Published:Updated:

சீனாவின் சூப்பர் டார்லிங்!

சார்லஸ்

சீனாவின் சூப்பர் டார்லிங்!

சார்லஸ்

Published:Updated:

சீனா தெரியும். யாவ் சென் தெரியுமா?  

சீனாவின் சூப்பர் டார்லிங் யாவ். 34 வயதான அவருக்கு இங்கிலாந்தின் மக்கள் தொகையைவிட சீனாவில் ரசிகர்கள் அதிகம். சீனாவின் சமூக வலைதளமான வைபோவில் 7 கோடி ரசிகர்களைக்கொண்டிருக்கும் யாவ், டைம் பத்திரிகையின் 'உலகின் சக்திவாய்ந்த 100 பிரபலங்கள்’ பட்டியலிலும், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 'உலகின் சக்திவாய்ந்த பெண்கள்’ பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார். இத்தனைக்கும் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம்கூட பேசத் தெரியாது யாவ் சென்னுக்கு. சீனாவுக்கு வெளியே அவரை யார் என்றுகூட தெரியாது. ஆனால், சீனாவின் கெடுபிடியான கம்யூனிஸ்ட் அரசாங்கமே கொஞ்சம் உஷாருடன் அணுகும் பிரபல அந்தஸ்துடன் இருக்கிறார். 'இந்தச் சிறுமிக்கு உதவுங்கள்’ என யாவ் ஒரு ஸ்டேட்டஸ் தட்டினால், கோடிகளில் உதவிகள் குவிகின்றன.

சீனர்களின் அளவுகோல்படி யாவ், சூப்பர் அழகி ஒன்றும் இல்லை. எளிமையும் இனிமையுமாக நம் வீட்டுப் பெண்போல இருக்கிறார். மிடில் கிளாஸ் குடும்பம்தான். 10 வருடங்களுக்கு முன் டி.வி நடிகையாக அறிமுகம் ஆனார். பிறகு ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என சகல திசைகளிலும் பின்னியெடுத்து, இப்போது சீனாவின் நம்பர் ஒன் ஹீரோயின்!

சீனாவின் சூப்பர் டார்லிங்!

நடிப்பைப்போல இவரது எழுத்துக்கும் ரசிகர்கள் அதிகம். ஐ.நா-வின் அகதிகள் நல்வாழ்வு அமைப்பின் சீனாவுக்கான நல்லெண்ணத் தூதராக 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். லெபனான், எத்தியோப்பியா நாடுகளுக்கு யாவ் சென்ற போது, அங்கு நிலவிய ஏழ்மை அவரை அதிர்ச்சியடையவைத்தது. தான் கண்ட காட்சிகளையும் தனது அனுபவங்களையும் யாவ் தொடர்ந்து தனது வலைபக்கத்தில் எழுதி வர, சீனாவில் இருந்து ஐ.நா அகதிகள் நல்வாழ்வு அமைப்புக்கு வரும் நிதி, மூன்று மடங்கு அதிகரித்தது.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், சீனர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிகபட்ச ஒழுங்கும் நேர்மையும் இருக்கும். ஆனால் யாவ் சென்னின் வாழ்க்கையில் அதிலும் அதிரடிதான்!

தன்னைவிட ஒரு வயது இளையவரான லிங் என்ற நடிகரை, 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் யாவ். இத்தனைக்கும் அப்போதுதான் டி.வி அறிமுகம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனாலும், பல வருடங்களாகக் காதலித்த லிங்கை, அதற்கு மேல் காத்திருக்கவைக்க முடியாது என்று கல்யாணம் செய்துகொண்டார். அதிர்ச்சித் திருப்பமாக, ஆறே வருடங்களில் அந்தத் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. 'பெரிய நடிகையாகிவிட்டார். பணம் அதிகம் சேர்ந்துவிட்டது என்பதால், கணவரை விவாகரத்து செய்துவிட்டார்’ என எழுந்த

சீனாவின் சூப்பர் டார்லிங்!

விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல் அமைதி காத்தார் யாவ். ஆனால், அவருடன் விவாகரத்தான ஒருசில மாதங்களிலேயே லிங் இன்னொரு நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். தன் கணவரின் அந்தத் தொடர்பை முன்னரே கண்டுபிடித்த யாவ், அதற்காகத்தான் விவகாரத்து செய்தார் என்பது தெரிய வந்தது.

''ஒரு சினிமா நடிகைக்கு 22-24 வயது என்பது பொற்காலம். ஆனால், நான் கல்லூரியில் படிக்கும்போதே லிங்கைக் காதலித்தேன். அவர்தான் என் மரணம் வரை உடன் இருப்பார் என நம்பினேன். அதனால்தான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததுமே, அவரைத் திருமணம் செய்துகொண்டேன். இருந்தாலும் சின்ன வயதிலேயே ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ளாமல் திருமணம் செய்துகொண்டது தவறு என்பது பிறகு புரிந்தது'' என்று அப்போது மனம் திறந்தார் யாவ். சீனர்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது!

அதனாலேயே... யாவ் சினிமா ஒளிப்பதிவாளர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்தபோது, வாழ்த்துகள் குவிந்தன. இப்போது யாவ் சென்னுக்கு ஒரு மகன் இருக்கிறான். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மகனின் புகைப்படம் மட்டும் அல்ல, அவனுடைய பெயரைகூட இதுவரை வெளியே சொல்லவில்லை. பத்திரிகை, டி.வி பேட்டிகளில் 'குட்டி உருளைக்கிழங்கு’ என்றே மகனை செல்லமாகக் குறிப்பிடுகிறார்.

'எங்கள் செல்லம்!’ என்று யாவ் சென்னை, தங்கள் தேசத்தின் பெருமித அடையாளமாகக் கொண்டாடுகிறார்கள் சீனர்கள்!