Published:Updated:

“சசிகலா ஏன் வீரத்தமிழச்சி?” - காரணம் சொல்லும் பாரதிராஜா!

பாரதிராஜா
பிரீமியம் ஸ்டோரி
பாரதிராஜா

அரசியல்ல ஏதாவது தாக்கத்தை உண்டாக்குவார். அவரைக் குறைச்சு மதிப்பிடவே கூடாது. நம்ம பரமக்குடிக்காரர்.

“சசிகலா ஏன் வீரத்தமிழச்சி?” - காரணம் சொல்லும் பாரதிராஜா!

அரசியல்ல ஏதாவது தாக்கத்தை உண்டாக்குவார். அவரைக் குறைச்சு மதிப்பிடவே கூடாது. நம்ம பரமக்குடிக்காரர்.

Published:Updated:
பாரதிராஜா
பிரீமியம் ஸ்டோரி
பாரதிராஜா
பேட்டி என்ற வார்த்தை இயக்குநர் பாரதிராஜாவுடனான சந்திப்புகளுக்குப் பொருந்தாது. தன்மையான மனிதரின் வெளிப்படையான உரையாடலாகவே ஒவ்வொரு சந்திப்பும் மனதில் நிற்கும். சினிமா, மொழிமீதான அவரின் காதல் மூப்பறியாதது. நீலாங்கரை வீட்டில் ‘வாப்பா’ எனச் சொல்லி அமரும் பாரதிராஜாவின் வயசு இப்போதைக்கு ஏறாது.

‘‘இந்த வாழ்க்கையே பேரனுபவமா இருக்கு. ஸ்கூல் வாத்தியார் மாதிரி எழுதி எழுதி அழிச்சுக்கிட்டே போகுது. நான் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கு. உணர்ந்ததில், அறிந்ததில் கொஞ்சம் தான் சொல்லி யிருக்கேன். இப்ப காலத்தோடு ஒரு விளையாட்டு விளையாடிக்கிட்டு இருக்கேன். எதுவோ என்னைப் பிடித்துக் கட்டி வைக்குது. அப்புறம் அதுவே என்னை அவிழ்த்தும் விடுது. கழுவிவிட்ட மாதிரி காலையில் இருக்கிற மனசு, சாயங்காலம் மாறிப் போயிடுது. இந்த வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் சினிமாவில் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கு...’’ தெளிவாகப் பேசுகிறார் பாரதிராஜா.

பாரதிராஜா, சசிகலா
பாரதிராஜா, சசிகலா

``பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் மாதிரி ஒரு பிரமாதமான டீம் இப்ப பெரிய அளவில் வந்திருக்கணுமே?’’

‘‘ஒவ்வொரு காலத்திற்கும் ஒருத்தர் இருந்திருக்காங்க. பீம்சிங், ஸ்ரீதர்னு இருந்த காலத்தில் நான் ஸ்ரீதரின் பாதிப்பில் வந்தேன். எங்களுக்குள்ளே நல்ல நேர்த்தியான போட்டி இருந்தது. இப்ப வெற்றிமாறன் வந்து நிக்கிறானே! எல்லோரும் ஒருகாலத்தில் என்னை வியந்து பார்க்க, நான் இப்போ வெற்றிமாறனை அண்ணாந்து பார்க்கிறேன். அவன் கொஞ்சம் வன் முறையைக் குறைச் சிட்டால், அவனை மிஞ்ச முடியாது. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிட்டு வந்திருக் கான். அப்படித்தான் இருக்கும். நான் குளம், குட்டை மண்ணுல கிடந்து புரண்டதால் அப்படியே வெளியே வந்தேன். ‘சிகப்பு ரோஜாக்க’ளில் ரத்தத்தை ருசி பார்க்க பூனை வர்றதோட சரி… வயலன்சை நிறுத்திக்கிட்டேன். அமீர், ராம், சுதா கொங்கரா, ஹலிதா ஷமீம்-னு நம்பிக்கை முகங்கள் நிறைய இருக்கு. சேரன் கொஞ்சம் தாமதமானாலும் இதோ வந்திடுவான். மாற்றங்கள் நடக்குது. சமீபத்தில் வினோத்ராஜின் ‘கூழாங்கல்’ படம் பார்த்து வியந்திட்டேன். எல்லாம் ஒவ்வொண்ணா நடக்கும். ரசனைகள் விரிவடையும்போது எல்லாம் மாறும்.’’

பாரதிராஜா
பாரதிராஜா

``திடீர்னு நடிப்பதில் ஆர்வமாகிட்டீங்க...’’

‘‘1964-ல் நடிக்கத்தான் வந்தேன். யாரும் ஏத்துக்கலை. அப்புறம்தான் 76-ல் இயக்குநர் ஆனேன். ‘கல்லுக்குள் ஈரம்’ செயற்கையாக அமைஞ்சுபோச்சு. நித்திலன் இயக்கிய ‘குரங்கு பொம்மை’யில்தான் நடிப்பு அகப்பட்டது. சுசீந்திரன் ஐந்து படங்களில் நடிக்க வெச்சான். எத்தனை பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். நடிப்பு எனக்கு அலுக்கவே இல்லை. தெருத்தெருவா அலைஞ்சாலும் திரும்ப நிலைக்கு வர்ற தேர் மாதிரி எங்கே போனாலும் சினிமாவில்தான் வந்து நிற்கிறேன். ‘இந்த ரோலை நீங்கதான் சார் பண்ணணும்’னு வந்து நிப்பாங்க. நான் வேணாம் வேணாம்னு ஓடுறதும், அவங்க விடாம என்னைத் தேடுறதும்... இந்த விளையாட்டு நடந்துக்கிட்டு இருக்கு. ‘பார்த்தியா எனக்கு எவ்வளோ தேடுதல் இருக்கு’ன்னு பெருமையில, திமிர்ல இதைச் சொல்லலை. கலை ஒரு கட்டம் வரைக்கும்தான் அடையாளம். அப்புறம் அதுவே அனுபவமா மாறிடுது. அபூர்வமாக சில பேர் சொல்லும்போது ‘அட ஆமாம்ல, நான்தான் இதைப் பண்ணணும்’னு மனசு அதுவாகவே விழுந்திடும். உள்ளே இருக்கிற நடிகன், அந்த நிமிஷமே ஸ்பாட்டுக்கு நடிக்கக் கிளம்பிடுவான். கதாபாத்திரங்களை யோசித்து இறங்கிட்டா, காதலி மாதிரி, பொண்டாட்டி மாதிரி, கதாபாத்திரங்கள் மேலே ஒரு பிரியமே வந்துடும்.’’

பாரதிராஜா
பாரதிராஜா

``கதாசிரியர் ரத்னகுமார் இளையராஜாவைப் பற்றிப் பேசியது சர்ச்சை ஆகியிருக்கே?’’

‘‘இளையராஜா பற்றிக் குறையாகப் பேச யாருக்கு இங்கே தகுதி இருக்கு? ரத்ன குமாருக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா? சகதியில் போய்க் கல்லெறிஞ்சா என்ன ஆகும்! ராஜாவைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல அவருக்குத் தகுதி, தராதரம் இருக்கா! ராஜா, சரஸ்வதியோட புதல்வன்யா. ‘ராஜா வாழ்கிற காலத்தில் நாமும் வாழ்கிறோம்’ என்பதுதான் பெருமை. அவனோடு இருந்து பழக வாய்ப்பு கிடைச்சதெல்லாம் பாக்கியம்.’’

பாரதிராஜா, இளையராஜா
பாரதிராஜா, இளையராஜா

``உங்கள் நண்பர் ரஜினி அரசியலுக்கு வர மறுத்திட்டாரே!’’

‘‘ரஜினி ரொம்ப அபூர்வம். பணம், புகழ் எல்லாத்தையும் அவர் பார்த்துவிட்டார். அதெல்லாம் இல்லை விஷயம்... எப்பவுமே அவர்கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியைப் பார்த்துக்கிட்டே வர்றேன். அதான் நான் தேடுறதும். நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கறதே பெரிய சவால். ரஜினி அந்த சவாலில் ஜெயிச்சவர். ஒப்பனையின்றி வெளியே வர்றார். இந்த வயதிலும் நடிக்கிறார். ஆக்டிவா இருக்கார். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

நானே அவரைப் பார்க்கும்போதெல்லாம் ‘அரசியலுக்குள்ளே வந்துடாதீங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். படம் நடிக்கட்டும், ஆன்மிகத்தில் நிம்மதி தேடட்டும். நான் ரொம்பப் பரபரப்பா இருந்த ரஜினியையும் பார்த்திருக்கேன். ஆழ்கடல் மாதிரி அமைதியா காட்சி தர்ற ரஜினியையும் பார்த்திருக்கேன். அவர்கிட்ட மாறாத விஷயம், நடிப்பு மேலே இருக்கிற துடிப்பு. அதிலேயே இருந்துட்டுப் போகட்டும்யா, விடுங்க…’’

பாரதிராஜா, ரஜினி, கமல்
பாரதிராஜா, ரஜினி, கமல்

``கமல் அரசியல் உங்களுக்கு உகந்ததாக இருக்கா..?’’

‘‘அவர் பெரிய கலைஞன். கமலைச் சீண்டி சீண்டி அரசியலுக்குக் கொண்டு வந்துட்டாங்க. கமல் புத்திசாலி. தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துவிடுவார். அவர் சம்பாதிக்காத சம்பாத்தியம் இல்லை. கிடைத்த புகழ் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. கமல் எதையும் தொடமாட்டார். தொட்டா விடமாட்டார். அரசியல்ல ஏதாவது தாக்கத்தை உண்டாக்குவார். அவரைக் குறைச்சு மதிப்பிடவே கூடாது. நம்ம பரமக்குடிக்காரர். வரலாம்... தப்பில்லை.’’

பாரதிராஜா, சீமான்
பாரதிராஜா, சீமான்

``சீமானின் அரசியல் நிலைப்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘இனம், மொழி இரண்டிலும் பிடிகொடுக்காமல் நிற்பான் சீமான். அவனுக்கு ஒரு சிறப்பு உண்டு. உலக அரசியலை அவன்கிட்டே பேசிப் பாருங்க, கரைச்சுக் குடிச்சுட்டு புரியும்படியாகவும் பேசுறான். அண்ணா, குமரி அனந்தன், வலம்புரி ஜான் பேச்சையெல்லாம் கேட்டு வளர்ந்தவன் நான். இவன் பேச்சைக் கேட்டால் சிலிர்க்குது. 19 - 25 வயசுக்குள்ளே இருக்கிற இளமைப் பட்டாளத்தைக் கையில் பிடிச்சு வெச்சிருக்கான். சீமான்மீது அன்பிருக்கு. கமல்மீது மரியாதை இருக்கு. இரண்டு பேரும் சேர்ந்து வந்தால்கூட ஓகேதான்.’’

``சசிகலாவைச் சந்தித்து ‘சாதனைத் தமிழச்சி’ன்னு சொல்லியிருக்கீங்க. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரை நீங்கள் பாராட்டுவது குறித்த விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?’’

‘‘சசி அம்மாவை 32 வருஷமாத் தெரியும். நாலு வருஷம் உள்ளே இருந்து வெளியே வர்றாங்க. அதுக்கப்புறம் முக்காடு போட்டுக்கிட்டு ஒளியவில்லை. மக்களைச் சந்திப்பேன்னு சொல்லி அந்த அம்மா துணிச்சலா மக்களை எதிர்கொள்ள நினைச்சு சந்திக்கிறாங்க. அதனால்தான் அவங்களை வீரத்தமிழச்சின்னு சொன்னேன். இப்பவும் எப்பவும் ‘வீரத் தமிழச்சி’ என்று சொல்வேன். அவங்க ஜெயலலிதா அம்மாவுக்குத் துணையாக இருந்து வாழ்ந்த வாழ்க்கை வேறு. வேற ஒருத்தராக இருந்தால் இந்தக் கஷ்டத்தைத் தாங்க முடியாது. மரியாதை நிமித்தமாக உடல் நலம் விசாரிக்கப் போனேன். இது தப்பாய்யா! என்னைய அரசியல் வேற பேச விடாதீங்க...’’

``இத்தனை வருஷ அனுபவம் கற்றுத்தந்த படிப்பினை என்ன?’’

‘‘பொண்டாட்டி, மகன், மகள் எல்லாம் முக்கியம்தான். ஆனால், இன்னைக்கும் நான் இளமையாக, துடிப்பாக இருக்கக் காரணம், தொழிலை நேசிக்கிறதுதான். இன்னும் ஆத்மார்த்தமாக உண்மையா ரெண்டு மூணு படங்களையாவது செய்யணும்னு ஏங்குறேன். எனக்கு இன்னும் வயசாகலை. என்னோட கருத்துகள் வெளிப்பாட்டுல கொஞ்சமும் தளர்ச்சி அடையலை. எனது ஆதார சுருதி சினிமாதான். கலைஞனின் பலவீனம்னு சில தவறுகளைச் செய்திருக்கிறேன். மாலைப்பொழுதில் ஆங்காங்கே வழிதவறியிருக்கேன். ‘எப்படியும் என்கிட்டதானே வருவாய்’னு காத்திருந்த என் மனைவிகிட்டே வந்து சேர்ந்திருக்கேன். இப்ப அவகிட்டே வாழ்ற காதல் வாழ்க்கை இருக்கே... காவியம் அய்யா காவியம். மனைவி தோழியா மாறி என்னை ஆசீர்வதிக்கிறாள். வறுமையை ஜெயிக்கிறது வேற. வாழ்க்கையை ஜெயிக்கிறது வேற. சொல்லப்போனா ஏன் ஜெயிக்கணும்... அதுக்குப் பதில் வாழ்ந்திடலாமே!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism