Published:Updated:

“ஒரு கண்ணு... ரெண்டு கண்ணு... தர்ட்டி கண்ணு..!”

ந.கீர்த்தனா, படங்கள்: க.பாலாஜி

“ஒரு கண்ணு... ரெண்டு கண்ணு... தர்ட்டி கண்ணு..!”

ந.கீர்த்தனா, படங்கள்: க.பாலாஜி

Published:Updated:

யதோ ஐந்து; படிப்பதோ யு.கே.ஜி. ஆனால், 'சன் சிங்கர்’ நிகழ்ச்சியில் டாப் ஸ்டாராக ஜொலிக்கிறாள் ஸ்வேதா ஸ்ரீ!

'என் வீட்டுல நான் இருந்தேனே... அவ வீட்டுல அவ இருந்தாளே...’ முதல் 'அழகிய அசுரா...’ வரை எந்தப் பாடலையும் மழலை உச்சரிப்பும் துடுக்கு நடனமுமாக அவள் ஆடும்போது, சக போட்டியாளர்களின் பெற்றோர்களும் கைதட்டி ரசிக்கிறார்கள்.

'குட்டிப் பாப்பாவை ஒரு சுட்டி பேட்டி எடுக்கலாமே’ என்று வீட்டுக்குப் போனால், வாசலிலேயே வரவேற்கிறாள் ஸ்வேதா.

''நீங்க எதுக்கு வந்திருக்கீங்கனு தெரியுமே! புக்ல என் போட்டோ போடத்தானே வந்திருக்கீங்க? நீங்க என்கிட்ட பேசுறதையெல்லாம் கதையா எழுதுவீங்களாமே! மம்மி சொன்னாங்க... எனக்கு நிறையக் கதைகள் தெரியும். நான் உங்களுக்குச் சொல்றேன். நீங்க நிறைய எழுதுங்க. ஸ்டோரி சொல்றதுக்கு முன்னாடி உங்களுக்கு சாக்லேட் தர்றேன். ஓ.கே-வா?'' என்று ஓடிச்சென்று தன் கலெக்ஷனில் இருந்து இரண்டு மென்டோஸ் எடுத்துவந்து நீட்டுகிறாள்.

ஸ்வேதாவுடன் இருந்த ஒரு மணி நேரத்தில் ஒரு விஷயம் புரிந்தது. சூப்பர் கம்ப்யூட்டர்களை விட, இப்போதைய குழந்தைகள் செம ஷார்ப். எவ்வளவு குழப்பமான விஷயத்தையும் சிம்பிளாகப் புரிந்துகொள்கிறாள் ஸ்வேதா. சில நொடிகளுக்கு மேல் எதுவும் அவளை ஆச்சர்யப்படுத்துவது இல்லை. சட்சட்டென்று மற்ற விஷயங்களில் கவனம் பதித்துச் செல்கிறாள். நான் அவளைக் கேள்வி கேட்டதைவிடவும், என்னை அவள் கேட்டதுதான் அதிகம்!

“ஒரு கண்ணு... ரெண்டு கண்ணு... தர்ட்டி கண்ணு..!”

''போட்டிகள்ல கலந்துக்க ஆரம்பிச்சதுல இருந்து, டெய்லி ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டே இருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மிஸ் பண்றேன். ('எல்லாரையும்’ என்பதை கைகளை அகலமாக விரித்துச் சொல்கிறாள்) ஆனா, ஸ்டுடியோல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. மம்மி... இன்னைக்கு ஷூட்டிங் இல்லை. ஆனா, ஏன் நான் ஸ்கூலுக்குப் போகலை?'' என்று கேட்கிறாள். ''சம்மர் வெக்கேஷன்மா'' என்று அம்மா ஹேமா சொல்லவும், ''ஓ... இப்போ ஸ்கூல் லீவு போட்ருச்சா!'' என்று சிரிக்கிறாள்.

''நான் உங்களுக்கு பாட்டு பாடிக் காட்றேன். எந்தப் பாட்டு வேணும்? 'ஊரு சனம் தூங்கிருச்சு...’ பாடவா?'' என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் பாடத் தொடங்கினாள். டிரேட்மார்க் நடனமும், 'குயிலு கருங்குயிலு... மாமன் மனக்குயிலு...’ என மாயாஜாலக் குரலுமாக அவள் பாட, பாட்டுச் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஓடி வருகிறாள் ஸ்வேதாவின் தங்கை ஆராத்யா. ஒரு வயது குட்டிச் சுட்டி அவள். இருவரும் 'டார்லிங்க்கு... டம்பக்கு...’ என கோரஸ் கச்சேரி நடத்துகிறார்கள்.

''இவ்ளோ பாட்டு எப்படிக் கத்துக் கொடுத்தீங்க?'' என்று ஹேமாவிடம் கேட்டேன்.

''கர்னாடக சங்கீதம் கத்துக்கிறா. மத்தபடி சினிமா பாட்டுலாம் நாங்க பாடச் சொல்லிக் கொடுக்கலை. அவளே மியூசிக் ஆல்பம் கேட்டுக் கேட்டு மனப்பாடம் பண்ணிப்பா. சந்தேகமா இருக்கிற வார்த்தைகளை மட்டும் என்கிட்ட கேட்பா!''

''இந்தப் புகழ் வெளிச்சம் ஸ்வேதாவோட ஆக்ட்டிவிட்டீஸ்ல ஏதாவது வித்தியாசத்தை உண்டாக்கியிருக்கா?''

“ஒரு கண்ணு... ரெண்டு கண்ணு... தர்ட்டி கண்ணு..!”

''பெரிய வித்தியாசம் எதுவும் தெரியலை. எப்பவும் இப்படித்தான் துறுதுறுனு இருப்பா. இப்போ வெளியே போறப்போ, அவளை நிறையப் பேர் அடையாளம் கண்டுபிடிச்சு விஷ் பண்றாங்க. அதான் வித்தியாசம். வெளியே போனா, 'மம்மி... அந்தப் பக்கம் எல்லாரும் என்னைத்தான் பார்க்கிறாங்க. டக்குனு பார்க்காதீங்க’னு சொல்லுவா. அப்புறம், 'இன்னைக்கு ஒரு கண்ணு, ரெண்டு கண்ணு... மொத்தம் தர்ட்டி கண்ணு பட்டிருச்சு. சுத்திப் போடுங்க’னு அவளே சொல்லுவா. எங்களுக்குக்கூட குழந்தையை ரொம்பச் சிரமப்படுத்துறோமோனு கஷ்டமா இருந்துச்சு. ஆனா, அவளுக்கு இதெல்லாம் ஒரு கஷ்டமாவே தெரியலை!''

''மம்மீ... அதான் அவங்க போட்டோஸ் எடுக்கப்போறாங்கள்ல. எனக்கு மேக்-அப் பண்ணிவிடுங்க!'' என்று தன் தாயை இழுத்துக்கொண்டு போய், கண்ணாடி முன் நின்று அலங்கரித்துக்கொள்கிறாள். அம்மா எடுத்துக் கொடுக்கும் ஆடை, பொட்டுகளை மறுத்துவிட்டு தனக்குப் பிடித்த நிறத்தில் ஆடை, வளையல், பொட்டுகளை வைத்துக்கொள்கிறாள். அடிக்கடி, 'ப்ளீஸ் மம்மி... என் இஷ்டம்போல விட்ருங்களேன். நான் பார்த்துக்கிறேன். இந்த மூடுக்கு இப்படி இருந்தாத்தான், நல்லா இருக்கும்!’ என்று அம்மாவை அதட்டி, கொஞ்சி தன் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கிறாள்.

''நான், நயன்தாரா மாதிரி போஸ் கொடுக்கவா... காஜல் மாதிரி போஸ் கொடுக்கவா?'' என்று ஸ்வேதா கேட்க, ''ஸ்வேதா ஸ்ரீ மாதிரி போஸ் கொடும்மா... அது போதும்!'' என்றேன்.

சிரித்துக்கொண்டே சொல்கிறாள் ஸ்வேதா... ''நான் குட் கேர்ள். சும்மா உங்களை டெஸ்ட் பண்ணேன். குட்டிப் பாப்பாலாம் அப்படி போஸ் பண்ண மாட்டங்கனு எனக்குத் தெரியுமே!''

விவரம்தான்!