தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலி என்பவரோடு மறுமணம் நடைபெற்றது. பலரும் இந்தத் தம்பதியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தன் மகள்கள் என்றேனும் ஒருநாள் தன்னிடம் வருவதற்கு பொறுமையாகக் காத்திருப்பேன் என உருக்கமான பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இமான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தப் பதிவில், ``2022, மே 15 ஞாயிற்றுக்கிழமை, மறைந்த பிரபல ஓவியரும் டிசைனருமான உபால்டு மற்றும் சந்திரா உபால்டு தம்பதியரின் மகள் அமலி உபால்டை மறுமணம் செய்தேன் என்ற செய்தியைப் பகிர்வதில் பெருமை அடைகிறேன். என் வாழ்வின் கடினமான தருணங்களில், மிகப்பெரிய பலமாக இருந்த என் தந்தை ஜே.கிருபாகர தாஸுக்கு, எப்போதும் நன்றியுணர்வோடு இருப்பேன். கடந்த சில வருடங்களாக நானும் என் குடும்பத்தினரும் எதிர்கொண்ட சவால்களுக்கு, குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணம், தீர்வாகவும், மகிழ்ச்சிக்கான மூலமாகவும் இருக்கும். அமலியை எனக்கு அறிமுகப்படுத்திய என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். அமலியின் மகள் நேத்ரா இதன் பிறகு எனக்கு மூன்றாவது மகள், நேத்ராவின் தந்தையாக இருப்பது அற்புதமான உணர்வைத் தருகிறது.
எங்கள் திருமண நாளில் என் அன்பு மகள்களான வெரோனிகா மற்றும் ப்ளெசிக்காவை நான் ரொம்பவே மிஸ் செய்தேன். ஆனாலும், அவர்கள் என்றாவது ஒருநாள் வீட்டுக்கு வருவார்கள் என்று பொறுமையாகக் காத்திருப்போம். அப்படி அவர்கள் வரும்போது நானும், அமலி, நேத்ரா மற்றும் உறவினர்கள் அனைவரும் அவர்களை அளவு கடந்த அன்போடு வரவேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.