கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“நான் ஒரு திடீர் விவசாயி!” - இயக்குநர் கே.வி.ஆனந்த்

இயக்குநர் கே.வி.ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் கே.வி.ஆனந்த்

விவசாயம்

‘பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கிப் பயிர்களை அழிக்கின்றன' என்ற செய்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வடமாநில விவசாயிகளைப் பதற வைத்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தமிழக மக்கள் மனதில், ‘காப்பான்' திரைப்படத்தில் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழிக்கும் காட்சிதான் நினைவுக்குவந்தது. இயற்கை விவசாயம், விவசாயிகளின் பிரச்னை பற்றிய அக்கறையோடு வெளியான அந்தப் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், நிஜவாழ்க்கையிலும் மண்ணோடு உறவாடிக்கொண்டிருக்கும் இயற்கை விவசாயி.
இயக்குநர் கே.வி.ஆனந்த்
இயக்குநர் கே.வி.ஆனந்த்

“பெட்ரிகோ பெலினி, ஆந்தரேய் தர்கோவ்ஸ்கி, குவெண்டின் டேரண்டினோ, ரோட்ரிகோ கார்சியா, அல்மதோர் என உலக சினிமாவின் சிறந்த இயக்குநர்களுடய படங்களைத் தேடித்தேடிப் பார்த்துக்கொண்டிருந்த நான், இப்போ... வெர்ட்டிசீலி லக்கானி, பேஸில்லஸ் சப்ட்டிலஸ், அசோஸ் ஸ்பைரில்லம், சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி என இயற்கை விவசாயத்துக்கான உரங்களைத் தேடித் தேடி வாங்கிக்கிட்டிருக்கேன். அந்தளவுக்கு இயற்கை விவசாயம் எனக்குள்ள கலந்துருச்சு” என்றபடி உற்சாகத்துடன் தனது பண்ணைக்குள் நம்மை வரவேற்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி.ஆனந்த்.

பிரமாண்ட ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்ற திரை அடையாளங்களைக் கொண்ட கே.வி.ஆனந்துக்கு, இப்போது ‘இயற்கை விவசாயி’ என்ற புதிய அடையாளமும் சேர்ந்திருக்கிறது. சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் இருக்கிறது இவரது பண்ணை. சுட்டெரிக்கும் மதிய வெயிலிலும் பண்ணைக்குள் இதமான காற்று வீச... நடந்தபடியே, தான் விவசாயத்துக்கு வந்த கதையை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“என் அப்பா வங்கி மேலாளர். நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். அதனால, சின்ன வயசிலிருந்தே எனக்கும் விவசாயத்துக்கும் பெரியளவுல தொடர்பே இல்லை. எங்க அம்மாவழி பாட்டி வீடு பழவேற்காட்டில் இருந்தது. கொள்ளுப்பாட்டி தனக்கோட்டி. சும்மாவே இருக்காது. தொட்டியில விதை போடுறது, அதுக்கு தண்ணி ஊத்துறதுன்னு எப்போதும் எதையாவது செஞ்சுகிட்டே இருக்கும். சாணம் கொட்டுற தொட்டியில கொய்யாச் செடி வளர்க்கும். வீட்டைச் சுத்தியுள்ள இடங்கள்ல பீர்க்கன், புடலைன்னு சின்னச் சின்ன செடிகளையெல்லாம் வளர்த்துச்சு. இந்தத் தோட்டம் ஒரு குடும்பத்தோட காய்கறித் தேவையைப் பூர்த்தி செய்யாதுன்னாலும் இடத்தைச் சும்மா போட்டு வைக்காம, அதைப் பசுமையாக்கணும்ங்கிற அந்த எண்ணம் இருக்கில்ல, அதுதான் முக்கியம். நான் அங்கே போகும்போதெல்லாம் பாட்டி கூடவே இருந்து இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பேன். அவ்வப்போது பாட்டிக்கு உதவி செய்வேன். கோழிகளுக்குக் குக்கம்னு ஒரு வகை நோய் வரும். அது வந்தா கோழியோட தலையைப் பிடிச்சு தண்ணியில முக்கி எடுப்பாங்க. பாட்டி வீட்டு கோழிகளுக்கு அந்த நோய் வந்தா நான்தான் தண்ணியில முக்கியெடுப்பேன். அதுல எனக்கு அலாதி ஆர்வம். அப்பவே விவசாயத்துக்கான விதை எனக்குள்ள விழுந்துருச்சுன்னு நினைக்கிறேன்.

ப்ளஸ் டூ படிச்சுக்கிட்டிருக்கும்போது, அடையாறுல ஒன்றரை கிரவுண்டுல சொந்த வீடு வாங்கி குடியேறினோம். வீட்டைச் சுற்றி காலி இடம் நிறைய இருந்தது. அந்த இடத்துல நிறைய செடிகளை வளர்க்க ஆரம்பிச்சோம். அந்த நேரத்துல நர்சரிகளுக்குப் போய்ச் செடிகளையும் விதைகளையும் வாங்கிட்டு வந்து விதைப்பேன். தோட்டக்கலை சார்பா ஜெமினி மேம்பாலம் பக்கத்துல அடிக்கடி மலர்க் கண்காட்சி நடக்கும். அங்கே போயும் மலர்ச் செடிகளை வாங்கிவந்து நடுவேன். இப்படித் தோட்டம் போடுறது மட்டுமே நான் விவசாயம்னு சொல்லிக் கொள்ளும்படியா இருந்தது. அப்பத்தான் எருவுன்னா மக்கி இருக்கணும், விதையை எப்படி விதைக்கணும்னு சில அடிப்படை அறிவைத் தெரிஞ்சுகிட்டேன். இந்த அனுபவம்தான் விவசாயத்துல இன்னைக்கு கைகொடுக்குது.

விவசாயத்தின் மீதிருந்த ஆர்வத்தால ப்ளஸ் டூவுக்குப் பிறகு, பி.எஸ்ஸி அக்ரி படிக்க நினைச்சேன். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழத்துக்கு விண்ணப்பிச்சேன். ஆனால், என் துரதிர்ஷ்டம் சீட் கிடைக்கலை. அதனால் பி.எஸ்ஸி இயற்பியல் படிச்சேன். கட் பண்ணா... என் வாழ்க்கை அப்படியே வேற டிராக்ல மாறிடுச்சு. போட்டோகிராபி மீதிருந்த ஆர்வத்தால பல பத்திரிகைகளுக்கு ஃப்ரீலான்சர் போட்டோகிராபரா வேலை செஞ்சேன். அதையடுத்து பி.சி.ஸ்ரீராம் சாரிடம் அசிஸ்டென்டா சேர்ந்தேன். அதற்கடுத்து சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குநர்னு அடுத்தடுத்து ஓடிக்கிட்டே இருந்தாலும் ஓர் ஓரத்துல விவசாயம் பத்தின எண்ணம் இருந்துகிட்டே இருந்துச்சு. நான் ஒளிப்பதிவாளரா இருந்த சமயம்... இந்த மாந்தோட்டத்த கையிலிருந்த சேமிப்பையெல்லாம் வெச்சு வாங்கினேன்” என்றவர், வாழைக்கன்றுகள் நடவுசெய்ய வேண்டிய இடங்களை வேலையாட்களுக்குச் சொல்லிவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

மா விவசாயத்துல கவாத்து அவசியம். அதைப் பண்ணாத்தான் மரம் வளர்வதற்கான காற்றும் சூரிய ஒளியும் கிடைக்கும்.
மா விவசாயத்துல கவாத்து அவசியம். அதைப் பண்ணாத்தான் மரம் வளர்வதற்கான காற்றும் சூரிய ஒளியும் கிடைக்கும்.

“நான் ஒரு திடீர் விவசாயி. ஆரம்பத்துல நிலத்த வாங்கிப் போட்டுட்டோம். ஆனா, அதுல என்ன செய்யணும்னு தெரியல. வாரக் கடைசியில தோட்டத்துக்குப் போவோம். சும்மாவே நிலத்தைக் கொத்தி விட்டுட்டு, குப்பையெல்லாம் ஓர் இடத்துல போட்டுட்டு வந்துவிடுவோம். வேலையாட்கள் அதைச் சரியா பராமரிக்கிறாங்களானுகூட தெரியாது. இந்தப் பண்ணை மொத்தம் 15 ஏக்கர். மா விவசாயத்தோட நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கும் பயிரிடுறோம். ஆரம்பத்துல ரசாயன உரம்தான் பயன்படுத்திட்டு இருந்தேன். காலப்போக்கில் இயற்கை விவசாயத்துக்கான அவசியத்தை உணர்ந்து, கடந்த சில வருஷமா தீவிரமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன்.

‘நம்ம தொழில் சினிமாதான், விவசாயம் இல்ல... விவசாயம்ங்கிறது ஒரு பகுதிதான்'னு மனசு சொன்னாலும் விவசாயத்து மேல இருக்கிற ஈடுபாடு குறையல. என்னுடைய ஸ்க்ரிப்ட் வொர்க்கைவிட விவசாயத்தின்மீது அதிக நாட்டம் உருவாகுது. கொரோனாவால ஊரடங்கு வந்ததுக்கு அப்புறம், விவசாயத்துல இன்னும் தீவிரமாயிட்டேன். முன்னெல்லாம் மாசத்துக்கு ஒருமுறை, வாரத்துக்கு ஒரு முறைதான் பண்ணைக்கு வருவேன். இப்போ வாரத்துக்கு மூணு நாள்கள் வந்துடுறேன். விவசாயத்துல என்ன நடக்குது? அடுத்து என்ன செய்யணும்னு தோணிக்கிட்டே இருக்குது.

திருவள்ளூர் மாவட்டம்னாலே மா விவசாயம் அதிகம். அந்த வகையில என்னோட தோட்டத்துலயும் மா விவசாயம் இருக்கு. வாங்க மரவள்ளிக்கிழங்குத் தோட்டத்துக்குள்ள போகலாம்” என்றவர், மரவள்ளித் தோட்டத்துக்குள் நுழைந்தார். “மரவள்ளிக்கிழங்கு கரணையை நட்டுட்டா போதும். 10 மாசத்துல மகசூலுக்கு வந்திடும். பாத்தீங்களா எப்படி பச்சைக் கட்டியிருக்குது'' என்றவர் தோட்டத்தைச் சுற்றி வந்தார்.

இயற்கை விவசாயத்துக்கான உரங்களைத் தேடித் தேடி வாங்கிக்கிட்டிருக்கேன். அந்தளவுக்கு இயற்கை விவசாயம் என்னுடன் ஒன்றரக் கலந்துருச்சு”
இயற்கை விவசாயத்துக்கான உரங்களைத் தேடித் தேடி வாங்கிக்கிட்டிருக்கேன். அந்தளவுக்கு இயற்கை விவசாயம் என்னுடன் ஒன்றரக் கலந்துருச்சு”

``தோட்டத்துல சின்ன அளவுல பண்ணைக்குட்டை அமைச்சோம். அதுல மீன்களை விட்டோம். ஆனா, சில நாள்கள்லயே எல்லா மீன்களும் செத்து மிதந்துருச்சு. பண்ணைக்குட்டையில இருந்த தவளைகளும்கூட செத்து மிதந்துச்சு. என்ன காரணம்னே புரியலை... ‘இந்தக் கேமராவும் சினிமாவும் இல்லைன்னா... நீ அஞ்சு பைசாவுக்குக்கூட லாயக்கில்லடா’ன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அது உண்மைதானோன்னு சந்தேகம் வந்துருச்சு. சரி... இதுவும் ஒரு கற்றல்தான். இதுக்கு காரணம் என்னான்னு தேடினபோது பண்ணைக்குட்டை மேல தார்பாய் விரிச்சு அதுமேல தண்ணி விட்டிருந்தோம். அதுல இருந்த ரசாயனம் கலந்து இதுமாதிரி ஆயிருக்கும்னு புரிஞ்சுகிட்டேன்.

சின்சியரா பண்ணையில உழைச்சா, விவசாயத்திலயும் சம்பாதிக்கலாம். இப்போ மூணு வருஷமா நானே இறங்கி செய்றதால, பண்ணையோட லாப நஷ்ட கணக்கு தெரியுது. இந்த 53-வது வயசுலயும் புதுசா ஏதாவது தெரிஞ்சுகிட்டு இருக்கேன்னா அது விவசாயத்துலதான். என்னுடைய பண்ணை ஒரு முன்னோடி பண்ணைனு சொல்ல முடியாது. ஆனா, முன்னோடி பண்ணையா மாறுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உருவாகிட்டு இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தார்.