Published:Updated:

‘எங்கள் பெண்கள் எங்கே?’

ஞா.சுதாகர்

‘எங்கள் பெண்கள் எங்கே?’

ஞா.சுதாகர்

Published:Updated:

'எங்கள் பெண்களைத் திரும்பக் கொண்டு வாருங்கள்’ என்ற 'ஹேஸ்டேக்’ இந்த மாதம் முழுவதும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து பிரதமர் ஜேம்ஸ் கேமரூன், பாகிஸ்தானின் மலாலா என்று உலகின் முக்கால்வாசிப் பேர் இந்த வாசகம் அடங்கிய அட்டையுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டனர். அவர்கள் எந்தப் பெண்களை திரும்பக் கொண்டுவரச் சொல்கிறார்கள்?

நைஜீரியா, போர்னோ மாநிலத்தின் சிபோக் என்ற ஊரில் உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி, இந்தப் பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதக் கும்பல் ஒன்று, அங்கு இருந்த சுமார் 300 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. அவர்களில் சுமார் 50 பேர் வரை தப்பித்து வந்துவிட்டனர். கடத்தப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் மீதம் உள்ள 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் என்ன ஆனார்கள் என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

‘எங்கள் பெண்கள் எங்கே?’

இந்தக் கடத்தல் செய்தி நைஜீரியாவில் இருந்து மெள்ளப் பரவி, சமூக ஊடகங்கள் வழியே முக்கியத்துவம் பெற்று, இப்போது உலகத் தலைப்புச் செய்தியாகிவிட்டது. நைஜீரியாவுக்கு உதவுவதற்காகத் தனது போர் விமானங்களையும் உளவு அதிகாரிகளையும் அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கும் நிலையில், கடத்தியது யார்? எதற்காகக் கடத்தினார்கள்? என்ற கேள்விகள் முக்கியத்துவம் பெருகின்றன.

போக்கோ ஹராம் (Boko Haram)... இதுதான் கடத்திய தீவிரவாத அமைப்பின் பெயர். 'மேற்கத்தியக் கல்விமுறை ஒரு பாவம்’ என்பது இதன் பொருள். ஆப்பிரிக்க நாடுகள், இஸ்லாம் சட்டத்திட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வேண்டும் என்பதும், அதற்குத் தடையாக உள்ள மேற்கத்தியக் கல்விமுறையை ஒழிக்க வேண்டும் என்பதும் இவர்களின் பிரதான நோக்கம். இவற்றுடன், தாலிபானிசத்தின் எல்லா அடிப்படைவாதக் கூறுகளும் இவர்களிடம் உண்டு. மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் திடீர் தாக்குதல் நடத்துவது, பள்ளிகளில் புகுந்து மாணவிகளைக் கடத்திச் செல்வது போன்ற கொடூரங்களை அடிக்கடி இந்த அமைப்பினர் செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு, நைஜீரியாவின் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த அமைப்பு, இப்போது பெரும் அளவில் வளர்ந்துள்ளது.

கடத்தலுக்குப் பிறகு 'போகோ ஹராம்’ தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ள ஒரு காட்சிப்பதிவில், சுமார் 100 மாணவிகள் குர்-ஆன் ஓதும் காட்சி இருக்கிறது. ''இவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களையும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என்றால், சிறைகளில் உள்ள எங்கள் சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும்'' என்று அபூபக்கர் பேரம் பேசும் காட்சி உள்ளது.

இது ஓர் எல்லை தாண்டிய பிரச்னை ஆகிவிட்டதால், இப்போது அமெரிக்கா வெளிப்படையாகத் தலையிட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிச்சம் இருக்கும் இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு அங்கு நுழைவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டும். போகோ ஹராமை அத்தகைய வாய்ப்பாக எடுத்துக்கொண்டது. ஆனால் ''போகா ஹராம்’ என்பது தற்செயலாக உருவானது அல்ல’ என்கின்றனர் உலக அரசியல் பார்வையாளர்கள்.

''கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா, பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. வளமிக்க புதிய பகுதிகளை உடனடியாகக் கண்டடைய வேண்டும் என்ற நிர்பந்தம் அமெரிக்காவுக்கு. சில ஆண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதுடன் அமெரிக்காவின் உதவி அதிரடியையும் இணைத்துப் பாருங்கள். இந்தத் தலையீடு, எதிர்காலத்தில் விஸ்தரிக்கப்படும் வாய்ப்பைப் புரிந்துகொள்ள முடியும்'' என்கின்றனர்.

மதம், எண்ணெய் வளம், அமெரிக்கா... ஆபத்தான கூட்டணிதான்!