பாப் இளவரசி என்று அழைக்கப்படும் அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears) தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ் 2007-ல் தன் முன்னாள் கணவர் கெவின் ஃபெடர்லைனிடமிருந்து விவாகரத்து பெற்றதைத் தொடர்ந்து, மனநலம் குன்றி காணப்பட்டார். அவர் தனது தலையை மொட்டையடித்தது, புகைப்படக் கலைஞரின் காரை, குடையால் அடித்தது போன்ற செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, தன் இரண்டு குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் அவர் இழந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கலிஃபோர்னியா சட்டத்தின்படி, ஒரு தனிநபர் மனநலம் குன்றி இருக்கும்போது, நீதிமன்றம் தலையிட்டு அவரின் வாழ்க்கை முடிவுகள் குறித்து முடிவெடுக்க அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரை பரிந்துரைக்கும். அதாவது அவரின் தனிப்பட்ட தேவைகளான உடல் ஆரோக்கியம், உணவு, உடை அல்லது தங்குமிடம் மற்றும் பொருளாதார தேவைகளான சொந்த நிதி ஆதாரங்களை நிர்வகிக்க, கன்சர்வேட்டர்ஷிப் எனும் பாதுகாவலரை நியமிக்கும்.
2008 ஆம் ஆண்டு முதல், பிரிட்னி ஸ்பியர்ஸின் தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கன்சர்வேட்டர்ஷிப்பில் இருந்தார். 13 ஆண்டுகள் நீடித்த அவரது கன்சர்வேட்டர்ஷிப்பின் போது பிரிட்னி குழந்தை பெற்றுக்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்று பிரிட்னி ஸ்பியர்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து முறையிட்டார். சமூக ஊடகங்களிலும் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பரில் அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தற்போது பிரிட்னி ஸ்பியர்ஸ் சாம் அஸ்காரியுடன் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தையை எதிர்த்து காத்திருப்பதாகவும் இன்ஸ்டாவில் அறிவித்துள்ளார். `சாமுடன் ஹவாயில் விடுமுறைக்கு வந்த பிறகு, தன் எடை அதிகரித்ததாகவும், அதற்கு பிறகு கர்ப்ப பரிசோதனை செய்ததில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததாகவும்' குறிப்பிட்டுள்ளார். மேலும், குழந்தை பிறப்புக்கு முன்பு ஏற்படும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அதிலிருந்து மீள தினமும் யோகா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பிரிட்னி-சாம் தம்பதியருக்குப் பிறக்கவிருக்கும் முதல் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.