Published:Updated:

``நடுராத்திரி, நடு ரோட்டில், தனியா காரைத் துரத்திட்டு ஓடினேன்..!" - பாடகி மாலதி லக்ஷ்மன்

மாலதி லக்ஷ்மன்
மாலதி லக்ஷ்மன்

``இரவு 11 மணிக்குக் கச்சேரியை முடிச்சிட்டு ஊரிலிருந்து புறப்பட்டப்போ, காட்டுக்குள்ள போற மாதிரிதான் இருந்துச்சு எனக்கு. "

பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன் எளிய பின்னணியிலிருந்து வந்தவர். தன் குரலாலும் குணத்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரை `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காகச் சந்தித்தோம்.

Malathy Laxman
Malathy Laxman

``பொன் வாக்கியம்னு சொல்ல முடியாது... நான் எப்பவுமே நினைச்சுக்கிற பொன் வார்த்தைகள்னு சொல்லலாம். அவை... பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கை.

இப்போ நான் தனியாகவே நிறைய பயணங்கள் போறேன். 10, 15 ஆண்டுகளா நிறைய விஷயங்களில் நானே இறுதி முடிவை எடுக்கிறேன். ஆனா, ஆரம்பத்துல நான் இவ்வளவு தெளிவாவும் தைரியமாவும் இல்ல.

லக்ஷ்மனுக்கும் எனக்கும் திருமணமான புதிதில், நான் ஒரு ஹவுஸ்வொயிஃபா இருந்தேன். இன்னிசைக் கச்சேரிகளுக்குப் போகும்போது, அவர்கூடவே போயிட்டு வந்துடுவேன். அதனால ஒண்ணும் பெருசா சிரமம் தெரியாது. சினிமாவில் பாட ஆரம்பிச்சதுக்கு அப்புறம், நான் தனியாக கச்சேரிகளுக்குப் போக வேண்டியிருந்துச்சு.

`திருடா திருடி' பட `மன்மத ராசா' பாட்டு ஹிட்டாகி ரொம்ப பிஸியான பின்னணிப் பாடகியாக இருந்த நேரம் அது. தமிழ், தெலுங்குனு ரெண்டு சினிமாக்களிலுமே ஏதாவது ஒரு ரெக்கார்டிங் தினமும் இருந்துக்கிட்டே இருக்கும். இன்னொரு பக்கம், கச்சேரிகளுக்கும் போயிட்டிருப்பேன். வெளியூர்கள் முதல் வெளிநாடுகள்வரை போக வேண்டியிருக்கும். பலதரப்பட்ட மனிதர்களையும் மக்களையும் சந்திக்க வேண்டியிருந்த அந்தக் காலத்தில் நானே சுயமாக முடிவெடுத்துச் சிலவற்றைச் செய்யவேண்டி வந்தது. அப்போது எனக்குத் துணையாக இருந்தது பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவைதான்.

Malathy laxman
Malathy laxman

பத்து, பன்னிரண்டு வருஷம் இருக்கும். ஒரு முறை திருநெல்வேலி பக்கத்துல ஒரு கிராமத்துல சாயங்காலம் 7 மணிக்குக் கச்சேரி. மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கியிருந்த கிராமம் அது. இரவு 11 மணிக்குக் கச்சேரியை முடிச்சிட்டு ஊரிலிருந்து புறப்பட்டப்போ, காட்டுக்குள்ள போற மாதிரிதான் இருந்துச்சு எனக்கு. மறுநாள் காலையில் சென்னையில் ரெக்கார்டிங். மிகவும் நேர நெருக்கடியான சூழ்நிலை. கார்ல எங்க ஃபேமிலி டிரைவர், லாங் டிரைவ்க்கு காரை மாத்தி ஓட்டுறதுக்காக என்னோட டிரைவர்னு ரெண்டு பேரையும் அழைச்சுக்கிட்டுக் கிளம்பி, சென்னை நோக்கிப் பயணமானோம்.

கச்சேரியில பாடும்போது கொஞ்சம் ஃபேன்ஸியா, கலர்ஃபுல்லாகத்தானே டிரெஸ் பண்ணி இருப்போம். கச்சேரி முடிஞ்சு டிரெஸ் மாற்றக்கூட நேரமில்லாம, அந்த டிரெஸ்லேயே சென்னைக்குக் கிளம்பிட்டேன். ரெண்டு டிரைவர்ங்கிறதால ஒருத்தருக்குத் தூக்கம் வந்தால் இன்னொருத்தர் வண்டியை ஓட்டிட்டு வர்ற மாதிரி ஏற்பாடு. நான் பின் சீட்டில் படுத்துத் தூங்கிட்டேன். கார் போயிக்கிட்டிருந்தது. இப்ப இருக்கிற மாதிரி ஃபோர் ட்ராக் ரோடெல்லாம் கிடையாது. சிங்கிள் ட்ராக் ரோடுதான்.

Malathy Laxman
Malathy Laxman

மதுரை நோக்கி வந்துட்டிருந்தப்போ ஒரு இடத்துல... ஒரு டிரைவர் இறங்கிட்டு, இன்னொருத்தர் வண்டியை மாத்துறார். அப்போ நான் ரெஸ்ட் ரூம் போகலாம்னு டக்குனு அவசரமா வண்டியைவிட்டு இறங்கிட்டேன். நான் இறங்கியதை ரெண்டு டிரைவரும் கவனிக்கலை. அவங்க இறங்கி கார் கதவை மூடினதும் நான் இறங்கி கார் கதவை மூடின சவுண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால, அவங்களுக்குச் சத்தம் கேட்கல; நான் இறங்கினதையும் கவனிக்கலை.

அதனால காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க.

நான் இறங்கிய அந்த இடம், ரெண்டு பக்கமும் காடு மாதிரி இருந்துச்சு. ஒரே கும்மிருட்டு. என்னை விட்டுட்டுக் கிளம்பின கார் பின்னாடி கத்திக்கிட்டே ஓடுறேன். ஆனா அது டிரைவர்ஸுக்குக் கேட்கவே இல்ல. அவங்க, சீக்கிரமா சென்னை போய்ச் சேரணும்னு ரொம்ப ஸ்பீடா வண்டியை எடுத்துட்டுப் போயிட்டிருந்தாங்க. ஓடி ஓடிப் பார்த்துட்டு ஒரு கட்டத்தில் அசந்து போய் நின்னுட்டேன்.

நடு ராத்திரியில, நடு ரோட்டுல, ஜிகுஜிகுனு டிரெஸ் போட்டுட்டு நான் நின்னுட்டிருந்தேன். எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. பயம் ஒரு பக்கம். பதற்றம் ஒரு பக்கம். என்ன பண்றதுனு தெரியலை. என் கையில காசு இல்ல. போனும் இல்ல. அப்போ ஆண்ட்ராய்டு போனெல்லாம் வரலை. என்னோட சாதாரண செல்போனும் காரோட போயிடுச்சு. சரி, இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்.

அந்த நேரத்தில் ஒரு லாரி வந்தது. தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு அந்த லாரியை கை காட்டி நிறுத்தினேன். லாரி நின்னுச்சு. அந்த க்ளீனர் பையன் கிட்ட, `எங்க டிரைவர்கள் நான் இறங்கினதை கவனிக்காம காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க. என்னை அவங்ககிட்ட கொண்டுபோய் விடமுடியுமா?'னு கேட்டேன்.

``சரிங்க மேடம், பயப்படாதீங்க. வாங்க, அடுத்து ஒரு ஊர் வருது. அங்க எஸ்.டி.டி பூத்ல இருந்து போன் பண்ணிக்கலாம்'னு சொன்னாங்க. அவங்க லாரியில ஏறிப் போனேன்.

``என் பள்ளி விழாவுக்கு வந்திருந்தவர் யார்னு சொன்னா நம்புவீங்களா?" - பட்டிமன்றம் ராஜா #Motivation

அந்த இருட்டில் நான் இன்னும் பயந்துபோயிருந்தால், அன்னைக்கு எனக்கு என்ன வேணும்னாலும் நடந்திருக்கலாம். ஆனா, முதல்ல நிதானத்துக்கு வந்து, பொறுமையா யோசிச்சு, என் மேல நம்பிக்கைவெச்சு நான் எடுத்த முடிவுதான், எனக்குக் கைகொடுத்துச்சு. அந்த லாரியில நாங்க நாலு ரோடும் இணையுற மாதிரி ஒரு ஜங்ஷனுக்கு வந்ததும், அங்கயிருந்த கடைகள்ல இருந்த எஸ்.டி.டி பூத்துக்குப் போனேன். என் நம்பருக்கு போன் பண்ணினேன்.

கார்ல, என் போன் அடிச்சுட்டே இருந்தும் எடுக்கப்படாமல் இருந்ததால, `என்ன, மேடம் போனை எடுக்கலை...'ன்னு, அப்போதான் முன் சீட்ல இருந்த டிரைவர்ஸ், பின்னாடித் திரும்பிப் பார்த்திருக்காங்க. நான் இல்லைங்கிறது அப்போதான் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. என் போனை அட்டண்ட் பண்ணினவங்ககிட்ட, நடந்ததை எல்லாம் சொன்னேன். `எங்க இருக்கீங்கம்மா'ன்னு கேட்டுட்டு, நான் நின்னுட்டிருந்த இடத்துக்குத் திரும்பி வந்தாங்க. ரொம்ப பதற்றத்தோடு வந்தவங்க, அய்யோ மன்னிச்சிடுங்கம்மானு சொன்னாங்க. அட விடுங்கண்ணேனு சொல்லிட்டுக் கிளம்பி வந்தேன்.

ஆயிரம் ரூபா நோட்டை எடுத்து லாரி ஓட்டுநரிடம் கொடுத்து, கண் கலங்க நன்றி சொன்னேன்.

என்னால இந்தச் சம்பவத்தை வாழ்க்கையில மறக்கவே முடியாது. இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களில் பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கைதான் எனக்கு எப்பவும் துணையாக இருக்கும்!'' என்கிறார் பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன்.

பின் செல்ல