Published:Updated:

லிஃப்ட் ப்ளீஸ்!

ஞா.சுதாகர்

லிஃப்ட் ப்ளீஸ்!

ஞா.சுதாகர்

Published:Updated:

வாராவாரம் யாரையாவது அல்லது எதையாவது 'உலகப் பிரபலம்’ ஆக்குவது இணைய டிரெண்ட். அதில் இந்த வார கோட்டா... ஒரு ரோபோ!

கனடாவைச் சேர்ந்த ரோபோட்டிக்ஸ் துறை பேராசிரியர்கள் டேவிட் ஸ்மித் மற்றும் ப்ராக் செல்லர் ஆகியோர் உருவாக்கிய ஒரு ரோபோ, தன்னந்தனியாக கனடாவைச் சுற்றி வந்திருக்கிறது. அந்த ரோபோவின் பெயர் ஹிட்ச்பாட்!

ரோபோவின் பெயர்க் காரணமே அவ்வளவு சுவாரஸ்யம். சுற்றுலாவின்போது பிறரிடத்தில் வழிகேட்டு, அப்படியே அவர்களின் வாகனத்தில் லிஃப்ட் கேட்டு பயணிப்பவர்களை 'ஹிட்ச்ஹைக்கர்’ (Hitchhiker) என்று குறிப்பிடுவார்கள். உலகம் முழுக்க முன்-பின் தெரியாத நாட்டில் எந்த வழிகாட்டிக் குறிப்புகளும் முன்திட்டமும் இல்லாமல் பயணிக்கும் குழுக்கள் உண்டு. அறிமுகம் இல்லாத நாடுகளில் பரிச்சயம் இல்லாத இடங்களில் இதுபோன்ற பயணங்கள், திக்... பக்... அனுபவங்களைக் கொடுக்கும். அந்த ஹிட்ச்ஹைக்கர் ஒரு ரோபோவாக இருந்தால்... அதுவே 'ஹிட்ச்பாட்’! ரோபோ என்றதும் எந்திரன் 'சிட்டி ரோபா’ கணக்காகக் கற்பனை செய்யாதீர்கள். ஒரு பழைய வாளி, கொஞ்சம் நூடுல்ஸ் குச்சிகள், ஒரு ஜோடி காலணி, பஞ்சால் ஆன கை-கால்கள், கொஞ்சம் சாஃப்ட்வேர்.... என லோக்கல் சரக்குகளின் கலவைதான், ஹிட்ச்பாட். துறுதுறு சிறுவனின் தோற்றத்தில் இருக்கும் ஹிட்ச்பாட் 'மனிதர்கள்’ உதவியுடன் கனடாவை 6,000 கி.மீ சுற்றிவந்திருக்கிறது!

லிஃப்ட் ப்ளீஸ்!

ஹிட்ச்பாட் பயணம் பற்றிய செய்திகள் அடிபடத் தொடங்கியபோது, 'அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. அது எப்படி ஒரு ரோபோ, தானா வழி கேட்டுப் போகும், யாராவது தூக்கிட்டுப் போயிட்டா என்ன பண்றது, விபத்துல சிக்கிட்டா என்ன பண்றது?’ என ஏகப்பட்ட கேள்விகள். ஆனால், அனைத்து யூகங்களையும் ஹேஷ்யங்களையும் தகர்த்து, கனடா பயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஜூலை இறுதியில் கனடாவின் ஹாலிபாக்ஸ் நகரில் தொடங்கி, பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா நகரத்தை வந்து அடைந்திருக்கிறது ஹிட்ச்பாட். எப்படி நடந்தது இந்த அதிசயம்?

சாலை ஓரத்தில் கம்பிகளின் உதவியுடன் அமர்ந்துகொள்ளும் ஹிட்ச்பாட். அதற்கு கார் ஓட்டத் தெரியாது; நடக்கத் தெரியாது. யாராவது காரை நிறுத்தி எட்டிப் பார்த்தால், 'சார் லிஃப்ட் ப்ளீஸ்’ என்று கேட்கும். காரில் ஏற்றிக்கொண்டால் நன்றி சொல்லிவிட்டு, 'பேசிட்டே போலாமா?’ என்று விசாரிக்கும். 'எனக்கு நிறைய ஹாபி. ஹாக்கி, ஃபுட்பால் பார்ப்பேன். மத்தவங்களுக்கு உதவப் பிடிக்கும்; சாக்லேட் பிடிக்கும்’ என்றெல்லாம் சலசலவெனப் பேசிக் கொட்டும். சிலர் போதும் என்று கையெடுத்துக் கும்பிட்டார்கள். பலர் பொறுப்பாக ஸீட் பெல்ட் போட்டு அழைத்துச் சென்றார்கள். ஜி.பி.எஸ் இருப்பதால் போகவேண்டிய இடத்தைச் சரியாகச் சொல்லிவிடும். இறங்கியதும் மறக்காமல் நன்றி சொல்லி, டாட்டா காட்டும். அப்புறம்... அடுத்த இடம். அடுத்த கார்..!

சரி... யாராவது கடத்திச் சென்றுவிட்டால்? ஹிட்ச்பாட் எந்த நேரமும் வொயர்லெஸ் 3ஜி மற்றும் ஜி.பி.எஸ் மூலம் ஸ்மித், செல்லர் ஆகியோரின் கணினியுடன் இணைக்கப்பட்டே இருந்தது. அதனால் அது பயணிக்கும் வழித்தடம் முழுக்க பதிவாகிக்கொண்டே இருந்தது. மேலும், 24 மணி நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தன் பயண விவரங்களைப் படங்களாகவும் ஸ்டேட்டஸாகவும் பதிந்துகொண்டே வந்தது ஹிட்ச். அதற்கு எல்லாம் சக்தி? சோலார் பேனல் மூலம் சூரியனில் இருந்து சக்தியை எடுத்துக்கொண்டது!

லிப்ஃட் கொடுப்பவர்களை, 'இதோ எனது புதிய நண்பர்’ என்று போட்டோ எடுத்துப் போட்டு பெருமைப்படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்ச்பாட் பிரபலமாக, அதை பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவதற்காகவே பலர் குவிந்தனர். பிக்கப், டிராப் மட்டும் அல்லாமல், தங்கள் ஏரியாவுக்கு 'சிறப்பு அழைப்பாளர்கள்’போல அழைத்துச் சென்று சுற்றிக் காட்டவும் ஆரம்பித்தார்கள். ஒரு தம்பதி தங்கள் திருமணத்துக்கு ஹிட்ச்பாட்டை அழைத்துக் கௌரவப்படுத்தினார்கள். இதனால், 'பொம்மை’யாக தன் பயணத்தைத் தொடங்கிய ஹிட்ச்பாட், ஒரு 'வி.ஐ.பி’-யாக தன் பயணத்தை முடித்தது.

லிஃப்ட் ப்ளீஸ்!

ஹிட்ச்பாட்டின் பயணம் பற்றி ஸ்மித் சொல்லும்போது, ''இது வேடிக்கையாக இருந்தாலும், ஓர் ஆய்வுக்காகவே ஹிட்ச்பாட்டை உருவாக்கினோம். ரோபோக்கள் பற்றிய ஆராய்ச்சிகள் வளர்ந்துவரும் நிலையில் மனிதர்கள் ரோபோக்களை எந்த அளவுக்கு நம்புகிறார்கள்... மதிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம். திடீரென சாலையில் ஒரு ரோபோ கைகாட்டி லிஃப்ட் கேட்கும்போது மனிதர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைச் சோதிக்கவே ஹிட்ச்பாட்டை உருவாக்கினோம். அதன் மூலம் மனிதனுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே எவ்வளவு இணைப்பு அல்லது இடைவெளி இருக்கிறது என்பதை அறிந்துகொண்டோம்!'' என்கிறார்.

நீங்கள் போகும்பாதையில், 'தல.. அப்படியே அந்த ரெண்டாவது லெஃப்ட்ல இறக்கி விட்ருங்க!’ என்று தங்கத் தமிழில் ஏதேனும் ரோபோ லிப்ஃட் கேட்டால்... பதறி விலகாதீர்கள். வரும் காலத்தில் அது சாத்தியமே!