Published:Updated:

ரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்

காதல்... காதல்...
பிரீமியம் ஸ்டோரி
News
காதல்... காதல்...

காதல்... காதல்...

மக்களை மகிழ்விப்பதில் சினிமா காமெடி நடிகர்களுக்குச் சற்றும் சளைக்காதவர்கள் சின்னத்திரை காமெடி நடிகர்கள். திரையில் அதகளம் பண்ணும் இவர்கள் திரைக்குப் பின்னால் எப்படி இருப்பார்கள்? அவர்களின் மனைவிகளிடம் கேட்டோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மகாலட்சுமி

ரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்

பாண்டு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குரலில் பேசி அசத்தும் ராஜாவை ஆறு ஆண்டுகள் காதலித்து கரம் பிடித்தவர். கல்லூரி காலத்திலேயே மகாலட்சுமியின் அப்பா தவறிவிட அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மகாலட்சுமியை வழி நடத்தியிருக்கிறார் ராஜா. “நான் படிக்கணும்னு ஊக்கம் கொடுத்துட்டே இருப்பார். டிகிரியில் டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆனேன். வேலைக்குப் போன பிறகும் தொடர்ந்து படிக்கும்படி சொல்லிட்டே இருப்பார்” எனும் மகாலட்சுமி எம்.பி.ஏ பட்டதாரி. வங்கி வாடிக்கையாளர்கள் பிரிவு, எம்.என்.சி நிறுவனங்களில் பணியாற்றியவர் தற்போது சிறிய பிரேக் எடுத்திருக்கிறார். ``குழந்தை பிறந்தபோது ஒரு கம்பெனியில நைட் ஷிஃப்ட் வேலை பார்த்திட்டிருந்தேன். அந்த நேத்துல என் குழந்தை, வீடுனு எல்லாத்தையும் நிர்வகிச்சது ராஜாதான்.

இப்போ மறுபடி கர்ப்பமாகியிருக்கிறதால வேலை யிலிருந்து பிரேக் எடுத்திருக்கேன். குழந்தை பிறந்ததும் வீட்டிலிருந்தபடியே செய்யும் வேலையைத் தேடப் போறேன். ராஜா மாதிரி பொறுப்பான, அக்கறையான கணவர் கிடைச்சா வாழ்க்கை எப்போதும் பூந்தோட்டம்தான்”

- மகாலட்சுமியின் முகத்தில் வெட்கச் சிவப்பு.

நீத்தி

ரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்

“அக்கவுன்ட்டுல 10,000 போட்டாதான் அவருக்கு காமெடியே வரும்” அதிரடியாக ஆரம்பிக்கிறார் மதுரை முத்துவின் மனைவி நீத்தி. பல் மருத்துவரான இவர் மதுரையிலுள்ள மருத்துவமனைகளில் கன்சல்டன்ட்டாக பணியாற்றி வருகிறார். “அவர் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரியும் நான் ஸ்டூடன்ட் மாதிரியும்தான் இருப்போம். வீட்ல ரொம்ப பேசமாட்டாரு, சிரிக்க மாட்டாரு... சீரியஸான மனுஷன். பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதப்போற புள்ள மாதிரி படிச்சிட்டே இருப்பாரு” என்று அதிரி புதிரியாகப் பேசுகிறார் நீத்தி.

“உன் தாலியில இருக்கிற மஞ்சள் காயிறதுக்கு முன்னாடி உன்னை அம்மான்னு கூப்பிடுறதுக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு. பிள்ளைகளுக்கு அம்மாவா அந்த வீட்டுக்குப் போகணுமே தவிர, புதுப்பொண்ணா போகணும்னு நினைச்சா உன்னால சமாளிக்க முடியாது’ன்னு என்னோட அம்மா சொல்லி அனுப்புனாங்க. கல்யாணத்துக்குப் பிறகும் ஏளனமான சிரிப்பு, கேலி, கிண்டல்கள்னு எதிர்மறை விமர்சனங்களைத்தான் அதிகம் சந்திச்சிருக்கேன். இப்போ எனக்கும் இரண்டரை வயசுல அவரோட மினியேச்சர் மாதிரியே ஒரு பையன் இருக்கான்” எனும் நீத்தி, மருத்துவர்கள் பற்றாக்குறையின் காரணமாக கோவிட்-19 வார்டிலும் பணியாற்றுகிறார். “சின்ன குழந்தை வெச்சிருக்க... கோவிட்-19 வார்டுலெல்லாம் வேலை செய்யாதேன்னு நிறைய பேரு சொன்னாங்க. எல்லாரும் இப்படியே ஒதுங்கிட்டா அப்புறம் யார்தான் சிகிச்சை கொடுக்கிறது?’’ அக்கறையாகக் கேட்பவருக்கு, திருநங்கைகளுக்கான செவிலியர் பயிற்சிப்பள்ளியை உருவாக்குவதே லட்சியமாம்.

“எங்க மாமாகிட்ட பேசுனா சொல்லுங்க... உங்க மனைவியை சென்னைக்குக் கூட்டிட்டுப் போங்கன்னு”

- ஏக்கத்தைத் தூதுவிட்டு முடித்தார்.

ரிஸ்வானா

ரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்

கல்லூரியில் படிக்கும்போதே பார்ட் டைமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் ரிஸ்வானா. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் வி.எஸ்.ராகவன், விஜயகாந்த் குரல்களில் அசத்தும் குறைசி, ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதற்காகச் சென்றிருக்கிறார். அந்த அறிமுகம் நட்பாகி காதலாகி திருமணத்தில் முடிந்தது. “செலிபிரிட்டியின் மனைவியாச்சே... சொந்தக்காரங்க மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிச்சிருக்கு. குறைசிக்கு கோபமே வராது. லாக்டௌன் காலத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமப் போயிடுச்சு. பார்மஸி வெச்சிருக்கும் நண்பர் மூலமா மருந்துகள் ஏற்றுமதி செய்தோம். வாய்ப்புகள் இல்லையேனு முடங்கிடாமல் தொடர்ந்து ஓடிக்கிட்டே இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும்'' எனும் ரிஸ்வானா சொந்தமாக ஈவென்ட் நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறார். நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார். தவிர முதலீடுகள் தொடர்பான பிசினஸும் செய்து வருகிறார்.

“கர்ப்பமாக இருந்தபோது ஒரு கல்லூரி புராஜெக்டில் கமிட் ஆகியிருந்தேன். காலை 7 மணிக்குத் தொடங்கும் வேலை மாலை 5.30 மணி வரை போகும். கர்ப்பமா இருந்ததால் வீட்டில் பெரியவங்க திட்டுவாங்க. அப்போதும் அவர்தான் எனக்கு சப்போர்ட். ஒன்பதாவது மாசம்தான் அதிலிருந்து விலகினேன். இப்போ குட்டி பாப்பாவுக்கு ஆறு மாசம் ஆகுது. குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும் மறுபடியும் ஓடத் தொடங்கிடுவேன்.

பிரபலமாகி அஞ்சு வருஷங்கள்தான் லைம்லைட்டில் இருக்க முடியும்னு குறைசிக்குத் தெரியும். அதனால ஆரம்பத்திலேயே பிளான் பண்ணி சேமிப்புகளைச் செய்துட்டார். வாழ்க்கை சிறப்பா போயிட்டிருக்கு.”

- குறையொன்றுமில்லை திருமதி குறைசிக்கு.

அருணா

ரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்

மேட்ரிமோனியில் பழைய ஜோக் தங்கதுரையின் புரோஃபைலைப் பார்த்துப் பிடித்துப்போக, அவரைக் கரம் பிடித்திருக்கிறார் இன்ஜினீயர் அருணா. சென்னையிலுள்ள சி.டி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

“நிலையான வருமானம் இல்லாத துறை அவருடையதுனு தெரியும். ரொம்ப நல்ல பையன், தங்கமான குணம். கல்யாணத்துக்கு அப்புறம் வேற பிசினஸ்கூட செய்யலாம். அதனால ரொம்ப யோசிக்காம கல்யாணம் பண்ணிக்கோன்னு வீட்டுல சொன்னாங்க. ஆனா, தேடிக் கண்டுபிடிச்சாலும் இப்படி ஒரு வீட்டுக்காரர் கிடைச்சிருக்க மாட்டாரு.”

- அருணாவின் பேச்சில் வெட்கம் தெறிக்கிறது.

“எப்பவும் பிஸியாவேதான் இருப்பாரு. கொரோனா நேரத்தில்தான் குடும்பமா கொஞ்சம் நேரம் செலவழிக்க முடிஞ்சுது. வீட்டில் ஆதிக்கம் செலுத்தணும்னு நினைக்கவே மாட்டாரு. வீட்டு நிர்வாகமானாலும் பொருளா தார விஷயங்களானாலும் என்னைத்தான் பார்க்கச் சொல்வாரு’’ என்றவர், தங்கதுரையின் தற்கொலை ஜோக்குகள் என்ற புத்தகத்திலும் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறாராம்.

“அந்த புக்ல ஜோக்ஸ் எழுதுறப்போ எங்கிட்ட டிஸ்கஸ் பண்ணி, அது வொர்க்-அவுட் ஆகுமான்னு கேட்டாரு. நானும் என்னுடைய இன்புட்ஸ் கொடுத்திருக்கேன். நீங்க டிவியில பாக்குற மாதிரி எப்பவும் ஜாலியாதான் இருப்பாரு''

- ஆசையைச் சொல்கிறார் அருணா.

விமல் சில்வேரா

ரகிட, ரகிட, ரகிட... சின்னத்திரை காமெடியன்களின் ரகளை பக்கங்கள்

ஒரே துறையில் மலர்ந்தது ஜெயச்சந்திரன் விமல் சில்வேரவாவின் காதல். நாடகக் கலைஞர்களாக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். சடங்குகள் இல்லாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். “ஞாநியின் பரிக்ஷா நாடகக் குழுவில் நான் நடிச்சிட்டிருந்தபோது, குழந்தைகள் பயிலரங்கம் தொடர்பா ஜெய்யை சந்திச்சேன். பிறகு, அவரும் பரிக்ஷாவில் நடிச்சார். பெண்களின் முக்கியத்துவம் பேசும் வகையில் திருச்சியில் பாலின சமத்துவம் பற்றி ஒரு பயிலரங்கம் நடத்தினார். அதிலேருந்து அவரை ரசிக்க ஆரம்பிச்சேன்” என்று ஃபிளாஷ்பேக் சொல்லும் சில்வேரா தற்போது இந்திய தொழில் கூட்டமைப்பில் (CII) செயல் அதிகாரி.

“2008-ம் வருஷம் வரை ரெண்டு பேரும் நாடகத்தில் நடிச்சிட்டிருந்தோம். மகன் பிறந்த பிறகு, பிரேக் எடுத்தேன். நாங்க ரெண்டு பேரும் ஒரு தொண்டு நிறுவனத்துல ஒன்றரை லட்சம் சம்பாதிச்சிட்டிருந்த நேரத்துல வேலையைவிட்டு மீடியாவுக்குப் போறேன்னார் ஜெய். ரெண்டு பேருக்கும் அவங்கவங்க பெற்றோரை சப்போர்ட் பண்ண வேண்டிய பொறுப்பு இருக்கு. அவங்கவங்க சம்பாத்தியத்துல அவங்கவங்க தேவைகளைப் பார்த்துக்கிறோம். குடும்பத்துக்கான தேவைகளைப் பகிர்ந்துக்கிறோம்” என்று சீரியஸாகப் பேசியவர் ஜெயச்சந்திரன் மோடுக்கு மாறினார்...

“நானும் என் பையனும்தான் வீட்டைத் தெறிக்க விடுவோம். அவர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் வாயே திறப்பார். அதுவும் ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களானு சொல்றதுக்குத்தான். ஏற்ற இறக்கங்களோடும் அடுத்தென்னங்கிற தேடலோடும் லைஃப் ரொம்பவே சுவாரஸ்யமா போயிட்டிருக்கு’’

- தத்துவமாகப் பேசுகிறார் சில்வேரா.