Published:Updated:

சண்முகராஜாவின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

நா.சிபிச்சக்கரவர்த்தி

சண்முகராஜாவின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:

''ஜாலி கேள்விகளா..? என்னை வைச்சு ஃபுல் ஜாலி பண்ணப்போறீங்க... அதானே!'' - தயாரானார் 'சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமரசாமி.

''என்ட மோள் ஸ்கூலுக்குப் போயிருக்காளே..!'' என்றார் அந்தப் பிரபலத்தின் அம்மா. மாலை அந்தப் பிரபலமே தொடர்புக்கு வந்தவர், ''ஐயோ... இப்பத்தான் ஸ்கூல்லயும் டெஸ்ட் எழுதிட்டு வந்தேன். நீங்களுமா?'' என்று சந்தோஷமாக அலுத்துக்கொண்டார் அவர்... நடிகை லட்சுமி மேனன்.

''இப்பதான் நியூஸ் பேப்பர் படிச்சிட்டு வந்தேன். ஆனா, நீங்க தலைப்புச் செய்திகள் இல்லாம, 'தலைப்பு மறைவு’ச் செய்திகளாக் கேட்பீங்களே... சமாளிப்போம்!'' என்று குஷியாகிறார் 'பட்டிமன்றம்’ ராஜா.

''ஜாலியாப் பேசணுமா? எனக்கு தமிழ்நாடு முழுக்க ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. இப்ப விஜயகாந்த் மகன் படத்துல நடிச்சிட்டு இருக்கேன். என்னது... இதுலாம் வேண்டாமா? ஓ... நீங்க ஜாலி கேள்விகள் கேட்கப்போறீங்களா? சரி கேளுங்க..!'' வேறு யார்... நம்ம 'பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்தான்.

''ஜி.கே. கொஸ்டீன்ஸா..? என்னை கேம்ல சேர்த்துக்காதீங்க... ப்ளீஸ்!'' - கடைசி வரை 'எஸ்கேப்’ கோரிக்கையுடனே நடிகை ஷிவதா நாயர்.

சண்முகராஜாவின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

''சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் பெற்றது?''

பதில்: ''கன்னியாகுமரியில் மட்டும் டெபாசிட் பெற்றது!''

நலன் குமரசாமி: ''எந்தத் தொகுதியிலுமே டெபாசிட் வாங்கலைனு நினைக்கிறேன்'' என்று கொஞ்சம் யோசித்தவர், ''கன்ஃபர்ம்ஜி... லாக் பண்ணிக்கலாம்!''

லட்சுமி மேனன்: சிரித்துக்கொண்டே... ''தெரியலீங்கண்ணா!'' (என்னாது... அண்ணாவா?)

ராஜா: ''38 தொகுதில டெபாசிட் போயிடுச்சு. கன்னியாகுமரில வசந்தகுமார் மட்டும்தான் டெபாசிட் வாங்கினார்!''

'பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்: 'தமிழ்நாடு முழுக்க காங்கிரஸுக்கு டெபாசிட் காலி. அட... இந்தியா முழுக்க ஆட்சியே காலி!''

ஷிவதா நாயர்: 'டெபாசிட்னா என்ன? (விளக்கவும்) ஓஹோ... இவ்ளோ இருக்கா! ஏ.டி.எம்.கே. 37 சீட் ஜெயிச்சாங்கனு தெரியும். ஆனா, காங்கிரஸ் பத்தி எந்த ஐடியாவும் இல்லியே!''

''இயக்குநர் மிஷ்கினின் இயற்பெயர் என்ன?''

பதில்: சண்முகராஜா.

நலன் குமரசாமி: யோசிக்கிறார்... ''முருகனா? இல்லையா... ஏதாவது க்ளு கொடுங்கஜி!'' 'முருகன் சம்பந்தப்பட்ட பெயர்தான்’ என்றதும்... ''க்கும்... க்ளு கொடுத்து என்ன பிரயோஜனம்? முருகன் பேருதான் டன் கணக்குல இருக்கே. வேல்முருகனா, சரவணனா, பழனியா? அட, தெரியலைங்க!'' - பதிலைச் சொன்னதும் ''நல்ல பேர்ல! ஒரே ஷாட்ல கண்டுபிடிச்சிடலாம்... அது மிஷ்கின் படம்னு. அந்த அளவுக்குச் செம கிராஃப்ட் அவரோடது!''

லட்சுமி மேனன்: ''அப்போ அது அவர் ஒரிஜினல் பேர் இல்லையாண்ணா?'' (என்னாது?)

ராஜா: ''எனக்கு ரொம்பக் கஷ்டமான கேள்விங்க! மிஷ்கின் நல்ல இயக்குநர். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ பார்த்தேன். நல்லா இருந்தது. ஆனா, அவர் ஒரிஜினல் பேரு தெரியலையே.''  

'பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்: ''யாரு தம்பி... டைரக்டர் மிஷ்கினா? ஹஹ... யார்கிட்ட? அவர் ஒரிஜினல் பேரும் மிஷ்கின்தான்!''

ஷிவதா நாயர்: ''நடிகர்கள் ஒரிஜினல் பேரு கேட்டிருந்தாக்கூட டிரை பண்ணியிருப்பேன். இதுக்குப் பதில் தெரியாது!''

சண்முகராஜாவின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

'''அகாதுகா’ என்று சென்னை வட்டாரத்தில் புழங்கப்படும் வார்த்தையின் அர்த்தம் என்ன?''

பதில்: ''ஈடுபாடு இல்லாமல் வேலை செய்பவர்களை அப்படிக் குறிப்பிடுவார்கள்!''

நலன் குமரசாமி:: ''அகாதுகாவா?'' யோசிக்கிறார்... ''வேலைக்கே ஆக மாட்டான்னு அர்த்தமா?'' 'சரி’ என்றதும், ''அப்பாடா... சும்மா ரெண்டு, மூணு தடவை மனசுக்குள்ள சொல்லிப் பார்த்தேன். இப்படித்தான் அர்த்தம் இருக்கும்னு நினைச்சேன்; தப்பிச்சிட்டேன்!''

லட்சுமி மேனன்: கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டவர், ''துகாவா... அகாவா? இப்பதான் முதல்முறையா இந்த வார்த்தையையே கேள்விப்படுறேண்ணா.'' (என்னாது?)

ராஜா: '' 'அப்பாடக்கர்’னு சந்தானம் சொல்வாரு. 'அகாதுகா’வா? தெரியலையே. சென்னை பாஷை என்னை எப்பவும் பாடாப் படுத்தும். ஒருதடவை சென்னையில விலாசம் விசாரிச்சப்ப, 'நீட்டா போ’னு சொன்னாங்க. நாம சட்டை, பேன்ட்லாம் அயர்ன் பண்ணிப் போட்டுட்டு நல்ல நீட்டாதானே இருக்கோம்னு யோசிச்சேன். 'நேரா போ’ங்கிறதைத்தான் அப்படிச் சொல்றாங்கனு அப்புறம் புரிஞ்சது. இதுல 'அகாதுகா’வுக்கு நான் எப்படி அர்த்தம் கண்டுபிடிக்கிறது?'' என்றவரிடம் பதிலைச் சொன்னதும், ''எங்க ஊர்ல இதுக்கு இணையா 'விடுமட்டை பய’னு சொல்லுவோம். வேலைக்குப் போகாம வெட்டியா ஊர் சுத்திட்டு இருக்கிற பயல்னு அர்த்தம்!''

'பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்: ''அகான்னா... அது. துகான்னா... இது. அது இது!'' என்று சொல்லி அவராகவே சிரித்துக்கொள்கிறார். ''எல்லாருக்கும் ஆறு அறிவுனா, சந்தானத்துக்கு மட்டும் ஏழு அறிவு. அதான் ரூம் போட்டு யோசிச்சு இப்படில்லாம் ஸ்லாங் பிடிப்பாரு!''

ஷிவதா நாயர்: ''இதுலாம் ரொம்ப அநியாயம்! எனக்குத் தமிழே தெரியாது. அப்படி இப்படி அட்ஜஸ்ட் பண்ணி ஓட்டிட்டு இருக்கேன். இதுல இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வேன்?''

சண்முகராஜாவின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

''காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக யாரிடம் கடிதம் கொடுத்தார்கள்?''

பதில்: ''தங்கள் ராஜினாமா கடிதங்களை காங்கிரஸ் செயற்குழுவில் சமர்ப்பித்தார்கள். ஆனால், காங்கிரஸ் காரியக் கமிட்டி, அவர்களின் ராஜினாமாவை நிராகரித்துவிட்டது!''

நலன் குமரசாமி: 'பிரணாப் முகர்ஜிகிட்ட கொடுத்திருப்பாங்களோ?' என்றவர் உடனே, ''ஐயோ... அவர் ஜனாதிபதி ஆச்சே. பதில் என்னங்க?'' பதிலைச் சொன்னதும் சிரிக்கிறார். ''அவங்க எப்படி ராஜினாமாவை ஏத்துப்பாங்க?''

லட்சுமி மேனன்: ''ஸ்கூல் படிக்கிற பொண்ணுக்கு இவ்வளவு அரசியல் தெரியுமா? சினிமால நடிச்சா, எல்லாமே தெரிஞ்சிருக்கணும்னு கட்டாயமா என்ன? ராகுல், சோனியாதான் அவங்க பார்ட்டியில் டாப் லீடர்ஸ். அவங்க யாருகிட்ட கொடுத்திருக்க முடியும்? ம்ம்ம்... ஸாரி. பதில் தெரியலைண்ணா!'' (என்னாது?)

ராஜா: ''கமல்நாத்தா இருக்கலாம். ஆனா, யாருனு தெரியலையே!'' பதிலைச் சொன்னதும், ''கட்சிக்குள்ள கட்சித் தலைவர் ராஜினாமாவை நிராகரிக்கிறதுலாம் ஒரு செய்தியாங்க!''

'பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன்: ''மோடிகிட்ட கொடுத்தாங்க!'' (சார்... உங்க அலும்பு தாங்கலை!) ''ஏன்னா, அவங்களுக்கு ஈக்வல் ஆளுனா, அது  மோடி ஒருத்தர்தானே!''

ஷிவதா நாயர்:  ''அவங்க ரெசிக்னேஷன் லெட்டர் கொடுத்தாங்கனு தெரியும். ஆனா, யாருகிட்டனு தெரியலையே! போங்க நீங்க... நான் எல்லாம் ஃபெயிலு!''