Published:Updated:

என்ன செய்யப்போகிறோம்?

டி.அருள் எழிலன்

என்ன செய்யப்போகிறோம்?

டி.அருள் எழிலன்

Published:Updated:

'' 'தேநீர் வேண்டுமா?’ என்று கேட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், 'கோப்பி வேண்டும்’ என்பார்கள். கோப்பி கொண்டுவந்து கொடுத்தால், 'விஸ்கி வேண்டும்’ என்பார்கள்!'' எனக் கிண்டலடிக்கிறார் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கும் தமிழ்த் தலைவர்களுள் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா.

''இந்தியப் பிரதமர் மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூலம் ராஜபக்ஷேவுக்கு ஐஸ் பக்கெட் சவால்விடுகிறார். நிச்சயம் இது சவாலான விடயம்தான்!'' என்கிறார் சிங்கள ஆய்வாளரான டாக்டர் தயான் ஜயதிலக்க.

ஒருபக்கம் கிண்டல் விமர்சனத்துடனும், மறுபக்கம் கடும் விவாதத்துடனும் எதிர்கொள்ளப்படுகிறது இந்தியப் பிரதமர் மோடியுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் சந்திப்பு. வெளியுறவுத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடனான ஒரு மணி நேரத்துக்கும் மேலான சந்திப்பு என, இந்தக்  கூட்டமைப்பினருக்கு டெல்லியில் கிடைத்த முக்கியத்துவம் கொழும்பில் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.

''டெல்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்ததால், ராஜபக்ஷே ஆத்திரத்தில் உள்ளார். நாங்கள் இலங்கை இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுகிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வைக் கோருகிறோம். ஆனால், இலங்கை அரசு எங்களை இன்னொரு விடுதலைப்புலிகள் அமைப்பாகச் சித்திரித்து, அச்சுறுத்திப் பணியவைக்கிறது!'' என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

என்ன செய்யப்போகிறோம்?

ஈழ நிலவரம் என்ன?

இலங்கை அரசியலைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்கக் கூடாது என்று கருதுகிற ராஜபக்ஷேவை, இன்றைய தேதியில் வட பகுதியில் எதிர்ப்பவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினர் மட்டும்தான். ரணில், சந்திரிகா, சரத் ஃபொன்சேகா... என தன் எதிர்ப்பாளர்களை அடக்கிவைத்த ராஜபக்ஷே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தன்னோடு இணையுமாறு மென்மையாகவும் வன்மையாகவும் கூறி வந்தார். ஆனால், ராஜபக்ஷேவோடு இணைந்தால் வடபகுதியில் நாம் அஸ்தமித்துப்போவோம் என்பதை அறிந்த கூட்டமைப்பினருக்கோ, தனித்து அரசியல் செய்தாகவேண்டிய நிர்பந்தம். ஏனெனில், தற்போது வட பகுதியில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் கூட்டமைப்பினர். ஆனால், இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு தேர்தலைச் சந்தித்தால் வட பகுதியில் வாழும் சரிபாதி அல்லது பெரும்பான்மை சிங்களர்களின் வாக்குகளைப் பெற்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற நிலையை உண்டாக்கிவிடுவார் ராஜபக்ஷே.

ஆக, அரசியலில் தங்களின் எதிர்காலத்தைத் தக்கவைத்துக்கொள்ள வடக்கில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தியாக வேண்டிய நிர்பந்தம் கூட்டமைப்பு தலைவர்களுக்கு.

''கிளிநொச்சியில் சுமார் 10,000 ராணுவத்தினரை நிரந்தரமாகக் குடியேற்ற, குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்தால், தமிழ் மக்கள் அங்கு இருந்தார்கள் என்பதற்கான சுவடுகள்கூட இருக்காது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரச்னைகள் இருந்தாலும், உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணி, சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துவதுதான். இந்தியப் பிரதமரிடமும் இந்தக் குடியேற்றங்கள் தொடர்பாக விரிவாக முறையிட்டுள்ளோம்!'' என்கிறார் மோடியுடனான சந்திப்புக் குழுவின் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன்.

நிரந்தரமாக ராஜபக்ஷே ஆட்சி!

''2004-ல் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜபக்ஷே, 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இலங்கையில் எதிர்க்கட்சிகளே இல்லை எனும் நிலையில், தன்னை நிரந்தரமான அதிபராக மாற்றிக்கொள்ளும் அரசியல் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொண்டார். சர்வதேச விசாரணைகள் எனும் அச்சுறுதலை இன்னும் இரண்டு ஆண்டுகள் சமாளித்துவிட்டால், அதன் பின்னர் நிரந்தரமாகவே சர்வதேச நாடுகள் தன்னை எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறார் ராஜபக்ஷே. ஒருவேளை, வேறு காரணங்களால் தன்னால் அதிபராக முடியாவிட்டாலும், தன் மகன் நமல் ராஜபக்ஷேவை அதிபராக்கும் திட்டத்தையும் வைத்திருக்கிறார். ராஜபக்ஷே தலைமையிலான தனிப்பெரும்பான்மை பெற்ற நிர்வாக முறை இன்னும் 10 ஆண்டுகளுக்கு நீடித்தால், தமிழர்கள் வடக்கில் இல்லாமலேயே போய்விடுவார்கள்!'' என்கிறார் கொழும்பில் வசிக்கும் ராஜசிங்கம்.

தமிழர்களின் சிக்கல் என்ன?

''1998-ம் ஆண்டு தீவிர யுத்தம் தொடங்கி, 2004-ல் சுனாமிப் பேரலை சோகம், 2009-ல் யுத்தத்தின் முடிவுமாக சுமார் 15 ஆண்டு கால நிம்மதியற்ற வாழ்வு 80 சதவிகித தமிழர்களை உளவியல் சிதைவுக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க வெறும் கட்டடங்கள், சாலைகள் கட்டுமானப் பணி மட்டும் போதாது. கடும் ஒழுக்கம் பேணும் சமூகம் என்பது யாழ்ப்பாணச் சமூகத்தின் அடையாளம். ஆனால், இன்று இலங்கையிலேயே அதிக மது விற்பனை நடக்கும் இடமாக யாழ்ப்பாணம் திகழ்கிறது.

உறவுகள் யாரென்றே தெரியாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. முறைகேடான கர்ப்பங்கள், அதிக அளவிலான தற்கொலைகள், குழந்தைகளுக்கு நேரும் பாலியல் துன்பங்கள் என, போருக்குப் பின்னர் மிக மோசமான சூழலை எதிர்கொள்கிறார்கள் தமிழ் மக்கள். எனவே, உண்மையிலேயே துயர் நீக்கும் நீண்ட காலத் திட்டங்களுடன்கூடிய நிவாரணங்கள்தான் ஈழ மக்களின் இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும்!'' என்கிறார் போர் பாதித்த யாழ்ப்பாண மக்களிடையே பணி செய்யும் சாந்திஹாம் அமைப்பின் இயக்குநர் தற்பரன்.

தமிழ் மக்களுக்காக அரசியல் செய்வதாகக் கூறும் தமிழ்க் கூட்டமைப்பினர், இந்தியாவைச் சார்ந்து மட்டுமே அரசியல் செய்யவேண்டிய சூழல். இலங்கை அரசுக்கோ, சீனாவும் நண்பன்... இந்தியாவும் நண்பன். மேலதிகமாக ஜப்பானும் நண்பன். இந்தியாவைப்போல அல்லாமல், உறுதியாக இலங்கையை ஆதரிக்கும் சீனாவுக்கு தன் பிராந்தியத்தைக் கட்டற்ற சுதந்திரத்துடன் திறந்துவிட்டிருக்கிறது இலங்கை. இத்தனை சிக்கல் நிறைந்த சூழல்களுக்கு மத்தியில், எதிர்கால எல்லையோரப் பாதுகாப்புக்கேனும் இந்தியா என்ன செய்யவிருக்கிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!