Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

விஜய்க்கு சவால்விடும் காஜல்!

நானே கேள்வி... நானே பதில்!

விஜய்க்கு சவால்விடும் காஜல்!

Published:Updated:

''தமிழகத்தில் சிலை வைக்கப்படாத தலைவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?''

''தமிழகத்தில் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களுக்கு, சென்னையிலோ தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலோ ஒரு சிலைகூட வைத்த மாதிரி எனக்கு நினைவில்லை. அது சரி, 'ஓமந்தூரார் யார்?’ என்று கேட்கும் தலைமுறையினருக்கு இது ஒரு குற்றமாகத் தெரியுமா என்ன?''

- ஜி.குப்புசுவாமி, சங்கராபுரம்.

''இக்கரைக்கு அக்கரை பச்சைதானுங்களா?''

''சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக மக்களுக்கு அளித்த அறிவுரை என்ன தெரியுமா..? 'தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தாய்மொழியைத் தன் உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள்!’ - இது எப்படி இருக்கு!''

- சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை.

நானே கேள்வி... நானே பதில்!

''சமீபத்தில் காணாமல்போனவர் யார்?''

''ப.சிதம்பரம்.''

- சிவா,  மதுரை.

''புள்ளிவிவரங்களை நம்பலாமா?''

''உண்மையா, பொய்யா தெரியவில்லை. புள்ளிவிவரக் கதை ஒன்று சொல்வார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் பிரதமராக இருந்த ஜெனரல் ஸ்மட்ஸுக்கு நாடாளுமன்றத்தில் பேச சில புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டன. தனது செயலாளரை அழைத்து, 'நாளைக்குள் எனக்கு இந்தப் புள்ளிவிவரங்கள் தேவை. அதை வைத்து எதிர்க்கட்சிகளைத் திணறடிக்க வேண்டும்’ என்றார். திகைத்துப்போன செயலாளர், 'சார் இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க, அரசாங்கத்துக்கே குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்’ என்றார். 'நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ... அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளை எனக்குப் புள்ளிவிவரங்கள் தேவை’ என்று சொல்லிவிட்டார் ஸ்மட்ஸ். ஆனால், குறித்த கெடுவுக்குள் செயலாளரால் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடியவில்லை.

மறுநாள் பாராளுமன்றம் கூடியது. செயலாளர் உதறலுடன் அமர்ந்திருக்க, புள்ளிவிவரங்களை அள்ளி வீசி அனைவரையும் வியப்படைய வைத்தார் ஸ்மட்ஸ். பாராளுமன்றக் கூட்டம் முடிந்ததும் ஸ்மட்ஸிடம், 'எப்படி சார் இவ்வளவு புள்ளிவிவரங்களை ஒரே ராத்திரியில் சேகரிச்சீங்க?’ என்று கேட்டார் செயலாளர். ஸ்மட்ஸ் சிரித்தவாறே, 'இந்த விவரங்களைச் சேகரிக்க அரசாங்கத்துக்கே ஐந்து வருஷம் ஆகும்னு சொன்னீங்க. அப்படின்னா இதெல்லாம் உண்மையானு கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு 15 வருஷமாவது ஆகும். அவங்க கண்டுபிடிச்சு என்னை மடக்குறதுக்குள்ளே நிச்சயமா நான் இந்தப் பதவியில இருக்க மாட்டேனே...’ என்றார்.''

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

''சிம்ரனுக்குப் பிறகு நடனத்தில் பின்னியெடுக்கும் ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் வரவே இல்லையே..!''

''காஜல் அகர்வால் கொஞ்சம் பக்கத்தில் வருகிறாரே... டான்ஸில் பட்டையைக் கிளப்பும் விஜய்யுடன் ஆடும்போதுகூட ரொம்ப கேஷ§வலாக, முகத்தில் உற்சாக ரியாக்ஷன்களுடன் ஆடுகிறாரே. என்ன... பொண்ணு நடிக்கவும் செய்தால் டபுள் சபாஷ் சொல்லலாம்!''

- மீனாட்சி சுந்தரம், தஞ்சாவூர்.

'' 'தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றாலும், மூத்த தலைவர்கள் யாரும் மன்மோகன் சிங்கைக் குறை கூறக் கூடாது’ என்கிறாரே சோனியா?''

''அவர்களுக்குத் தெரியாதா, 'வில் எது... அம்பு எது?’ என்று!''

- தீ.அசோகன், சென்னை.

''ஒருவேளை, ஜெயலலிதா பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்திருந்தால், தமிழகத்தின் முதல்வராக அவர் யாரை நியமித்திருப்பார்?''

''ஜெயலலிதா பிரதமராகப் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்வதற்கு முன்னரே, ஏழெட்டு பேர் முதல்வராக அறிவிக்கப்பட்டு, 'மாஜி முதல்வராகவும்’ ஆகியிருப்பார்கள். இதில் யாரைக் குறிப்பிட்டுச் சொல்வது!?''

- சுரா.மாணிக்கம், கந்தர்வகோட்டை.

'' 'ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அனைவரும் எதிர்பார்க்கும் தீர்ப்பு விரைவில் வரும்’ என்கிறாரே கருணாநிதி?''

''2ஜி அலைக்கற்றை ஊழலிலும், அனைவரும் எதிர்பார்க்கும் தீர்ப்பு வருமா தலைவா?''

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

எல்லோரும் எழுதலாம்! கேள்வியும் பதிலும் உங்களுடையதே. 'நானே கேள்வி - நானே பதில்’ என்று தலைப்பிட்டு தபாலில் அனுப்பவும்!