கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு தீபாவளி!” - மதன் கார்க்கி

மதன் கார்க்கி
பிரீமியம் ஸ்டோரி
News
மதன் கார்க்கி

வாழ்க்கை

புதுமைகள்தான் புத்துணர்ச்சியின் ஆணிவேர். பாடலாசிரியர் மதன் கார்க்கி... எப்போதும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்கக்கூடியவர். மொழிநுட்பமும் தொழில்நுட்பமும் அறிந்த கவிஞர்.

சமீபத்தில்கூட உலகத்திலேயே எளிமையான மொழி என்கிற அடிப்படையில், ‘கிளிக்கி’ என்று ஒரு புதிய மொழியை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தினார். இப்போது ‘பயில்’ என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலருக்கு இணையம் வழியாகத் தமிழ் பயிற்று விக்கிறார். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் சுழன்றுகொண்டிருந்தவரிடம் உரையாடினோம்...

மதன் கார்க்கி
மதன் கார்க்கி

“கொரோனா எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருக்கிறது... நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?”

“இந்த உலகத்தில் வாழ்கிற ஒவ்வொரு வருக்கும் சின்னச் சின்ன கனவுகள் இருக்கின்றன. எல்லோரும் அவற்றை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எங்கிருந்தோ வந்த கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, அந்தக் கனவுகளையெல்லாம் மொத்தமாகச் சூறையாடிவிட்டது. ஆரம்பத்தில் கொரோனாவைப் பற்றிய செய்திகளைப் படிக்கும்போது நிறையவே பதற்றமானேன். என்னால் எந்த வேலைகளையும் செய்ய முடியவில்லை. செய்திகள் பார்ப்பதை நிறுத்திவிட்டு, கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய ஆரம்பித்தேன். படிப்படியாக என்னுடைய வேலைகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினேன்... இப்போது கதை, வசனம், திரைக்கதை, பாடல் வரிகள் என நிறைய வேலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. சில ஓடிடி புராஜெக்ட்ஸும் செய்துகொண்டிருக்கிறேன். கொரோனாவால் என்னுடைய வேலைகளில் பெரிய பாதிப்பு இல்லை. அதே சமயம், சில நன்மைகள் கிடைத்திருக்கின்றன. மற்ற நாள்களாக இருந்தால் பாம்பே, ஹைதராபாத் எனப் பல ஊர்களுக்கு அலைய வேண்டியிருக்கும். இப்போது ஸூம்... கூகுள் மீட்டில் சந்தித்து டிஷ்கஷனை முடித்துவிடுகிறோம். வீட்டிலிருந்தபடியே வேலைகளைப் பார்த்துவிடுவதால், மனைவிகூடவும் மகன்கூடவும் அதிக நேரம் செலவிட முடிகிறது.”

“மனைவி, மகன் என்ன செய்கின்றனர்?”

“என் மனைவி நந்தினி, சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘பாட்காஸ்ட் (Podcast)’ மூலமாக உலக மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். என் மகன் ஹைக்கூ, ஆறாவது படிக்கிறார். அவர் பள்ளிக்கூடத்தில் அதிகமாக இணைய வகுப்புகள் கிடையாது. அதனால், அறிவு சார்ந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். நாங்களே புதிது புதிதாக கேம்களை உருவாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ‘படம் காட்டு’ன்னு ஒரு விளையாட்டு. சீட்டுக்கட்டு மாதிரியான விளையாட்டுதான். அதில் சுமார் 2,000 தமிழ்ச் சொற்கள் இருக்கும். உங்களுக்கு வரும் சீட்டில் இருக்கும் சொல்லைப் படித்துவிட்டு, அதை நடிப்பின் மூலமாகவோ ஓவியத்தின் மூலமாகவோ, வேறு வழிகளிலோ உணர்த்தி கண்டுபிடிக்க வைக்க வேண்டும். இப்படி நிறைய விளையாட்டுகள் இருக் கின்றன. விளையாட்டோடு மட்டும் நின்றுவிடவில்லை. நானும் என் மகனும் சேர்ந்து ஆர்வமாக ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்டிருக்கிறோம்.”

சின்ன வயதில்தான் தீபாவளியென்றால் பயங்கர ஹேப்பியா இருக்கும். அப்போ எனக்கும் என் தம்பிக்கும் வெடி வெடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். நிறைய வெடிகள் வாங்கி வைத்து வெடித்து விளையாடுவோம். ஆனால், இப்போது அப்படியில்லை. என் மகனுக்கும் வெடிப்பதில் விருப்பம் இல்லை.

“கார்க்கி ரிசர்ச் ஃபவுண்டேஷனில் இப்போது என்னென்ன பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன?”

“ ‘புரோகிராமிங்’கை மையப்படுத்தி நிறைய பணிகள் செய்துகொண்டி ருக்கிறோம். அதில், ‘அறிவி’ என்ற புராஜெக்ட்தான் இப்போது பிரதானமாக இருக்கிறது. நாம் கேட்கின்ற கேள்வியை உள்வாங்கிக் கொண்டு, பதில் சொல்வது மாதிரியான தளம்தான் ‘அறிவி.' உதாரணத்துக்கு, ‘நைல் நதி ஓடுகிற நாடுகளில் என்னென்ன மொழி பேசும் மக்கள் இருக்கின்றனர்?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்வது மிகவும் சிக்கலானது. நைல் நதி எந்தெந்த நாடுகளில் ஓடுகிறது என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அடுத்ததாக, அந்த நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர் என்பதை தனித்தனியாகக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இணையத்தில் பலமுறை ‘சர்ச்’ செய்ய வேண்டியிருக்கும். அப்படி இல்லாமல் கேள்வியை உள்வாங்கிக்கொண்டு ஒரேமுறையில் பதில் சொல்லும் வகையில் நாங்கள் எங்கள் ‘அறிவி’யை வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் பேச, எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்காக, நாங்கள் தொடங்கிய ‘பயில்’ வகுப்பு வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கிறது. 23 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் அந்த வகுப்பில் தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றனர். குழந்தை களும் பெரியவர் களும் சேர்ந்து படிக்கிற வகையில் இந்த வகுப்பை வடிவமைத் திருக்கிறோம். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு வயதுக்காரர்கள் சேர்ந்து தமிழ் படிப்பதைப் பார்க்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.”

“குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு தீபாவளி!” - மதன் கார்க்கி

“உங்கள் அப்பா பிறந்த வடுகபட்டிக்குச் செல்வதுண்டா... கடைசியாக எப்போது சென்றீர்கள்?”

“வருடத்துக்கு ஒரு முறையாவது வடுக பட்டிக்குச் சென்றுவிட வேண்டும் என்பது என் ஆசை. இரண்டு வருடங் களுக்கு முன்பு சென்று பாட்டியைப் பார்த்துவிட்டு வந்தேன். பாட்டியுடன் நேரம் செலவழிப்பதும்... உறவினர்களையும் ஊர் மக்களையும் சந்தித்துப் பேசுவதும் அலாதியான விஷயம். சென்ற வருடம் நிறைய வெளிநாட்டு ட்ரிப் இருந்ததால் வடுகப்பட்டிக்குச் செல்ல முடியவில்லை. இந்த வருடம் கொரோனா தடுத்துவிட்டது. வடுகபட்டி மட்டுமல்ல, வெளிநாடுகளுக்குச் சென்றாலும் ஹோட்டலில் தங்குவதோ, காரில் சுற்றுவதோ எனக்குப் பிடிக்காது. ‘பப்ளிக் டிரான்ஸ் போர்ட்ஸ்’லதான் பயணிப்பேன். ஏதாவதொரு கிராமத்துக்குச் சென்று, அங்கே உள்ள மக்களுடனும் சிறுவர்களுடனும் நேரம் செலவழிப்பதும் அவர்களுடைய பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொள்வதும் எனக்குப் பிடித்த விஷயங்கள். தென்னாப்பிரிக்கா சென்றபோதுகூட ஒரு கிராமத்துக்குச் சென்று, ஒரு நாள் முழுக்க அங்குள்ள சிறுவர்களுடன்தான் இருந்தேன்.”

“அணியும் ஆடையிலும்... பேசும் மொழி நடையிலும் உங்கள் தந்தை வைரமுத்து தனக்கென ஒரு ஃபார்முலாவைக் கடைப்பிடிக்கிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்... நீங்கள் அப்படி ஏதாவது முயன்றது உண்டா?”

“ஐயோ... எனக்கு அப்படியெல்லாம் ஐடியாவே இல்லை. நான் இயல்பாக இருக்க விரும்புகிற ஆள். என் அப்பா தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கிறார். அது அந்தத் தலைமுறையுடைய சிந்தனை. எனவே, அதை நான் விமர்சிக்க விரும்பலை. ஆனால், அதை வைத்து எங்களுக்குள் நிறைய காமெடி பண்ணிப்போம். என் பையன்கிட்ட, ‘டேய் போன வாரமும் இதே சட்டைதான நீ போட்டுட்டு வந்தே’ன்னு என் அப்பா கேட்பார். அதற்கு அவன், ‘தாத்தா நீங்க தினமும் ஒரே சட்டையைத்தான் போடுறீங்க... என்கிட்ட பேசாதீங்க’ன்னு சொல்லுவான். குடும்பமே அதிர்ந்து சிரிப்போம். இப்படி வீட்டில் ரொம்பவே நகைச்சுவை உணர்வோடு இருப்பார். சாதாரண பேச்சு வழக்கில்தான் பேசுவார். மேடைகளிலும் பத்திரிகைளிலும் பேசும்போதுதான் ஃபார்மலா இருப்பார்.”

“குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவதுதான் எங்களுக்கு தீபாவளி!” - மதன் கார்க்கி

“உங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும்... அதைப் பற்றிச் சொல்லுங்களேன்...”

“சின்ன வயதில்தான் தீபாவளியென்றால் பயங்கர ஹேப்பியா இருக்கும். அப்போ எனக்கும் என் தம்பிக்கும் வெடி வெடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். நிறைய வெடிகள் வாங்கி வைத்து வெடித்து விளையாடுவோம். ஆனால், இப்போது அப்படியில்லை. என் மகனுக்கும் வெடிப்பதில் விருப்பம் இல்லை. அதனால் நாங்கள் தீபாவளியெல்லாம் கொண்டாடுவது இல்லை. தீபாவளி மட்டுமல்ல, எந்த மத விழாக்களையும் நாங்கள் கொண்டாடுவது கிடையாது. அப்பா, அம்மா, தம்பியைப் போய் பார்த்து குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவதுதான் எங்களுக்குத் தீபாவளி.”