சினிமா
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: ‘அவன் இல்லைன்னாலும் அவன் கனவைக் காப்பாத்துவேன்!’

மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மீனாட்சி

அவன் அந்த முடிவை எடுக்கணும்னு நினைச்சப்பவே இந்த சேனல் தொடர்பான எல்லா விஷயத்தையும் தெளிவா எழுதி வெச்சிருந்தான்.

‘பல வீடுகளுக்கு சமையல் வேலைக்காகப் போயிருக்கேன். சிலருக்கு மட்டுமே தெரிஞ்ச என் கைப்பக்குவம் இன்னைக்குப் பலருக்கும் தெரிய ஆரம்பிச்சிருக்கு” என்று தன்னம்பிக்கை ததும்பப் பேசுகிறார் மீனாட்சி. `அம்மா சமையல்' சேனலின் தூண்!

சமையல் பிரியர்களுக்கு ‘அம்மா சமையல்’ நிச்சயம் தெரிந்திருக்கும். அன்றாட சமையலுடன் வீட்டுக்குத் தேவையான சின்னச் சின்னக் குறிப்புகளையும் சொல்லி அசத்திக் கொண்டிருக்கிறார் மீனாட்சி. அவருடைய சேனல் ஆலமரமாய் வளர்ந்த வெற்றிக்கதை குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

“காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வெள்ளைக் குளம் என் சொந்த ஊர். மொத்தமே 30, 40 குடும்பங்கள் அடங்கிய சின்ன கிராமம். சின்ன வயசில இருந்தே பாட்டி, தாத்தாகிட்ட வளர்ந்ததனால அனுபவரீதியா பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். அப்படித்தான் என் பாட்டி மூலமா சமையலும் கத்துக்க ஆரம்பிச்சேன். என் ஏழு வயசிலேயே மிளகாய் கிள்ளி சாம்பாரும், தக்காளித் தொக்கும் வச்சேன். ரொம்ப சூப்பரா இருக்குன்னு தாத்தா பாராட்டவும் ஆர்வமா பல ரெசிப்பிகள் என் பாட்டிகிட்ட கத்துக்கிட்டேன். இப்படித்தான் சமையல் எனக்கு அறிமுகமாச்சு.

SHAREபட்டா பரம்பரை: ‘அவன் இல்லைன்னாலும் அவன் கனவைக் காப்பாத்துவேன்!’

என் வீட்டுக்காரருக்குக் குறைவான சம்பளங்கிறதனால நானும் வேலைக்குப் போக வேண்டிய சூழல். ரெண்டு பசங்களையும் வீட்ல விட்டுட்டு, சின்னச் சின்ன வேலைகளுக்குப் போய்ட்டு இருந்தேன். டிஸ்கோ மணி கோக்கிறது, காகிதப்பூ கட்டுறதுன்னு எல்லா வேலைகளும் செஞ்சேன். அதோடு நாலு வீட்டுக்கு மூணு வேளையும் சமைச்சிக் கொடுத்துட்டு வந்துட்டிருந்தேன். பல வருஷங்களா இப்படியேதான் வாழ்க்கை போய்ட்டிருந்தது. பசங்க வளர்ந்தாங்க. பெரியவன் கேம் டிசைனரா வேலை பார்த்தான். சின்னவன் பிகாம் படிச்சிட்டிருந்தான். அந்தச் சமயம்கூட சிங்கப்பூருக்கு வேலைக்காகப் போயிருந்தேன். அங்க சம்பளமே கொடுக்காம வீட்டுக்குள்ள அடைச்சு வேலை வாங்குனாங்க. என் பாஸ்போர்ட்டை அவங்க வச்சிருந்ததால அவங்களை மீறி எதுவும் பண்ண முடியல. ரொம்பப் போராடி சொந்த ஊர் திரும்பினேன். பிறகு இங்க கிடைச்ச வேலைகளைச் செஞ்சிட்டிருந்தேன்.

மூத்த மகன் சத்ய நாராயணன், திடீர்னு ஒருநாள் ‘நீங்க சமைங்கம்மா. நான் அதை வீடியோ எடுத்துப் போடுறேன்’னு சொன்னான். அவனுக்காக சரின்னு சொன்னேன். ‘அம்மா’ன்னு போட்டா பல பேருக்கு நம்ம சேனல் தெரிய வரும்னு ‘அம்மா சமையல்’னு பெயர் வெச்சான். வேலைக்குப் போய்ட்டு வந்து ராத்திரி ஒன்பது மணிக்கு மேல வீடியோ எடுப்பான். அவனே அதை யூடியூப்ல போடுவான். கேமரா முன்னாடி பேசப் பதற்றமா இருந்துச்சு. யூடியூப்ல நிறைய வீடியோஸ் போட்டுக் காட்டினான். ‘தைரியமா பேசுங்கம்மா... இந்த சேனல் மூலமா நீங்க பெரிய ஆளா வரணும்மா’ன்னு சொன்னான். 2016-ல் சேனல் ஆரம்பிச்சோம். சேனல் ஆரம்பிச்ச நாலு மாசத்துல என் புள்ள எங்களை விட்டுப் போயிட்டான்” என்றவரின் குரல் உடைந்தது.

SHAREபட்டா பரம்பரை: ‘அவன் இல்லைன்னாலும் அவன் கனவைக் காப்பாத்துவேன்!’

“அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கு. குடும்பச் சண்டையில் தற்கொலை பண்ணிக்கிட்டான். அவன் அந்த முடிவை எடுக்கணும்னு நினைச்சப்பவே இந்த சேனல் தொடர்பான எல்லா விஷயத்தையும் தெளிவா எழுதி வெச்சிருந்தான். அந்தத் தகவலே அவன் இறந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்துச்சு. எங்களுக்கு எட்டு வருஷம் குழந்தையில்லாம தவமிருந்து பிறந்த பையனும் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு ரொம்பவே உடைஞ்சிட்டோம். ஆனாலும், அவனுக்காகவே இந்த சேனலை நல்லா நடத்தி அவன் கனவை நிறைவேற்றணும்னு நினைச்சேன். சோகத்தில் மூழ்கிக்கிடந்த குடும்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமா மீட்டெடுத்தேன்.

என் ரெண்டாவது பையன் ரமேஷ்தான் இப்ப எனக்கு ஆறுதலாகவும், பக்கபலமாகவும் இருக்கான். அவனே கேமரா வெச்சு வீடியோ எடுத்து எடிட் பண்ணிப் போடுவான். எங்க பையனோட கனவு சேனலை எப்படியாச்சும் பெரிய அளவுல வளர்த்தெடுக்கணும்னு தொடர்ந்து நிறைய வீடியோக்கள் பண்ணினேன். ‘பணம் சம்பாதிக்கறதுக்காக மகன் செத்த துக்கத்தைக்கூட மறந்துட்டு ஜாலியா வீடியோ பண்றேன்’னுலாம் எல்லாரும் சொன்னாங்க. என் வலி எனக்குத் தெரியும். எல்லார்கிட்டேயும் நாம சோகத்தைக் காட்டணும்னு எந்த அவசியமும் இல்ல. இப்ப வரை என் பையனை நினைச்சு யார் முன்னாலும் அழ மாட்டேன். அழணும்னு தோணுச்சுன்னா நேரா ரூமுக்குள்ள போய் தனியா போதுங்கிற அளவுக்கு அழுது தீர்த்துட்டு வந்திடுவேன்” என்றவர், சில நொடி மெளனத்திற்குப் பின் தொடர்ந்தார்.

“புதுசா சமையல் பண்ற புள்ளைங்களுக்குப் புரியுற மாதிரி எளிமையா விதவிதமான ரெசிப்பிகள் சொல்லிக் கொடுப்பேன். பலரும் சில ரெசிப்பிகளைக் குறிப்பிட்டுச் சொல்லி செஞ்சு காட்டச் சொல்லுவாங்க. நானும் ஒரே பொருளை வச்சு என்னென்ன மாதிரியான ரெசிப்பிகள் செய்யலாம்னு யோசிச்சு புதுப்புது ரெசிப்பிகளையும் என் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவேன். பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கான்னு வெளிநாடுகளிலும் என் சேனலைப் பார்க்கிறாங்க. லண்டனில் நிறைய சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. எல்லாரும் அவங்க வீட்டுக்கு வரச் சொல்லிக் கூப்டுறாங்க. அவங்களுக்காகவாச்சும் லண்டன் போகணும்” என்றவரிடம், மசாலா பிசினஸ் குறித்துக் கேட்கவும், புன்னகைக்கிறார்.

SHAREபட்டா பரம்பரை: ‘அவன் இல்லைன்னாலும் அவன் கனவைக் காப்பாத்துவேன்!’

“பலரும் நான் சமைக்கிறதைப் பார்த்துட்டு ‘நீங்களே பொடி தயார் பண்ணிக் கொடுங்களேன்’னு கேட்டாங்க. அதனால மசாலா பிசினஸ் பண்ண முடிவெடுத்தேன். 20க்கும் மேற்பட்ட பொருள்களை நானே தயார் செய்து விற்கிறேன். சிங்கப்பூர், அமெரிக்கா வரைக்கும் நம்ம மசாலா போகுதுங்க!

எல்லாரும் ஏதோவொரு நோக்கத்துக்காக இந்தத் தளத்தைத் தேர்ந்தெடுப்பாங்க. இதை நான் என் பையன் நட்ட விதையா நினைக்கிறேன். அது விருட்சமாகிறதைப் பார்த்து ரசிக்க விரும்புறேன், அவ்வளவுதான்!” என்கிறார் மீனாட்சி.