Published:Updated:

அவர்தான் அந்த ஆளுமை!

அம்ரிதா, ஆரி
பிரீமியம் ஸ்டோரி
News
அம்ரிதா, ஆரி

கமல் சாரை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. சின்ன வயசுல இருந்தே அவரோட ரசிகை நான்.

நீங்கள் சந்திக்க ஆசைப்படுகிற செலிபிரிட்டி அல்லது சந்தித்த போது வியந்து பரவசமடைந்த செலிபிரிட்டி யார் என இவர்களிடம் கேட்டோம்.
அவர்தான் அந்த ஆளுமை!

அம்ரிதா ஐயர்

கமல் சாரை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. சின்ன வயசுல இருந்தே அவரோட ரசிகை நான். இந்தில தீபிகா படுகோன் தேர்ந்தெடுக்கிற கதைகள் ரொம்பப் பிடிக்கும்ங்கிறதால அவங்களையும் சந்திக்க விருப்பம். ஸ்போர்ட்ஸ்ல விராட் கோலியின் அதிபயங்கர ரசிகை. அவரையும் மீட் பண்ண ஆசை. சந்தித்த போது வியந்து பரவசமடைந்த செலிபிரிட்டி யார்னா, அது தளபதி விஜய் சார்தான். ‘பிகில்’ ஷூட்ல அவர்கூட நடிச்ச அனுபவங்களையெல்லாம் மறக்கவே முடியாது. எப்போவுமே நான் தளபதியோட ஃபேன் கேர்ள்தான்.

அவர்தான் அந்த ஆளுமை!

இயக்குநர் பிரேம் குமார்

ஒளிப்பதிவுத்துறையில வரணும்னு ஆசைப்பட்டதும் சேர நினைச்சது சந்தோஷ் சிவனிடம். தான் பெரிய கேமராமேன்ங்கிற ஈகோ கொஞ்சமும் இல்லாம ரொம்ப எளிமையா இருப்பார். என்னுடைய வேலையைப் பார்த்துட்டு, ‘உனக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு. அதுலயே வொர்க் பண்ணு. அதுதான் வெகுகாலத்துக்கு நிலைக்கும்’னு சொன்னார். அவருடைய எளிமை எனக்குள்ள உண்டாக்கின தாக்கம் அதிகம்.

அவர்தான் அந்த ஆளுமை!

ஆரி

ரஜினி-கமல்; விஜய்-அஜித். இவங்க நாலு பேருமே நான் வியக்கிறவங்க. முதல் ரெண்டு பேர்கிட்டயும் நின்னு சில நிமிடங்கள் பேசறது நடந்திடுச்சு. அதுவும் கமல் சாருடன் பிக் பாஸ் பயணம் எல்லாமே பசுமையான நினைவுகள்.

அஜித் - விஜய் ரெண்டு பேருக்கும் வில்லனா நடிக்கணும்; அஜித் சார் சமைச்சதைச் சாப்பிடணும். விஜய் சாருக்கு வில்லனா நடிக்கிறதுக்கு முன்னாடி அவரைச் சந்திச்சு சில நிமிடங்களாவது பேசணும்னு ஆசை. விஜய் சார் மனைவியும் என் மனைவியும் தூரத்து உறவினரும் கூட. ஆனாலும் இன்னும் எனக்கு அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை.

அவர்தான் அந்த ஆளுமை!

நட்டி நட்ராஜ் (ஒளிப்பதிவாளர் - நடிகர்)

என்னைப் பரவசப்பட வெச்சவர் அமிதாப் பச்சன். அவரோட `ஏக் லவியா' படத்துல சேர்ந்து வேலை பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. படத்துல அவருக்கு ஒரு ராயல் ஃபேமிலியில பாதுகாவலர் கேரக்டர். அவரோட லுக்கிற்காக நான், ஆர்ட் டைரக்டர் நிதின் தேசாய்னு சிலர் சேர்ந்து மூணு மணி நேரத்துக்கு மேல ஒர்க் பண்ணி, அப்புறம் நாங்களே ஒரு டிசைனை ஃபைனல் செய்து அவருக்கு அனுப்பியிருந்தோம்.

ஆனா அதுக்கு முன்னாடியே அவர் தன் மேக்கப்மேனை வெச்சு ஏகப்பட்ட லுக் டிசைன் பண்ணி வெச்சிருந்தார். அது கேரக்டருக்கு எவ்ளோ பொருத்தமா இருக்கும்னு அவர் விவரிச்சப்போ அவரோட டெடிகேஷன் எங்களை அசரடிச்சது. உதய்பூர்ல 38 நாள்கள் ஷூட். கரடுமுரடு சாலைகள்ல ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குக் குதிரைலதான் பயணப்படணும். அந்த வெயில்ல அசராம குதிரைல, ஒட்டகத்துல அவர் பயணப்பட்டதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுக்கிட்டே இருந்தேன். அவ்வளவு பெரிய உயரத்துக்குப் போயும் இன்னமும் தன் தொழில் மேல அவருக்கு இருந்த நேர்மை என்னை ரொம்பப் பரவசப்படுத்துச்சு.

அவர்தான் அந்த ஆளுமை!

சி.மகேந்திரன்

என் வாழ்வில் நான் சந்தித்த மறக்கமுடியாத ஆளுமை டேவிட் அய்யா. 1956-ல் ஆஸ்திரேலியாவில் கட்டடப் பொறியியல் கல்வியை நிறைவுசெய்த ஈழத்தமிழர் இவர். கென்யாவின் மொம்பசா நகரத்தை வடிமைக்கும் குழுவிற்குத் தலைமைப் பொறுப்பேற்றுக் கட்டி முடித்தவர். வாழ்நாள் முழுவதும் தான் உழைத்துச் சேகரித்த பணத்துடன் 1970-ல் இலங்கைக்குத் திரும்பி, ‘காந்தியம்’ என்னும் இயக்கத்தை, டாக்டர் ராஜசுந்தரத்துடன் இணைந்து உருவாக்கினார். பயங்கரவாதிகள் என்று கூறி டேவிட் அய்யாவும், டாக்டர் ராஜசுந்தரமும் வெலிகடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். 1983 ஜூலையில் அங்கு நடைபெற்ற இனவெறிப் படுகொலையில் 53 பேர் கொல்லப்பட்டனர்; இதில் டாக்டர் ராஜசுந்தரமும் ஒருவர். உயிர்தப்பிய அய்யா, கலவரத்திற்குப் பின்னர் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டார். மட்டக்களப்புச் சிறை உடைக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறி, கடல் மார்க்கமாகத் தமிழகம் வந்துசேர்ந்தார். அய்யாவுடன் 18 ஆண்டுகள் பழகியிருக்கிறேன். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்து என்னிடம் நம்பிக்கையோடு அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என்னைத் திகைக்கச் செய்திருக்கிறது!

அவர்தான் அந்த ஆளுமை!

இயக்குநர் ராஜேஷ் எம்.

நான் சின்ன வயசில இருந்தே ரஜினி சாரோட பயங்கர ஃபேன். அவரோட படங்கள் சரியா போகலைன்னா தேம்பித் தேம்பி அழுகிற அளவுக்கு ரசிகன்.

‘லிங்கா' டைம்ல சந்தானம் சாருக்காகக் கதை ரெடி பண்ணி வெச்சிருந்தேன். அது விஷயமா அவர்கிட்ட பேசும் போது, ‘‘ஹைதராபாத்ல ‘லிங்கா' ஷூட்ல இருக்கேன். அங்கே வந்துடுங்க’'ன்னார். தலைவரை அங்கே சந்திக்கற வாய்ப்பு கிடைச்சது. குஷியாகிடுச்சு. அவரோ ‘‘உங்களோட 'பாஸ் என்கிற பாஸ்கரன்' ரொம்பப் பிடிச்சிருந்தது'’ன்னு சொல்ல, இன்னும் ஹேப்பியாகிட்டேன். அப்புறம், சாருக்காக ஒரு கதை ரெடி பண்ணலாம்னு உட்காரும் போது, வேற வேற படங்கள்ல பிசியாகிட்டேன். சமீபத்துல சித்ரா லட்சுமணன் சார் ஒரு விஷயம் சொன்னார். ‘`ரஜினி சார் கலகலப்பான ஒரு படம் பண்ணினா நல்லா இருக்கும்’'ன்னார். அது இப்ப மைண்ட்ல ஓடுது. ரஜினி சாருக்காக ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலாம்னு நினைச்சிருக்கேன்.

அவர்தான் அந்த ஆளுமை!

பாவனா

டிவியில வந்தது முதல் ரஜினி சார் கூட ஒரு நிகழ்ச்சி செய்யணும் அல்லது அவரைப் பேட்டி எடுக்கணும்னு பெரிய ஆசை. ‘கோச்சடையான்’ லாஞ்ச் நிகழ்ச்சியைத் தொகுக்க வாய்ப்பு கிடைச்சப்ப ‘தேங்க் யூ கடவுளே’ன்னு கத்தாததுதான் பாக்கி. அந்த நிகழ்ச்சி வேற ஒரு சேனல்ல ஒளிபரப்பாக இருந்ததால நான் இருந்த சேனல்ல சரண்டராகி பெர்மிஷன் எல்லாம் வாங்கி அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். விழா முடிஞ்சதுக்கு அப்புறம்தான் அவர்கூட போட்டோவே எடுக்கலன்னு ஞாபகம் வந்தது. அந்த அளவுக்குப் பரவச மனநிலைல இருந்தேன். அவர் கிளம்பப்போறார்னு தெரிஞ்சு வேகமா அவர் பக்கத்துல போனேன். அவர் வணக்கம் வச்சுக்கிட்டே, ‘சூப்பரா பண்ணீங்க’ன்னு சொன்னார். அந்த இன்ப அதிர்ச்சில போட்டோ எடுக்கணும்னு கேக்க வார்த்தையே வரல. நல்லவேளை ஒரு போட்டோகிராபர் அந்த நேரம் கேண்டிடா போட்டோ எடுக்க, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச போட்டோ.

அவர்தான் அந்த ஆளுமை!

இயக்குநர் ராதா மோகன்

நான் சந்திக்க ஆசைப்படற ஒருத்தர்னா தோனி. தலைமைப் பண்பு இருக்கிற ஆளுமைன்னா நான் எம்.கே. காந்தியையும், எம்.எஸ்.தோனியையும்தான் சொல்வேன். வெற்றி தோல்வியில நிதானமா இருக்கறதைப் பத்தி அவர்கிட்ட கத்துக்கணும். திறமைகளைக் கண்டு பிடிக்கறதுலயும் தோனிக்கு நிகர் தோனிதான்.

அவர்தான் அந்த ஆளுமை!

அர்ஜுன் சம்பத்

பத்து வருஷத்துக்கு முன்னாடி மும்பையில சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை அவர் வீட்டுல சந்திச்சுப் பேசினது இன்னைக்கு நினைச்சாலும் பிரமிப்பா இருக்கு. தமிழர்கள்மீது அவர் கொண்டிருந்த அன்பை அந்தச் சந்திப்பு மூலம்தான் நான் தெரிஞ்சுகிட்டேன். ஈழத் தமிழர்கள் தொடர்பா அவ்வளவு பேசினார். ‘விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆதரவு தந்திருக்கணும்; அவங்களை வெச்சு காஷ்மீர்த் தீவிரவாதிகளை ஒடுக்கலாம்’ங்கிற வரைக்கும் பேசினார்.