Published:Updated:

சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்!

எம்.பரக்கத் அலி, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

'மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்... நான் மெட்ரோவில் ஊரைச் சுத்தப் போறேன்!’- என இனி உற்சாக ஸ்டேட்டஸ் தட்டலாம்; ஓடும் மெட்ரோ ரயிலில் சாய்ந்துகொண்டு செல்ஃபி க்ளிக்கலாம்!

சென்னையின் பெருமித அடையாளமாக, மிகமிக விரைவில் பறக்கவிருக்கிறது மெட்ரோ ரயில். (ரயிலின் பிரத்யேக 'தடக் தடக்’ சத்தம் மெட்ரோவில் கேட்காது.) கொல்கத்தா, டெல்லி, பெங்களூருக்கு அடுத்து, இந்தியாவில் ஓடவிருக்கும் நான்காவது மெட்ரோ... சென்னை மெட்ரோ!

2014 டிசம்பர் மாதம் தன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கும் சென்னை மெட்ரோ, முதல் கட்டமாக மேம்பாலங்களில் மட்டும் இயக்கப்படும்; பின்னர் படிப்படியாகச் சுரங்கப்பாதைகளிலும் பறக்கும். சுமார் 14,600 கோடி பட்ஜெட்டில், சென்னை நகரின் உள்கட்டமைப்பையே 'பட்டி - டிங்கரிங்’ பார்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றன மெட்ரோவுக்கான தடங்கள்.  

'சென்னை மெட்ரோ ரயில்’ என்ற நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம்,  இரண்டு வழித்தடங்களிலுமாக மொத்தம் 45 கி.மீ தூரத்தைக் கடக்கும். மெட்ரோ பயணக் கட்டணம், எட்டு ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 23 ரூபாய் வரை இருக்கலாம். பீச் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி வரை பயணிக்கும் பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை ரயில் நிலையம் வரை நீட்டிக்கவிருக்கிறார்கள். அந்த ரயில் நிலையத்துக்கு அருகிலேயே பரங்கிமலை  மெட்ரோ ரயில் நிலையமும் வரவிருக்கிறது. எனவே, புறநகர் ரயில், பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று ஜங்ஷன்களும்  பரங்கிமலையில் சந்திக்கவிருக்கின்றன. இதனால்,   பரங்கிமலையின் ரியல் எஸ்டேட் மதிப்பு... எக்கச்சக்கத்துக்கு  எகிறலாம்!   

சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்!

சரி... மெட்ரோ ரயில் பயணம் எப்படித்தான் இருக்கும்? ஒரு டிரெய்லர் விசிட் அடித்தேன்!

போக்குவரத்து நெரிசல், தூசி, புகை,  கிளுகிளு கிளினிக் நோட்டீஸ்கள், முறுக்கு வியாபாரம் மற்றும் முறுக்குக் கம்பி விளம்பரங்கள்... என எதுவும் மெட்ரோவில் இருக்காது.

ஸ்மார்ட் என்ட்ரி!  

எஸ்கலேட்டர், படிகள், லிஃப்ட் என சகல வசதிகளும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும். சில ரயில் நிலையங்களுக்கு உள்ளேயே நகரப் பேருந்துகள் வந்துபோகும். புறநகர் ரயில்கள்போல ஏகப்பட்ட பெட்டிகள் இருக்காது. மொத்தமே நான்கு பெட்டிகள்தான். அதனால் பிளாட்பாரமும் சின்னதாகவே இருக்கும். புறநகர் ரயில் நிலையங்களின் பிளாட்பார பெஞ்சுகளில் பொழுதுபோகாமல் கதையடிப்பதும், ஜோடியுடன் சிட்டிங் போட்டு சில்மிஷம் செய்யும் கதையெல்லாம் இங்கே நடக்கவே நடக்காது. பயணத்துக்கான டிக்கெட்  வாங்கினால்தான் பிளாட்பாரத்துக்குள் நுழைய முடியும். டிக்கெட், ஸ்மார்ட் கார்டு தொழில்நுட்பத்தில் இருக்கும். அதை இயந்திரத்துக்குள் பொருத்தினால்தான், வாயில் தடுப்பு உங்களை உள்ளேயே அனுமதிக்கும். இதனால் 'வித்-அவுட்’ பயண வாய்ப்பே இல்லை.  

க்யூ ப்ளீஸ்...

மின்சார ரயில்போல அடித்துப் பிடித்து போய் இடம்பிடிக்க முடியாது. ஒரு பெட்டிக்கு நான்கு வாசல்கள். ரயில் வந்து நிற்கும்போதுதான் கதவுகள் திறக்கும். பிளாட்பாரத்தில் கதவு வரும் இடத்தில் கச்சிதமாகத் தடுப்பு அமைத்திருப்பார்கள். லிஃப்ட் வாசல்போல. அங்கே வரிசையாகக் காத்திருக்க வேண்டும். ரயிலில் இருந்து பயணிகள் இறங்கியதும், வரிசையாகத்தான் ரயிலுக்குள் போக முடியும்!

ஃபுட்போர்டு இல்லை... ஜன்னல் ஸீட் இல்லை!

ரயிலின் சுவர்களை ஒட்டி நீளமாக இருக்கைகள் இருக்கும். பயண தூரம் குறைவு என்பதால் நிற்பவர்களுக்கே அதிக கோட்டா. கதவுகள் இறுகப் பூட்டிக்கொள்ளும். எனவே, ஃபுட்போர்டு டிராவல் வாய்ப்பே இல்லை. முழுக்கவே ஏ.சி என்பதால் எப்போதும் ஜில்ஜிலீர் பயணம்தான். சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில், பிளாட்பாரத்தைச் சுற்றி கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பயணத்தில் 1,276 பயணிகள் பயணிக்க முடியும். மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் மெட்ரோவில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தலாம். ஒரு பெட்டியில் இருந்து இன்னொரு பெட்டிக்குப் போகலாம்.  

சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்!

மூன்றாவது கண்!

ரயிலுக்குள் சிகரெட், குளிர்பானம், உணவுப் பொருட்கள் போன்றவற்றுக்கு தடா. பான்பராக், வெற்றிலை, மாவா, எச்சில் துப்ப முடியாது. பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவாகும். எனவே, பாதுகாப்புக்கு உத்தரவாதம்!

எமர்ஜென்சிக்கு என்ன செய்வது?

அவசர, அபாய காலங்களில் ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலி இதில் கிடையாது. பெட்டியில் சில இடங்களில் மைக் பொருத்தப்பட்டிருக்கும். அதில் உள்ள சீலை உடைத்து ஓட்டுநரிடம் பேசி விவரம் சொல்லலாம். ஆனால்,  தேவை இல்லாமல் அதை உபயோகித்தால், 1,000 ரூபாய் நோட்டைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அபராதம்! ரயிலின் கதவுகளை ஓட்டுநர்தான் திறக்க/மூட முடியும். அவசரக் காலத்தில் கதவைத் திறக்க, கதவு அருகே ஒரு குமிழ் வைத்திருப்பார்கள். அதன் மூடியை உடைத்து, உள்ளே இருக்கும் சிவப்பு நிறக் கருவியை இயக்கினால் கதவு திறக்கும்.

மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை!

30 விநாடிகள்தான் ஸ்டேஷன்களில் மெட்ரோ ரயில் நிற்கும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் இறங்க வேண்டும் எனில், பிரத்யேக மைக் மூலம், 'வரும் ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறங்க வேண்டும். கூடுதல் நேரம் ஒதுக்குங்கள்’ என்று ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தால், ஓட்டுநர் கூடுதல் நேரம் வண்டியை நிறுத்துவார்.

உள்ளே மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு இருக்கைகள் உள்ளன. அதன் அருகிலேயே சக்கர நாற்காலியை வைத்துக்கொள்ள முடியும்.

மகளிர் மட்டும்!

நான்கில் ஒரு பெட்டி மகளிருக்கு மட்டும். அதில் கைப்பிடிகள்  தாழ்வாக அமைக்கப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் சரிபாதி, 'முதல் வகுப்பு’க்கு. பிற வகுப்புகளுக்கும் முதல் வகுப்புக்கும் குஷன் இருக்கைகள் மட்டுமே வித்தியாசம்!  

சென்னை மெட்ரோ டிரெயின் டிரெய்லர்!

'தடக் தடக்’ இல்லை!

மெட்ரோ ரயில் பாதை மீட்டர்கேஜும் இல்லை; பிராட்கேஜும் இல்லை. ஸ்டாண்டர்டுகேஜ். கருங்கல் ஜல்லியின் மேல் தண்டவாளங்கள் போடப்படவில்லை. கடினமான ரப்பர் புஷ் மேல் தண்டவாளங்களை அமைத்திருப்பதால், ரயிலின் பிரத்யேக 'தடக் தடக்’ சத்தம் இருக்காது.

சொற்ப கி.மீ சோதனை ஓட்டமே பரவச அனுபவமாக இருந்தது. மேம்பாலத்தில் உயர உயரக் கட்டடங்களுக்கு நடுவே மெட்ரோ ரயில் வளைந்து நெளிந்து வழுக்கிச் செல்வது... ஆஹா அனுபவம். இனி, சென்னை விடுமுறை பேக்கேஜில் மெட்ரோவும் இடம் பிடிக்கும்!

கொல்கத்தா, டெல்லியில் ஊரின் பெயரையே மெட்ரோவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனால் பெங்களூரு மெட்ரோவுக்கு 'நம்ம மெட்ரோ’ என்று பெயர். ஆக, சென்னை மெட்ரோவுக்கு என்ன பெயர் வைப்பார்கள்?

அடுத்த கட்டுரைக்கு