Published:Updated:

சந்தேக வளையத்தில் 20 தொகுதிகள்... எதிர்க்கட்சியுடன் ரகசியக் கூட்டு? - கேரளத் தேர்தல் களேபரம்

பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
பினராயி விஜயன்

ஆர்.எஸ்.எஸ்-க்கும், பி.ஜே.பி-க்கும் எதிராக எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சந்தேக வளையத்தில் 20 தொகுதிகள்... எதிர்க்கட்சியுடன் ரகசியக் கூட்டு? - கேரளத் தேர்தல் களேபரம்

ஆர்.எஸ்.எஸ்-க்கும், பி.ஜே.பி-க்கும் எதிராக எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Published:Updated:
பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
பினராயி விஜயன்

தமிழகத்தைப்போல, கேரளத்திலும் ஏப்ரல் 6-ம் தேதிதான் தேர்தல். சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆகியவை 140 தொகுதிகளிலும் களமிறங்கின. மும்முனைப் போட்டி என்பதால், இரண்டு அணிகள் திரைமறைவு ஒப்பந்தம் போட்டுக்கொண்டால், அந்த அணி வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். எனவே, கடைசிக் கட்டத்தில் தொகுதிகளில் ரகசிய ஒப்பந்தம் செய்யும் படலம் அரங்கேறியிருப்பதாகத் தகவல்கள் றெக்கைகட்டிப் பறக்கின்றன. அதிலும், 20 தொகுதிகளில் காங்கிரஸுடன் சி.பி.எம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தங்களைத் தோற்கடிக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக பி.ஜே.பி குற்றம்சாட்டுகிறது!

சந்தேக வளையத்தில் 20 தொகுதிகள்... எதிர்க்கட்சியுடன் ரகசியக் கூட்டு? - கேரளத் தேர்தல் களேபரம்

கேரள பா.ஜ.க அறிவித்த வேட்பாளர்களில், தலசேரி மற்றும் குருவாயூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் மனுக்களில் குறைபாடு இருந்ததாக அவை தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்தமுறை கண்ணூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க மிக அதிக வாக்குகளைப் பெற்றது தலசேரி தொகுதியில்தான். எனவே, ‘எல்.டி.எஃப்., யு.டி.எஃப் கூட்டணிகளுக்கு எதிராக சுயேச்சையாக நிற்கும் நசீர் என்பவருக்கு அந்தத் தொகுதியிலுள்ள பா.ஜ.க-வினர் வாக்களிக்க வேண்டும்’ என்று மாநில பா.ஜ.க தலைமை தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல் குருவாயூர் தொகுதியிலும் சுயேச்சை ஒருவருக்கு பா.ஜ.க ஆதரவளித்தது. இதுவே, இந்தத் தேர்தலில் ஒரு கட்சி, மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் முறைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

மஞ்சேஸ்வரம் மற்றும் கோணி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடும் நிலையில், கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ‘‘ஆர்.எஸ்.எஸ்-க்கும், பி.ஜே.பி-க்கும் எதிராக எல்.டி.எஃப் கூட்டணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் யு.டி.எஃப் கூட்டணிக்கு ஒத்துழைக்க நீங்கள் தயாரா?’’ என்று கேள்வி எழுப்பியவர், “பா.ஜ.க-வுக்குச் சாதகமாக வேண்டுமென்றே மஞ்சேஸ்வரத்தில் எல்.டி.எஃப் சார்பாக பலவீனமான வேட்பாளரை நிறுத்தி யிருக்கிறீர்கள். இது திட்டமிடப்பட்டதுதான். அதனால், நீங்கள் எங்களோடு அட்ஜெஸ்ட் மென்டுக்குத் தயாராக இல்லை!’’ என்று எல்.டி.எஃபை நோக்கி பகிரங்கமாகவே கூறியிருந்தார். இது பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது.

சந்தேக வளையத்தில் 20 தொகுதிகள்... எதிர்க்கட்சியுடன் ரகசியக் கூட்டு? - கேரளத் தேர்தல் களேபரம்

இதற்கு எதிர்வினையாற்றிய கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், ‘‘முல்லப்பள்ளி ராமச்சந்திரனின் இந்த ஓட்டு யாசகத்தை கிருபேஷ் மற்றும் சரத் லாலின் ஆத்மாக்கள் பொறுத்துக்கொள்ளாது. (இந்த இரண்டு காங்கிரஸ் நிர்வாகிகளை சி.பி.எம் ஆதரவாளர்கள் கொலை செய்ததாக வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.) பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்துதான் அவர் இப்படி வெக்கங்கெட்டு வெளிப்படையாக சி.பி.எம் கட்சியிடம் ஓட்டுக் கேட்டிருக்கிறார். மஞ்சேஸ்வரம் மட்டுமல்லாமல் நேமம், களக்கூட்டம் ஆகிய தொகுதிகளிலும் காங்கிரஸும் சி.பி.எம் கட்சியும் ரகசியமாக ஒன்றுசேர்ந்திருக்கின்றன’’ என்றார்.

‘‘கேரளத்தில் பா.ஜ.க வெற்றிமுகமாக உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ், சி.பி.எம் இடையே ரகசிய ஒப்பந்தம் நடந்திருக்கிறது. முல்லப்பள்ளி ராமச்சந்திரனின் பேச்சு இதை உறுதிசெய்திருக்கிறது’’ என்று பா.ஜ.க மத்திய அமைச்சர் வி.முரளீதரன் விமர்சித்திருக்கிறார்.

‘‘மஞ்சேஸ்வரத்தில் பா.ஜ.க-வைத் தனியாகத் தோற்கடிக்க எங்களால் முடியும். கடந்தமுறை நாங்கள் தனியாக நின்றுதானே தோற்கடித்தோம்... அதுபோல இம்முறையும் பா.ஜ.க-வைத் தோற்கடிப்போம். அதுவே எங்கள் லட்சியம். அதில் எந்தப் பின்னடைவும் இல்லை’’ என்று இதற்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, முல்லப்பள்ளி ராமச்சந்திரனின் கருத்துகளை நிராகரித்தார்.

அதேசமயம், கேரள மாநில சி.பி.எம் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், ‘‘பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது’’ என்று புதிய ரூட்டில் பிரச்னையை திசைதிருப்பினார். மேலும், ‘‘கேரளத்துக்குப் பிரசாரத்துக்கு வந்த ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், பி.ஜே.பி-யின் மதவாதப் போக்கு பற்றிப் பேசவில்லை. ஆனால், ‘எல்.டி.எஃப் ஆட்சிக்கு வந்தால் சர்வ நாசம் ஏற்படும் என்று காங்கிரஸின் ஏ.கே.ஆண்டனி கூறுகிறார். பொய்ப் பிரசாரங்கள் செய்பவர்கள் மத்தியில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

சந்தேக வளையத்தில் 20 தொகுதிகள்... எதிர்க்கட்சியுடன் ரகசியக் கூட்டு? - கேரளத் தேர்தல் களேபரம்

கேரள அரசியல் விமர்சகர்களோ, ‘‘பிற மாநிலங்களில் கூட்டணியாக நிற்கும் கட்சிகள், எதிரெதிர் அணியில் போட்டியிடுவதைக் கேரளத்தில் காணலாம். ஆனால், அவர்கள் ரகசிய ஒப்பந்தங்கள் வைத்துக்கொள்ளும் சம்பவங்கள் வெளியே வந்து, மக்களிடம் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள நேமம் தொகுதியில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அப்போதைய பா.ஜ.க வேட்பாளர் ஓ.ராஜகோபாலை திரைமறைவில் ஆதரித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அந்தத் தொகுதியில் வழக்கமாக வாங்கும் வாக்குகளைக்கூட காங்கிரஸ் வாங்காதது, அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. காங்கிரஸ், முஸ்லிம் லீக், பா.ஜ.க ஆகிய கட்சிகள் பிற கட்சிகளுடன் திரைமறைவு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும் என்பது கடந்தகாலத் தேர்தல்களில் வழக்கமாகக் கூறப்பட்டுவரும் தகவல். இவர்களின் திரைமறைவு ஒப்பந்தத்தை ‘கோலீபி’ (காங்கிரஸ், லீக், பி.ஜே.பி) எனச் சுருக்கமாகச் சொல்வார்கள். பினராயி விஜயனுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திரைமறைவில் ஆதரவு அளித்ததாகவும் முன்பு கூறப்பட்டுவந்தது. இப்போது சி.பி.எம் ஆதரவை காங்கிரஸ் பகிரங்கமாகக் கேட்டிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. எனவே, திரைமறைவு ஒப்பந்தங்கள் நடைபெறவில்லை என உறுதியாக நிராகரிக்க முடியாது. அரசியல் கட்சிகளின் திரைமறைவு ஒப்பந்தம் மக்களை ஏமாற்றும் செயல்’’ என்கிறார்கள்.

கேரள அரசியல் எப்போதுமே வித்தியாசமானதுதான்!