Published:Updated:

வைல்டு க்ளிக்ஸ்

எஸ்.கலீல்ராஜா

வைல்டு க்ளிக்ஸ்

எஸ்.கலீல்ராஜா

Published:Updated:

காட்டுக்குள் விலங்குகளைப் பார்ப்பதே அரிதான அனுபவம். மனிதனை உணர்ந்த மாத்திரத்திலேயே பயத்தில் இடத்தைக் காலி செய்யும் விலங்குகளே அதிகம். விலங்குகள் நம்மைப் பார்ப்பதற்குள் கிடைக்கும் சில நொடிகளில், அவற்றை அதனதன் அழகியலோடு படம் எடுப்பதே உண்மையில் சுவாரஸ்ய சவால். எந்த விலங்கிடமும் 'ஒன் மோர் போலாமா?’ என்று கேட்க முடியாது. சில விலங்குகள் பயத்தில் நம்மைத் தாக்கக்கூட வரலாம். இத்தனை சவால் நிறைந்தது வைல்டு லைஃப் போட்டோகிராபி.

வைல்டு க்ளிக்ஸ்

1965-ம் ஆண்டு பி.பி.சி வைல்டு லைஃப் இதழ், வன உயிரினங்கள் தொடர்பான புகைப்படப் போட்டியை உலகம் முழுக்க அறிவித்தது. உலகளாவிய போட்டியாக அறிவித்தும், அப்போது 500 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் ஆந்தையின் வேட்டையைப் படம் எடுத்த டோவ்டெஸ் வெல்லுக்கு வருடத்தின் 'சிறந்த வைல்டு லைஃப் போட்டோகிராபர்’ விருது கொடுத்தார்கள். 1984-ல் லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் விருது போட்டியில் பி.பி.சி-யோடு கைகோத்தது. மியூசியத்தில் புகைப்படங்களைக் கண்காட்சியாக வைத்து பொதுமக்களை வாக்களிக்கச் சொன்னார்கள். இணையப் பயன்பாடு பரவலான பிறகு, சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை உலக மக்கள் அனைவருக்கும் வழங்கியிருக்கிறார்கள். இப்போதும் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசித்தில் 'பெஸ்ட் 50’ புகைப்பட கேலரியைப் நேரில் பார்த்து ஓட்டு போடலாம். சென்ற வருடப் போட்டியில் நேரில் ஒன்றரை லட்சம் பேரும், இணையத்தின் மூலமாக 10 லட்சம் பேரும் வாக்களித்து, பல பிரிவுகளில் சிறந்த புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உலகத்திலேயே அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படப் போட்டி என்பதால், உலக புகைப்படக்காரர்கள் இடையே இதற்குத் தனி மரியாதை!

வைல்டு க்ளிக்ஸ்
வைல்டு க்ளிக்ஸ்

2014-ம் வருடப் போட்டிக்குக் குவிந்த புகைப்படங்கள் சுமார் 42 ஆயிரம். இதில் தலைசிறந்த 50 புகைப்படங்களைத் தங்களது இணையதளத்தில் தொகுத்து மக்களின் வாக்குப் பதிவுக்காக வைத்திருக்கின்றனர்.  

இதில் வருடா வருடம் ஓர் இந்தியர் இடம் பிடிப்பது சிறப்பு. கடந்த வருடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உதய் ராய் என்பவர் எடுத்த, தாய் மீது ஏறி விளையாடும் குட்டி முதலைகளின் படம் இளையோர் பிரிவில் விருது வென்றது. இந்த வருட லிஸ்ட்டில் இருப்பவர் ரவிப்பிரகாஷ் எஸ்.எஸ் என்கிற பெங்களூருவாசி. இவர் ஒரு சாப்ஃட்வேர் இன்ஜினியர். புழு, பூச்சி, விட்டில்கள் என பிரமாண்டமான காடுகளின் சிறு உயிர்களைப் புகைப்படங்களாகப் பதிவுசெய்பவர். சிலந்தி வலையை செம வித்தியாசமான கோணத்தில் இவர் எடுத்திருக்கும் புகைப்படமும் இந்த வருடப் போட்டியில் இருக்கிறது.  

வைல்டு க்ளிக்ஸ்

மனிதனின் ஆக்கிரமிப்புக் கரங்கள் காடுகளையும் கபளீகரம் செய்துவிட்டன என்பதை உணர்த்தும் ஸ்மார்ட் போன் பார்க்கும் குரங்கு போட்டோ... ஒரு பொளேர் உதாரணம்!

www.nhm.ac.uk/visit-us/wpy/community/  என்ற சுட்டியை க்ளிக்கினால், நமது அங்காளி பங்காளிகளைக் கண் குளிரக் கண்டு ரசிக்கலாம்!