Published:Updated:

எப்படி இருக்கிறான் ராகுல்?

டி.அருள் எழிலன், படங்கள்: ஜெ.முருகன்,தே.சிலம்பரசன்

ராகுலை நினைவிருக்கிறதா? திடீர், திடீர் எனத் தீப்பிடித்து எரிந்து, தமிழகத்தையே பரபரக்கவைத்த பச்சிளம் குழந்தை. 'ஒரு குழந்தையின் உடல் எப்படித் தானாகவே தீப்பற்றும்?’ என மருத்துவ உலகத்தைத் திகைக்கவைத்த அந்தக் குட்டிப் பையன், இப்போது எப்படி இருக்கிறான்?

திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் 'ம்ம்ம்மா...’ என மழலைக் குரலில் பேசியபடியே தத்தித் தவழ்கிறான். 'ஆரோக்கியமான குழந்தை’ என மருத்துவர்கள் சான்று அளித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. மொத்தம் நான்கு முறை உடலில் தீப்பிடித்த பின்பு, கடந்த ஒரு வருடமாக எந்தச் சிக்கலும் இல்லை. ஏற்கெனவே தீப்பற்றியதன் தழும்புகள் மட்டும் உடலில் தென்படுகின்றன. ராகுலின் அப்பா கர்ணனும், அம்மா ராஜேஸ்வரியும் பழைய மர்மத்தின் புதிருக்கு விடை தெரியாமலும், இப்போது தீ பற்றாமல் இருப்பதன் நிம்மதியுடனும் மகனைக் கவனித்து வருகின்றனர்.  

''விழுப்புரம் பக்கத்துல இருக்குற டி.பரங்கிணி கிராமம்தான் என் சொந்த ஊர். கல் உடைப்பேன்; சித்தாள் வேலை பார்ப்பேன். அப்படி வேலைக்குப் போன இடத்துல சமையல் வேலைக்காக வந்த ராஜேஸ்வரியும் நானும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். 2011-ல் மூத்த பொண்ணு நர்மதா பிறந்தா. 2013 மே மாசம், ராகுல் பிறந்தான். பிறந்ததுல இருந்தே குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாம இருந்துச்சு. அதனால முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். எட்டு நாள் வெச்சிருந்துட்டு, குழந்தைக்கு ஒண்ணும் இல்லைனு போகச் சொல்லிட்டாங்க. வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல என் மனைவி அலர்ற சத்தம் கேட்டுச்சு. பதறிப்போய் பார்த்தா, குழந்தை தலையில தீப்பிடிச்சு எரியுது. உடனே துணியைப் போட்டு மூடி அணைச்சுட்டோம். சுத்தி உள்ளவங்க, நாங்க ஏதோ கவனக்குறைவா இருந்துட்டோம்னு எங்களைத் திட்டிட்டுப் போனாங்க'' என்று அந்த முதல் நாள் தீ சம்பவத்தை நினைவுகூர்கிறார் கர்ணன்.

எப்படி இருக்கிறான் ராகுல்?

இந்தச் சம்பவம் நடந்தபோது இவர்கள் இருந்தது ராஜேஸ்வரியின் ஊரான நெடிமொழியனூரில். தீப்பிடித்த குழந்தை பற்றி ஊருக்குள் எல்லோரும் பேச, உடனே கர்ணனின் ஊரான டி.பரங்கிணிக்குச் சென்றுள்ளனர். ''நாங்க ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள குழந்தை தலையில் தீப்பிடிச்ச செய்தி பரங்கிணி வரைக்கும் பரவிருச்சு. எல்லாரும் எங்களை வித்தியாசமாப் பார்த்தாங்க. மறுநாளே ராகுலுக்குத் திரும்பவும் தீப்பிடிச்சு நெஞ்சு, வயிறு எல்லாம் வெந்துபோச்சு. நாங்க பயந்துட்டோம். என்ன பண்றதுன்னே தெரியலை. டாக்டர்கிட்ட தூக்கிட்டுப்போய் ராகுலைக் காட்டினோம். தீக்காயத்துக்கு மருந்து போட்டாங்க. புண் சரியாகி வந்த சமயத்துல, மறுபடியும் தீப்பிடிக்க, ஊரே பரபரப்பாயிருச்சு. அந்த நேரம் பார்த்து பக்கத்துத் தெருவுல ஒரு வீடு தீப்பிடிச்சு எரிஞ்சது. உடனே ஊர்க்காரங்க பயந்துபோய், குழந்தையைத் தூக்கிட்டு ஊரை விட்டே எங்களை வெளியே போகச் சொல்லிட்டாங்க. என் மாமியார் வீட்டுல, நாத்தனார் ரெண்டு குழந்தைங்களோட தங்கியிருந்தாங்க. அவங்களுக்கும் என் குழந்தையைப் பார்த்து பயம். அதனால அங்கேயும் வீட்டுக்குள்ள சேர்க்க மறுத்துட்டாங்க. வேற வழி இல்லாம கிளம்பிப் போய்ட்டு இருந்தப்ப, சில இளைஞர்கள் வழிமறிச்சு, 'நீங்க ஊரைவிட்டுப் போக வேணாம். நாங்க பார்த்துக்குறோம்’னு சொல்லி ஊர்க் கோயிலில் தங்கவைச்சாங்க. ஒரு நாள்தான். அடுத்த நாளே பூசாரி வந்து 'இந்தக் குழந்தை ஊருக்குள்ள இருந்துச்சுனா, ஊர்ல ஒரு புள்ளைகூட உயிரோட இருக்காது’னு புரளி கிளப்பிவிட்டுட்டார். அங்கிருந்து கிளம்பி மறுபடியும் என் ஊருக்கே வந்துட்டோம். ஒரு வருஷம் ஆச்சு. இப்போ இங்கேதான் இருக்கோம்!'' - உடைந்த குரலில் பேசுகிறார் ராஜேஸ்வரி.

எப்படி இருக்கிறான் ராகுல்?

இந்த இடைவெளியில் குழந்தைக்கு தீப்பிடிக்கும் செய்தி சுற்று வட்டாரம் எல்லாம் பரவ, குழந்தை ராகுலை ஒரு வேடிக்கைப் பொருள்போல பலரும் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். ''சில பேர் தீப்பிடிக்கிறதை வீடியோ எடுக்கிறதுக்காக செல்போனை வெச்சுக்கிட்டு ரெடியா நிப்பாங்க. வெறுப்பாகி வீட்டைப் பூட்டிக்கிட்டு உள்ளேயே இருப்போம். கொஞ்சநாள் புதுச்சேரி ஜிப்மர்ல சிகிச்சை எடுத்தோம். அதுக்குப் பிறகு பிரம்மதேசம் கோயில்ல போய் இருந்தோம். அங்கேயும் ஒரே கூட்டம். திரும்ப வீட்டுக்கே வந்துட்டோம். சில பேர் 'இது சாமி’னு என் பையனைக் கும்பிட ஆரம்பிச்சுட்டாங்க. தினசரி கூட்டம் கூட ஆரம்பிச்சது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸ்காரங்க வந்தாங்க. கலெக்டர் வரைக்கும் தகவல் போய், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவெச்சாங்க. அங்கே 15 நாள் இருந்தோம். பெரிய பெரிய டாக்டருங்க எல்லாம் வந்து பார்த்தாங்க. என்ன நோய்னு யாருக்கும் தெரியலை. 'குழந்தை நல்லா இருக்கு. கவனமாப் பார்த்துக்கங்க’னு சொல்லி அனுப்பிவெச்சாங்க. இப்போ எந்தப் பிரச்னையும் இல்லை. தலையில் ஒரு பகுதி மட்டும் எரிஞ்சதால,  அந்த இடத்துல மட்டும் இன்னும் முடி வளரல. மத்தபடி ராகுல் நல்லா இருக்கான்!'' என்று பேசியபடியே ராகுலைப் பரிவோடு பார்க்கிறார் கர்ணன்.

ஏன் தீப்பிடித்தது என்ற கேள்விக்கு இப்போது வரை இவர்களுக்கு விடை தெரியவில்லை. அது மர்மமாகவே நீடிக்கிறது. ''அது தெரியவே வேணாங்க. எனக்கு என் பிள்ளை நல்லா இருந்தாப் போதும். மறுபடியும் என் கணவரோட ஊருக்குக் குடிபோயி, ஊர் மக்கள்கூட ஒத்துமையா வாழணும். அவ்வளவுதான் என் ஆசை'' என்கிறார் ராஜேஸ்வரி. தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாமல் மழலை மொழியில் மடியில் தவழ்கிறான் ராகுல் எனும் குறுகுறு கண் அழகன்!

என்ன நோய் இது?

மிழகம் முழுக்க எக்கச்சக்கப் பரபரப்பை உருவாக்கிய இந்தக் குழந்தையைக் கண்காணிக்க, 24 மணி நேரமும் இயங்கும் உயர்நிலை மருத்துவக் குழுவை அமைத்தது தமிழக அரசு. ரத்தம், சிறுநீர், தோல்... என 30 விதமான சோதனைகள் செய்யப்பட்டன. உடலில் தீப்பற்றிக்கொள்ளும் அரிதான நோயான 'ஸ்பான்டேனியஸ் ஹ்யூமன் கம்பஸ்டன்’ (Spontaneous human combustion) என்ற நோயாக இருக்கலாம் என்றுகூட ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. பிறகு, அந்த நோயும் இல்லை என்றார்கள். இறுதிவரை என்ன காரணம் என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை!

அடுத்த கட்டுரைக்கு