சரியாகக் கணித்து

94 மதிப்பெண்களுடன் முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் ஈரோடு மாவட்டம், கலிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வென்றிருக்கிறார். இவர் ஆன்லைனில் தன் கணிப்புகளைப் பதிந்திருந்தார்.

'தமிழகத்தில் அ.தி.மு.க 37 இடங்களைக் கைப்பற்றும்’ என்று கணித்த மிகச் சில வாசகர்களில் பாலசுப்ரமணியமும் ஒருவர். வைகோவுக்கு வெற்றி என்ற கணிப்பும், தயாநிதி மாறன், எல்.கே.சுதீஷ் ஆகியோரின் வாக்கு வித்தியாசக் கணிப்புகளே அவருக்கு ஆறு மதிப்பெண்களைக் குறைத்துவிட்டது.

வாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்!

''என் வயசு 42. நான் 17 வயசுல இருந்து விகடன் வாசகன். விகடனின் எல்லாத் தேர்தல் போட்டிகளிலும் கலந்திருக்கேன். ஆனா, இப்பதான் முதல் தடவையா ஜெயிக்கிறேன்... அதுவும் முதல் பரிசு!'' என்று பூரிக்கிறார் பாலசுப்ரமணியம்.

ஈழப் பிரச்னை, 2ஜி ஸ்பெக்ட்ரம்... இந்த இரண்டு விவகாரங்கள் காரணமாக காங்கிரஸ், தி.மு.க மேல சரிசமமான அதிருப்தி இருந்தது. அதுதான் 2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவான முடிவைக் கொடுத்தது. எதிர்க்கட்சி அந்தஸ்துகூடக் கிடைக்காத மோசமான தோல்வி கிடைச்சது தி.மு.க-வுக்கு. ஆனா, அதுக்கப்புறமும் மக்கள் மத்தியில் அதிருப்தி குறையிற மாதிரி தி.மு.க எதுவுமே பண்ணலை. அண்ணன்-தம்பி பிரச்னைக்குப்

பஞ்சாயத்து பண்ணவே அவங்களுக்கு நேரம் சரியா இருந்தது. இது அ.தி.மு.க-வுக்குச் சாதகமான அம்சமா அமைஞ்சிருச்சு. மூணு வருஷ ஆட்சியில், மக்களுக்கு அ.தி.மு.க அரசாங்கம் மேல பெரிய அளவில் அதிருப்தி இல்லைனும் நினைச்சேன். இதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்துதான் குறைஞ்சது

37 தொகுதிகளில் அ.தி.மு.க ஜெயிக்கும்னு கணிச்சேன். அதை நான் சொன்னப்போ, யாருமே நம்பலை. இதோ... இப்ப நம்பித்தானே ஆகணும்!'' - உற்சாகமாகச் சீட்டியடிக்கிறார் பாலசுப்ரமணியம்.

''பதிலுக்கு க்ளு கொடுத்துட்டு, பரிசும் கொடுக்குறீங்களே!''

ரண்டு மதிப்பெண்களில் முதல் இடத்தைத் தவறவிட்டு 92 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்திருக்கிறார் சேலம் மாவட்டம் கொரத்துப்பட்டியைச் சேர்ந்த எஸ்.பழனிராஜ்.

30 ஆயிரம் ரூபாயை வென்றிருக்கும் இவர், பிரபலங்களின் வெற்றி-தோல்வி மற்றும் வாக்கு வித்தியாசங்களை பெரும்பாலும் சரியாகக் கணித்திருந்தார். 'தி.மு.க. கூட்டணி, ஓர் இடத்தில்கூட ஜெயிக்காது’ என்று கணித்திருந்தவர், அ.தி.மு.க வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார்.

வாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்!

''நான் நாமக்கல்ல ஒரு பூக்கடையில் வேலை பார்க்கிறேன். விகடன், ஜூ.வி. ரெண்டு புத்தகங்களையும் தொடர்ந்து வாசிச்சாலே, தமிழக அரசியல் நிலவரத்தைக் கணிச்சிரலாம். தேர்தல் ஜுரம் ஆரம்பிச்சதுல இருந்து, கூட்டணி பலம், தொகுதி நிலவரம், கருத்துக் கணிப்புனு நீங்களே நிறைய க்ளூ கொடுத்துட்டு, இப்போ பதில் சொன்னதுக்குப் பரிசும் கொடுக்கிறீங்களே!'' என்று சிரித்தவர் சட்டென நெகிழ்வான குரலில் பேசுகிறார்.

''என் மனைவி ருக்மணிக்கு 10 வருஷம் முன்னாடி மனநிலை பாதிச்சது. தொடர்ந்து வைத்தியம் பார்த்துட்டு வர்றேன். நிறையப் பணத் தேவை இருக்கு. ஆனாலும், விகடன் கொடுக்கும் இந்தப் பரிசுத்தொகையை நான் செல வழிக்க மாட்டேன். அப்படியே வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு, கடைசி வரைக்கும் எனக்கும் விகடனுக்குமான பந்தமாக நினைச்சு அதைப் பாதுகாப்பேன்!  இந்த விஷயத்தை நான் மனைவி, மகள்கிட்டகூட இப்போ சொல்ல மாட்டேன். விகடன்ல போட்டோவோட நியூஸ் வந்த பின்னாடி, அதைக் காமிச்சு அவங்களை ஆச்சர்யப்படுத்தணும். ரொம்ப சந்தோஷப்படுவாங்க!'' என்கிறார் பூரிப்பாக.

''எல்லாமே ஒரு ஃபார்முலாதான்!''

'35 இடங்கள் அ.தி.மு.க-வுக்கு. கன்னியாகுமரியை பா.ஜ.க-வும், தருமபுரியை பா.ம.க-வும் கைப்பற்றும்’ என்று சரியாகக் கணித்து 91 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும், 20 ஆயிரம் பரிசுத்தொகையையும் வென்றிருப்பவர் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்த எஸ்.இராஜேந்திரன்.

''நான் 40 ஆண்டு கால விகடன் வாசகர்.ஜூனியர் போஸ்ட் தொடங்கிப் பெரும்பாலான விகடன் குழும இதழ்களில் எழுதியிருக்கேன். தேர்தல் முடிவுகளைக் கணிக்கிறது ஒரு ஃபார்முலாவுக்குள் அடங்கும் வேலைதான். தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்கு 32 சதவிகிதம், தி.மு.க-வுக்கு 28 சதவிகிதம், பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 25 சதவிகிதம், நடுநிலையாளர்களின் வாக்குகள் 15 சதவிகிதம்... இதுதான் இந்தத் தேர்தலுக்கான கணக்கு.

வாசகர் தேர்தல் போட்டி முடிவுகள்!

ஒரு ஏரியாவில் 1,000 வாக்குகள் இருக்கிறதா வைச்சிப்போம். அதில் அ.தி.மு.க-வுக்கு 400, தி.மு.க- வுக்கு 300, மத்த கட்சிகளுக்குக் கூட்டணி பலத்தின் அடிப்படையில் 200 வாக்குகள்னு பிரிச்சுக்கிட்டா, நடுநிலையான 100 வாக்குகள் யாருக்கு விழுதோ, அவங்கதான் ஜெயிப்பாங்க. இந்தத் தேர்தலில் நடுநிலையான மக்களின் ஓட்டு அதிருப்தியை அதிகம் சம்பாதிக்காத அ.தி.மு.க-வுக்குச் சேரும்னு கணிச்சேன். அதுக்குத்தான் இந்த மூணாவது பரிசு கிடைச்சிருக்கு. ரொம்பச் சந்தோஷமா இருக்கு. விகடனுக்கு நன்றி!''

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.

போட்டியில் பங்கெடுத்த அனைத்து வாசகர்களுக்கு நன்றிகளும், அடுத்த தேர்தல் போட்டிக்கான அட்வான்ஸ் வாழ்த்துகளும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism