Published:Updated:

“குறைவாக எழுதுவது ஒரு மனநோய்!”

மனுஷ்யபுத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
மனுஷ்யபுத்திரன்

ஆரம்பத்தில் கவிஞர்கள் எழுதுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளிகளில் அச்சாகும் சிறுபத்திரிகைகள் மட்டுமே இருந்தன.

“பாதியில் விட்டுவிட்டு வந்த வேலைகள் நிறைய இருந்தன. அறுவை சிகிச்சைக்கு என் உடலைச் சமர்ப்பித்துக் கையெழுத்திட்டேன். வாழ்வில் நாம் நம்மையே ஒப்புக்கொடுக்கும் உடன்படிக்கைகளில் கையெழுத்திடும் தருணங்கள் விவரிக்க முடியாதவை.” அப்பலோவின் ஐ.சி.யூ அறையில் அனுமதிக்கப்பட்ட வாதை நிறைந்த கணங்களை விவரித்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். வாழ்க்கையின் சிக்கலான கட்டத்திலிருந்து மீண்டுவந்தவருக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கும் செய்தி, இந்த ஆண்டு அவருடைய 11 கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

“வாழ்வின் சில தருணங்களில் `இதுதான் துயரத்தின் எல்லை’ என நாம் சிலவற்றை நினைத்திருப்போம். அவற்றையெல்லாம் எளிதாகக் கடக்கும்படி வாழ்க்கை நமக்குப் புதிய ஒரு வலியைக் கொடுக்கும். சமீபத்திய என் உடல் நிலையில் நான் அதை உணர்ந்தேன். ஒரு வருடமாகவே உடல்நிலை அசௌகரியமாக இருந்தது. நண்பர்கள் சிலர் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் எனக்கோ எதிர்கொள்ள பயம் எனச் சொல்லலாம். ஒருவழியாகப் பரிசோதனைக்குச் சென்றபோது இதயத்தின் வால்வுகளில் 90 சதவிகிதம் அடைப்பிருந்தது தெரியவந்தது. உடனடியாக அறுவைசிகிச்சை செய்யச் சொன்னார்கள். செய்வதறியாது தலைவர் ஸ்டாலின் அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். என்னைத் தொடர்புகொண்ட தலைவர் உடனடியாக மருத்துவமனையில் சேரச் சொன்னார். அடுத்த 10 நிமிடத்தில் அப்போலோவிலிருந்து அழைப்பு வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அடுத்த 30 நிமிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன், சுப.வீ உடன் நின்றனர். வாழ்வின் நிராதரவு நிமிடங்களில் `நான் உடனிருக்கிறேன்’ என்ற குரல் அரண் போன்றது. அந்தக் குரல் தலைவர் ஸ்டாலினுடையது. மருத்துவமனை நினைவுகளை வைத்து `வாதையின் கதை’ என்ற கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளேன்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

“11 நூல்கள், கிட்டத்தட்ட 1100 கவிதைகள். இவற்றுக்கான முக்கியத்துவம் என்று எதைக் கருதுகிறீர்கள்?”

“நாம் இந்தச் சமகாலத்தில் எத்தகைய மனிதர்களாக இருக்கிறோம் என்பதற்கான சாட்சியங்கள்தாம் இந்தக் கவிதைகள். பல நேரங்களில் நாம் சிந்திக்கக்கூட அவகாசமின்றி உழல்கிறோம். நம் முகத்தை நாமே கண்ணாடியில் பார்க்கத் தவறுகிறோம். சதா பரிதவிப்போடு அலைந்துகொண்டிருக்கும் மனித மனதை ஒரு கணம் `நில்’ எனச் சொல்லும் இந்தக் கவிதைகள். இழந்த ஒரு காதலை, அடைந்த ஒரு பிரியத்தை, சமூக நெருக்கடிகளை, வாதைகளை நினைவூட்டும். இதுதான் உனக்கு நடந்திருக்கிறது என விழிப்புணர்வு கொள்ளச் செய்யும். மதிப்புமிக்க ஒரு மாற்றத்தைக் கொடுக்கும். திரும்பிப்பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“நவீன கவிஞர்கள் குறைவாக எழுதும் வழக்கம் கொண்டவர்கள். ஆனால், நீங்கள் வருடத்துக்குக் 1000 கவிதைகள் எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது?’’

“ஆரம்பத்தில் கவிஞர்கள் எழுதுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளிகளில் அச்சாகும் சிறுபத்திரிகைகள் மட்டுமே இருந்தன. எனவே நான்கைந்து கவிதைகளே எழுத வாய்ப்பிருந்தது. காலப்போக்கில் குறைவாக எழுதுவதென்பது ஒரு கோட்பாடாகிப்போனது. அது ஒரு மனநோய். ஒரு பறவை எவ்வளவு தூரம் பறக்கமுடியும் என்பது அதன் இயல்பு சார்ந்த விஷயம். எழுதுவது கவிஞனின் ஆற்றல் சார்ந்தது. அவரவரால் எவ்வளவு தூரம் சாத்தியப்படுகிறதோ அவ்வளவு தூரம் பயணிக்கிறோம். உலகில் எங்குமே குறைவாக எழுதினால்தான் நல்ல எழுத்து எனச் சொல்லப்படவில்லை. எதை எழுதுகிறோம் என்பதே பிரதானம். நவீன கவிஞன் வெகுஜன இதழ்களில் எழுதக்கூடாது, சினிமாவில் வேலை பார்க்கக்கூடாது, அரசியல் பார்வையிருந்தால் அவனது கலை புனிதத்துவம் கெட்டுவிடும் போன்ற மனநோய்கள் தமிழ் இலக்கியச் சூழலில் உள்ளன. இளம் தலைமுறையையும் இந்த மனநோய்க்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.”

“சமகாலத்தில் நிறைய போராட்டங்கள் நடக்கின்றன. எழுத்தாளர்கள் பலரும் போராட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். படைப்புகளில் அதன் சாரம் வெளிப்படுகிறதா?’’

“என்னைப் போன்ற வெகுசில எழுத்தாளர்களே தொடர்ந்து போராடுகிறோம். எங்களுக்கு அது வாழ்வின் ஒரு அங்கம். யதார்த்த களத்திலும், எங்கள் படைப்பின் வழியாகவும் எதிர்வினையாற்றுகிறோம். சிலருக்கு இந்தப் போராட்டங்கள் பற்றிக் கவலையில்லை. அவர்கள் இறந்துபோன எழுத்தாளர்கள் பற்றித் தொடர் எழுதுவார்கள். தான் எழுதிய கதைகளுக்கும், கவிதைகளுக்கும் ரகசிய உரையாடல் நடத்திக்கொண்டிருப்பர். கண்டன அறிக்கையில் ஒரு கையெழுத்துகூடப் பெறமுடியாது. அவர்கள்தான் `எழுத்தாளனுக்கு இந்தச் சமூகத்தில் இடமில்லை’ எனப் புலம்பிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் அக்கறையில்லாமல் இல்லை; தந்திரமாக இருக்கிறார்கள். கொந்தளிப்பான காலகட்டத்தில் நம் நாடு இருக்கிறது. போராடுவதைத் தவிர நமக்கு வேறு வாய்ப்பில்லை.”

“ஒரு படைப்பாளியாக, இஸ்லாமியராக அயோத்தி தீர்ப்பையும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நான் ஒரு அந்நியனாக உணர்கிறேன். இது என்னுடைய நாடு; அதை யாரும் மறுக்கமுடியாது என ஆழமாக நம்பிக்கொண்டிருந்தேன். பாபர் மசூதி தீர்ப்பு முதல்முறையாக என்னை இந்த மண்ணிலிருந்து அந்நியப்படுத்தியது. எல்லோருடைய இறுதிப்புகலிடம் நீதி அமைப்புகள்தாம். அந்தத் தீர்ப்பின் அர்த்தம் மிகத்தெளிவானது. எதைக் கேட்கிறார்களோ, அதை எந்த நிபந்தனையுமின்றி இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். பெரும்பான்மை வாதத்துக்கு அடிபணிந்துபோனால்தான் இங்கு வாழ முடியும் என்பது தீர்ப்பாக நம் கண்முன் நிற்கிறது. சி.ஏ.ஏ, என்.ஆர்.சி போன்றவை சிறுபான்மையினரை நிரந்தரப் பாதுகாப்பின்மைக்குக் கொண்டு செல்லும்; தனிமைப்படுத்தும்; எதிர்காலத்தில் இது சமூக மோதல்களுக்கு வழிவகுக்கும். இந்தியா இன்று பாகிஸ்தானைவிட மோசமாக இருக்கிறது. இதைச் சொல்வதற்கு ஒரு இந்தியக் குடிமகனாக எனக்கு அவமானமாக இருக்கிறது.’’

“ரஜினி, கமல் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றியை பாதிக்குமா?’’

“எந்தத் தனிமனிதராலும் தி.மு.க-வை அழிக்க முடியாது. ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விடுதலையைக் கொடுத்தது திராவிட ஆட்சி. ஒடுக்கப்பட்டவர்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாக நிற்கும் தி.மு.க-வை வீழ்த்த நினைக்கிறார்கள். அவர்களால் சில பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இட ஒதுக்கீடு, சமூக நீதி போன்றவற்றை அழிக்க திராவிட அரசியலின் அடித்தளத்தை அழிக்க வேண்டும். அதற்கு வாக்குவங்கியைச் சிதறச் செய்ய வேண்டும் என உருவாக்கப்பட்ட பிம்பங்கள்தான் இவர்கள்.”