Published:Updated:

தர்ஷா குப்தா லைவ் வீடியோ; ஆல்யா மானசா மன்னிப்புப் பதிவுகள்! `இன்ஃப்ளூயென்சர் ஸ்கேம்' - நடந்தது என்ன?

ஜேசன் சாமுவேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் 'இன்ஃப்ளயென்சர் ஸ்கேம் 'வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைத் திறந்தாலே, சின்னத்திரை தொடங்கி, வெள்ளித்திரை வரை பிரபலங்கள் பலரும் பலவிதமான பொருள்களை புரொமோட் செய்வதைப் பார்க்கலாம். இவர்களை சோஷியல் மீடியா இன்ஃப்ளுயென்சர்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அதிக ஃபாலோயர்கள் கொண்ட பிரபலங்கள் ஒரு பொருளை, தாம் பயன்படுத்தியதாகவும், அந்தப் பொருள் சிறப்பாக இருக்கிறது என்றும் அந்தப் பொருளுடன் வீடியோவோ, போட்டோவோ, ஸ்டோரியோ பதிவிடுவார்கள். அப்படிப் பதிவிடும்போது, அவரை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்யும் மக்கள், அந்தப் பொருளை வாங்க வாய்ப்பிருக்கிறது. பதிவிடும் ஒவ்வொரு வகையான பதிவுக்கும் ஒவ்வொரு வகையான கட்டணத்தை சம்பந்தபட்ட பிராண்டில் இருந்து செலிபிரிட்டிகள் பெற்றுக்கொள்வதுடன், அந்தப் பொருளையும் அவர்களே வைத்துக்கொள்வார்கள். மொத்தத்தில் மாறிவரும் டிஜிட்டல் உலகத்துக்கு ஏற்ற டிஜிட்டல் விளம்பரம் என்று இதைச் சொல்லலாம்.

சமீபகாலமாக சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தொடங்கி, தர்ஷா குப்தா, ஆர்.ஜே ராகவி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பத்மபிரியா, ஜாக்குலின் என செலிபிரிட்டிகள் பலரும் பொருள்களுக்கு விளம்பரம் செய்து தருவதாகப் பொருளையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதாகப் பல தொழில் முனைவோர்கள் புலம்ப, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஜேசன் சாமுவேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் 'இன்ஃப்ளுயன்சர் ஸ்கேம்' வீடியோக்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அந்த வீடியோக்கள் வைரலும் ஆகிவருகின்றன.

அந்த வீடியோக்களில் செலிபரிட்டிகளுக்கு சம்பந்தப்பட்ட பிராண்டில் இருந்து அனுப்பிய மெசேஜ், விளம்பரம் செய்து தருவதற்காக அவர்கள் பெற்ற தொகையின் இன்வாய்ஸ் எல்லாவற்றையும் ஸ்கிரீன் ஷாட்களுடன் பதிவிட்டு வருகிறார் சாமுவேல். தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் சாமுவேல் கூறிய கருத்துகளுக்கு எதிராக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர், அதே நேரம் புகார்கள் செய்யப்பட்ட பிராண்டுகளுக்கு தொடர்ந்து போஸ்ட்களும் பதிவிட்டு வருகின்றனர். என்ன தான் நடக்கிறது என்று இரு தரப்பிலும் பேசினோம்.

ஆல்யா மானசா
ஆல்யா மானசா

ஜேசன் பேசும்போது, ``நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன். பொருள்கள் டிசைன் செய்யும் நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறேன். சாஃப்ட்வேர் எம்.எம்.சியின் சி.ஓ.ஓ ஆகவும் இருக்கிறேன். நண்பர்களுடன் சேர்ந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளையும் செய்து வருகிறேன். ஸ்டார்ட் அப் வைத்திருப்பவர்களின் பிரச்னையாக அவர்கள் கூறியது, `இன்ஸ்டாகிராமில் இன்ஃப்ளுயென்சர்களாக இருக்கும் பல செலிபரிட்டிகளிடம் எங்களுடைய பிராண்டை புரொமோட் செய்து தருமாறு கேட்டோம். அதற்குரிய பணத்தையும் பொருளையும் கொடுத்தோம். ஆனால், பொருள்களை வாங்கி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் அந்தப் பொருளை விளம்பரம் செய்யவில்லை. மெசேஜ்களைப் படித்துவிட்டு பதிலும் தரவில்லை. இதிலிருந்து எப்படி மீள்வது என்று என்னிடம் ஆலோசனைகள் கேட்டார்கள். முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், இவர்களை இதிலிருந்து மீட்டெடுக்க நினைத்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பந்தப்பட்ட தொழில் முனைவோரிடமிருந்து தகுந்த ஆதாரங்களைப் பெற்று எந்தெந்தப் பிரபலங்கள் என்று பெயரைச் சொல்லி, ஏப்ரல் 1-ம் தேதி இன்ஸ்டாகிராமில் முதல் லைவ் வீடியோவை பதிவிட்டேன். நான் பதிவிட்டிருந்த வீடியோவின் கீழ் செலிபிரிட்டிகள் தங்களையும் ஏமாற்றியதாகக் கூறி நிறைய தொழில் முனைவோர்கள் கமென்ட் செய்திருந்தனர். பலரும் எனக்கு ஆதரவு கொடுத்து தங்களிடம் இருந்த ஆதாரங்களையும் கொடுத்தார்கள். அதனால் நான் அடுத்தடுத்த வீடியோக்களை பதிவிட்டேன். அதன் விளைவாக செலிபிரிட்டிகள் சிலரிடமிருந்து நிறைய மிரட்டல் போன் கால்களும் மெசேஜ்களும் வந்தன. சிலர் நான் புகழுக்காக இப்படிச் செய்வதாக வீடியோக்களும் பதிவிட்டார்கள். என்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்டையும் ரிப்போர்ட் பண்ணி பிளாக் பண்ண பார்த்தார்கள்.

புகழை வைத்து நான் என்ன பண்ணப் போகிறேன். ஒரு பிசினஸ் பண்ணுவது ஈஸியான விஷயம் இல்லை. பிசினஸ் செய்வதால் எனக்கு அந்தக் கஷ்டம் தெரியும். ஒரு பொருளை விற்க படாத பாடு பட வேண்டும். செலிபிரிட்டிகள் சப்போர்ட் கிடைத்தால் ஈஸியாக மக்களை ரீச் பண்ணலாம் என்பதுதான் நிறைய பேரின் எண்ணம். அதனால்தான் தங்களுடைய பொருளையும் கொடுத்து, விளம்பரம் செய்வதற்காக ஆயிரக்கணக்கில் பணத்தையும் கொடுத்து விளம்பரம் செய்துதரச் சொல்கிறார்கள். ஆனா, அதை செலிபிரிட்டிகள் அலட்சியமாக நினைப்பது எப்படி நியாயம் ஆகும். பொருளுக்கு எப்போது புரொமோஷன் பண்ணுவீங்க என்று கேட்டால்கூட , ` சீக்கிரம்; என்று சொல்லி மாதக்கணக்கில் இழுத்தடித்திருக்கிறார்கள். சில செலிபிரிட்டிகள் ரிப்ளை கூட செய்வது இல்லை. அதற்கான எல்லா ஆதாரங்களையும் சேர்த்து தான் நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கேன்.

சிறு தொழில் செய்பவர்களுக்கு ஒரு செலிபிரிட்டியை நேரடியாக எதிர்க்க தைரியம் இருப்பதில்லை. அப்படி எதிர்த்தால் அவர்களின் ரசிகர்கள் அசிங்கமாக கமென்ட் செய்வது, அக்கவுன்டை பிளாக் பண்ணுவதெல்லாம் நடக்கும் என்ற பயம். அதற்காக இதை இப்படியே விட முடியாது. பிரச்னையை நான் எதிர்கொள்கிறேன் என்று அவர்கள் எல்லோருடைய சார்பாகவும் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன். ஸ்கேம் வீடியோக்களை நான் வெளியிட்ட பின்னர், ஆல்யா மானஸா, ப்ரீத்தி ஷர்மா உள்ளிட்ட சில பிரபலங்கள் சம்பந்தப்பட்ட பிராண்டுகளிடம் மன்னிப்பு கேட்டு போஸ்ட் போட ஆரம்பித்திருக்கிறார்கள். சில செலிபிரிட்டிகள் பிராண்டுகளுக்கு பணத்தைத் திருப்பித் தர ஆரம்பித்திருக் கிறார்கள். இதுவரை பிராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் தரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறேன்.

பயனாளர்களின் பதிவு
பயனாளர்களின் பதிவு

தர்ஷா குப்தா சில தினங்களுக்கு முன் என்னுடைய வீடியோவுக்கு பதில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார். அதில், `நான் மக்களுக்கு உதவத்தான் நினைச்சேன். எனக்கு எப்போ டைம் இருக்கோ அப்போதான் ஹெல்ப் பண்ண முடியும். நான் யார்கிட்டயும் காசு வாங்கலை' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவரின் மேனேஜர் பணம் வாங்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதையும் நான் ஷேர் பண்ணிருக்கிறேன். பணத்தையும் பொருளையும் வாங்கிக்கொண்டு, ஒரு வருடம் காத்திருக்க வைப்பதை எப்படி உதவி என்று சொல்ல முடியும். யாருமே இலவசமாகச் செய்யவில்லை. அது மட்டுமல்ல புரொமோஷனுக்கு வரும் பிராண்டிடம் எனக்குப் பிடித்த பொருள்களை நானே செலெக்ட் செய்துகொள்கிறேன் என்று சொல்லிதான் வாங்குகிறார்கள். தாமதமாக போஸ்ட் போடும்போது அந்த ஃபேஷனே அவுட் ஆஃப் டிரெண்ட் ஆகியிருக்கும். அந்த போஸ்ட்டினால் சம்பந்தப்பட்ட பிராண்டிற்கு எந்தப் பயனும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை வீடியோக்கள் தொடரும்" என்று விடை பெற்றார் ஜேசன்.

இது குறித்து ஆல்யா மானஸாவிடம் பேசினோம். ``ரொம்ப வருத்தமா இருக்கு. நான் யாரையும் ஏமாத்தணும்னு நினைக்கல. தினமும் புரொமோஷன்கள் பண்ணிட்டுதான் இருக்கேன். சில பிராண்ட் பொருள்கள் ஃபிட் இல்லாமல் இருக்கும். சில பிராண்ட் பொருள்கள் டேமேஜ் ஆகி வந்திருக்கும் அதனால் தாமதம் ஆகும். சம்பந்தப்பட்ட பிராண்ட்கிட்ட சொல்லி பொருளை மாத்தி வாங்கி போஸ்ட் போட தாமதம் ஆகும்.

ஒரு நாளைக்கு நிறைய பேர் புரொமோஷனுக்கு கேட்குறாங்க. போஸ்டுக்கு, வீடியோவுக்கு, ஸ்டோரிக்கு, ஒருத்தரை ஃபாலோ செய்றதுக்கு ஒவ்வொண்ணுக்கும் ஒரு தொகை வாங்குறேன். தாமதமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பிராண்ட்களுக்கு நான் கூடுதலாகவே புரொமோஷன் பண்ணிக் கொடுத்திருக்கேன்.

Online business
Online business
பிசினஸ் நிறுவனங்களை ஜெயிக்க வைக்கும் சோஷியல் மீடியா..! நீங்களும் இதைச் செய்யலாமே!

பொதுவா இந்த மாதிரி புரொமோஷனுக்காக வாங்கும் ஆடைகளை நான் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்துறது கிடையாது. என் ஃபிரெண்ட்ஸ்கிட்ட கொடுத்துருவேன். ஒரு ஆட்டோகார அம்மாவோட மகளின் டிரெஸ் பிசினஸில், நான் விளம்பரம் பண்றதா சொல்லிட்டு, பண்ணலைனுதான் பிரச்னையா பேசிருக்காங்க.

உண்மையைச் சொல்லணும்னா, அந்த டிரெஸ் போட்ட போட்டோவை நான் கடந்த வருஷம் அக்டோபர்லேயே எடுத்துட்டேன். ஆனால், சில வாரங்கள் கழிச்சு போஸ்ட் போடும்போதுதான் நான் அவங்களுக்கு வீடியோ மூலம் புரொமோஷன் பண்ண பணம் வாங்கினது தெரிஞ்சது.

அதுக்குள்ள டிரெஸ்ஸை ஃபிரெண்ட்ஸ்கிட்ட கொடுத்துட்டேன். அந்த டிரெஸ் யார்கிட்ட இருக்குதுனு கண்டுபிடிக்க கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு. ஆனா, இப்போ கண்டுபிடிச்சு போஸ்ட்டும் போட்டுட்டேன். ரெண்டு வருஷமா புரொமோஷன் பண்றேன். எல்லாருக்கும் இலவசமா பண்ண எனக்கு நேரம் இல்லை. அதுமட்டுமல்ல என்னுடைய ஒரு போஸ்ட் மூலமே குறைஞ்சது அந்த பிராண்டுக்கு 5,000 ஃபாலோயர்கள் அதிகரிப்பாங்க. வீடியோ போட்டா 30,000 பேர் வரை ஃபாலோயர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அதன் மூலம் அவங்களுக்கு ஆர்டர்கள் அதிகமாகி 2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அதுக்கு நான் 10,000 தான் வாங்குறேன். இவ்வளவு தொகை கொடுக்க முடியாதுனு சொல்றவங்ககிட்ட இன்னும் கம்மியாகூட வாங்கியிருக்கேன்" என்ற ஆல்யாவிடம், நீங்க ஒரு கிராஃப்ட் ஷாப் நபரை ஏமாத்திட்டதாகவும், அவங்க பொண்ணை மருத்துவமனையில் சேர்த்திருந்தபோது, கொடுத்த காசை உங்ககிட்ட திருப்பிக் கேட்டதாகவும், நீங்க அதுக்கு ரிப்ளையே பண்ணலைன்னும் சொல்லப்படுதே என்று கேட்டோம்.

ஆல்யா மானசா
ஆல்யா மானசா
Instagram Post

``ஆனா அவங்க கொடுத்த காசுக்கு நான் பிப்ரவரி மாதமே போஸ்ட் போட்டுருக்கேன். அந்த போஸ்ட் இன்னும் என்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் இருக்கு. அவங்களோட பிசினஸ் பக்கத்தை ஃபாலோ பண்றதுக்காக வாங்கின பணத்துக்கு இப்போ கூட அவங்களை நான் ஃபாலோ பண்றேன். வேலை செய்துட்டு எப்படி நான் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியும். வதந்திகளைப் பரப்புறவங்க முதல்ல என்னுடைய புரொஃபைலை செக் பண்ணிப் பாருங்க. உண்மை தெரியாம வதந்திகளைப் பரப்பாதீங்க. நாங்களும் மனுஷங்கதான். ரொம்ப மன அழுத்தமா இருக்கு. இப்போ கூட என்னோட ரசிகர்கள்தாம் எனக்கு முழு சப்போர்ட் பண்றாங்க. என்னை நம்புறாங்க. எங்க பிராண்டுக்கு புரொமோஷன் பண்ணுங்கனு சொல்றாங்க. மக்கள்தாம் என்னை உருவாக்குனாங்க. அவங்களை நிச்சயமாக நான் ஏமாத்த மாட்டேன்" என்று விடைபெறுகிறார் ஆல்யா. இது குறித்துப் பேச தர்ஷா குப்தாவை தொடர்பு கொண்டோம், ஆனால் அவரிடம் பேச முடியவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு