Published:Updated:

“இப்போ இசையில் அடையாளமே இல்லை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடும்பத்துடன் இசையமைப்பாளர் வித்யாசாகர்
குடும்பத்துடன் இசையமைப்பாளர் வித்யாசாகர்

நம்ம கையில் என்ன இருக்கு. நாம ஒரு கருவிதானே!

பிரீமியம் ஸ்டோரி
திரையிசையில் வித்யாசாகரை விட்டுவிட்டு வரலாறு எழுதிவிட முடியாது. ஆர்ப்பாட்டமில்லாத இசையோடு மொழிக்கும் வழி திறந்தவர். உள்ளங்கைப் பனித்துளிகள் பொலபொலவெனக் கரையும் வேகத்தில் மெலோடிகள் அவர் வசமாகின. உள்ளத்திற்குத் தெளிவும், குழப்பமற்ற மனதும், நெஞ்சுக்கு நிம்மதியையும் தருபவையே வித்யாசாகரின் பாடல்கள். வெயிலோ, மழையோ... மரங்கள் அடர்ந்து இருந்தால்தான் அழகு என்பது போன்ற சாலையில் அவரது ‘வர்ஷாவல்லகி’ ஸ்டூடியோ இருக்கிறது. இசையில் ஆண்டுகளைக் கடந்த கனிவில் இருந்தவரோடு தொடங்கித் தொடர்ந்தது உரையாடல்.

“சின்ன வயதிலிருந்தே இசையை விரும்பி வந்திருக்கிறேன். அதில் இருக்கிற மந்திரத் தன்மை, பரவச நிலைக்கு அருகில் போற விதம்னு எனக்கு ரொம்பப் பிடித்தது. இதை நான் ஒரு வேலையாகச் செய்யவில்லை. வேள்வியாகச் செய்கிறேன். முழுக்க முழுக்க பணத்துக்காகவோ, யாருக்கோ கட்டுப்பட்டும் செய்யவில்லை. இதை என் வாழ்க்கையாகவே கருதுகிறேன்” என்கிறார்.

“இப்போ இசையில் அடையாளமே இல்லை!”

“ராஜா, ரஹ்மான்னு ஒரு ட்ரெண்ட் செட் உருவாக்கிப் பயணித்தபோது உங்களை எப்படித் தனித்துவப்படுத்திக் கிட்டிங்க..?”

“எனக்கும் ஒரு அடையாளம் இருந்தது. அதை மக்கள் கண்டுகொண்டார்கள். மக்கள் மனதில் என் படங்கள் எந்த அளவிற்கு உள்ளே போய் தங்கியிருக்கோ, அதுதான் என் இடம். இன்னிக்கும் என் பாடல்கள் பேசப்படுகின்றன. அந்த இடத்திலிருந்து யாராலும் என்னைத் தள்ள முடியாது. நல்லிசையும் மெல்லிசையும் ரசிக்கிற ஒவ்வொருவர் மனசிலும் நான் இருக்கேன். சினிமா ஒரு கூட்டு முயற்சின்னா அதில் என்னுடைய பகுதி எப்போதும் நிறைவாக இருந்திருக்கு. தனிப்பட்ட ஒரு பாதை வகுத்துப் போயிருக்கேன். இந்த அறைக்குள்ளே உட்கார்ந்து பாடல்கள் போட்டது எத்தனையோ கோடிப் பேரைப் போய்ச் சேர்ந்திருக்கும். தனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கிறது சினிமாவில் கஷ்டம். எத்தனை கோடி மக்கள் இருக்கிற இடத்தில் நமக்குன்னு ஒரு தனி இடம் கிடைக்கிறது எவ்வளவு நல்ல விஷயம். தங்களுடைய பதிவை இங்கே வச்சிட்டுப்போக எத்தனை பேரால் முடியுது? மொழியின் மீது எனக்குக் காதல் இருந்தது. அது பாடல் வரிகளில் அற்புதமா வெளிப்பட்டிருக்கு. கவிஞர்களை எழுதச்சொல்லி அதற்கேற்ற மாதிரி டியூன் போட்டிருக்கேன். அதில் இனிமையும் குழைவுமா கவிஞர்கள் வெளிப்பட்டாங்க. எப்படிப் பார்த்தாலும் மக்களின் ரசனையை உயர்த்த வேண்டியது நம்ம தார்மிகப் பொறுப்பா இருக்கணும். நல்ல கற்பனைக்கு இடம் கொடுத்தால் மொழியே சந்தோஷப்பட்டு துள்ளிக்கிட்டு வரும்.”

குடும்பத்துடன் இசையமைப்பாளர் வித்யாசாகர்
குடும்பத்துடன் இசையமைப்பாளர் வித்யாசாகர்

“டிஜிட்டல் ஒலி சேர்க்கை மட்டுமே ஒரு நல்ல இசையை உருவாக்கிடுமா?”

“உபகரணங்களை வைச்சிட்டு என்ன பண்றது... மூலப்பொருள் இங்கே இருக்கணும் (நெற்றியைக் காட்டுகிறார்). இவ்வளவு உபகரணங்களை வைத்துக்கொண்டு இங்கே யாரும் சிறப்பாகப் பண்ணப்போறது கிடையாது. அதனால் சிறந்த இசையமைப்பாளர் ஆகிட முடியாது. இதெல்லாம் இல்லாத காலத்தில் வந்த பாட்டுகளைத்தான் இன்னும் இங்கே கேட்டுக்கிட்டு இருக்காங்க. பிற்காலத்தில்தான் நீங்க சொன்ன பாட்டுக்களை யார் கேட்கிறாங்கன்னு தெரியும். முன்னாடி 60 பேருக்குமேலே லைவ்ல வாசிப்பாங்க. அதைத்தான் நம்மையறியாமல் கேட்டுக்கிட்டும் பாடிக்கிட்டும் இருக்கோம். எங்கே தாக்கம் இருக்குன்னு நீங்கதான் சொல்லணும். மொழியே தெரியாமல் என்ன வரும்னு நினைக்கிறீங்க. வரக்கூடிய புதுமை உங்களுக்குத் திறமை இருந்தாத்தான் கூடவரும். நீங்க ஒண்ணும் செய்யாமல் இசையோடு பாடல் தனியாக வந்திடாது. பாடல்னா அதன் விலாசமே இப்ப மாறிப் போயிருக்கு. ஒரு பாட்டு ஹிட்டாகிட்டால் அடுத்த பாட்டு அதே மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுறதில்லை. அடுத்து வேறு வகையான கிரியேட்டிவ் வேலைக்குத்தான் ஆசைப்படுவோம்.”

“இப்போ இசையில் அடையாளமே இல்லை!”

“இப்ப இருக்கிற இசையமைப்பாளர்களின் இசையைக் கேட்க, அனுபவிக்க வித்தியாசமா உணர முடியுதா?”

“எல்லோருமே புதுமையைத் தேடுகிறார்கள். இந்தப் புதுமையில் ரசிக்கும்படியாக இருப்பது குறைவாக இருக்கிறது. நான் படைப்பாளி மட்டுமல்ல, ரசிகனும் கூட. அப்படி மனதில் நிறைய இடங்களை உணர முடியலை. முன்னாடி பாடல்களில் இன்னார் இன்னார்னு அடையாளம் இருந்தது. இப்போ அது இல்லாமப்போச்சு. ஆரம்பத்தில் சிலதைக் கேட்டிருக்கேன். இசைன்னா அது சினிமா இசை மட்டும்தான்னு நினைக்கிறதுதான் இங்கே சாபம். இப்போ ஒரு பாடலின் வெற்றி கதாநாயக பிம்பத்தின் பாப்புலாரிட்டியை வைத்து மதிப்பிடப்படுது. பாடல் அஞ்சு வருஷம் நிற்கிறதே கடினமா ஆகிப்போச்சு. எல்லோராலும் ரசிக்கப்படும் புதுக் கற்பனைகள் குறைவாகிவிட்டது. ‘இதுமாதிரி இதுக்கு முன்னாடி கிடையாது’ன்னு சொல்றமாதிரி எதுவும் இல்லை. எங்களுக்கெல்லாம் சிறந்த பாடல் தரணும் என்ற எண்ணம் இருந்ததே தவிர எல்லோரும் எங்களைப் பத்திப் பேசணும்னு நினைச்சதில்லை. நமக்குத் தெரிந்த இசையை இளைஞர்களுக்குக் கொடுத்துட்டுப் போகணும்னு மட்டும் தோணுது. அதற்குச் சூழல் அமையணும். நாம எடுத்துட்டுப்போக ஒண்ணுமே இல்லை. கொடுத்துட்டுப் போகத்தான் இருக்கு.”

“ஒருத்தர் விடாமல் உங்க எல்லோருக்கும் இறை நம்பிக்கை இருக்கே!”

“நம்ம கையில் என்ன இருக்கு. நாம ஒரு கருவிதானே! கம்போஸிங் உட்கார்ந்தால் மாயம் செய்த மாதிரி ட்யூன் கொட்டுதே, அதெல்லாம் எங்கேயிருந்து வருது! இறை நம்பிக்கை எனக்கு வேற ஒண்ணுமில்லை... உணர்தல்.”

“உங்கள் குடும்பத்திலிருந்து இசை வாரிசு யாரும் வரலையா?”

“மகன் ஹர்ஷவர்தன் இப்போ பியானோவில் பல கட்டங்களில் தேர்ச்சி அடைந்திருக்கிறார். பல மியூசிக் டைரக்டர்களிடம் போய் வாசிக்கிறார். அனுபவம் சேரட்டும். என் மகன்னு இல்லாமல் அவரோட திறமைக்காக அவரைத் தேடுகிறார்கள். கூடவே நடனமும் வருது. நடிக்கவும் ஆர்வம் இருக்கும்போல. அவருடைய ஆசைக்கும் அக்கறைக்கும் அவரோட விருப்பங்களுக்கும் நான் குறுக்கே நிற்கிறதில்லை.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு