Published:Updated:

``காந்தியிடம் நான் பெற்ற சொத்து விலைமதிப்பில்லாதது!" - நெகிழும் சாலமன் பாப்பையா #Gandhi150

 Gandhi
Gandhi

``என் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பல தலைவர்களை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதில், காந்தி மிக முக்கியமானவர். "

நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் இன்று. அவர் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் வலியுறுத்திய அறநெறிப் பாதையில் பயணித்து வெற்றி கண்டவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர்தான் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா. காந்தியிடமிருந்து தான் கற்றதும் பெற்றதுமான விஷயங்களை விரிவாகப் பேசுகிறார்.

Gandhi
Gandhi

``என் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பல தலைவர்களை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதில், காந்தி மிக முக்கியமானவர். சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காந்தி வருகை தந்தார். காந்தி ஊர்வலமாக நடந்துசென்றபோது, பெரும் கூட்டத்துக்கு நடுவே அவரை எட்டிஎட்டிப் பார்த்தேன். அதன்பிறகு, அவரை நேரில் சந்தித்ததில்லை. குஜராத்தில் காந்தி வாழ்ந்த ஆசிரமத்துக்குச் சென்றிருக்கிறேன்.

என் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் ஆசிரியர்கள் எனக்குக் காந்தியின் உயர்பண்புகளைப் போதித்தார்கள். நான் பேராசிரியரான பிறகு, என் மாணவர்களுக்குக் காந்தியின் பண்புகளைப் போதித்தேன். பிறகு, இலக்கிய மற்றும் பட்டிமன்றக் கூட்டங்களில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் காந்தியின் உயர் பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளைப் பேசிவருகிறேன்.

 Gandhi
Gandhi

காந்தி மறைந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டப் பிறகும்கூட, அவரின் புகழ் அணையாத சுடர்போல பிரகாசித்துக்கொண்டே இருக்கிறது. காரணம், அவர் வாழ்ந்த வாழ்க்கை; கடைப்பிடித்த கொள்கைகள்; பயணித்த அகிம்சை பாதை ஆகியவை உயர்வானவை. காந்தியின் கொள்கைகள் எல்லாவற்றையுமே நானும் ஒப்புக்கொள்கிறேன்; ஏற்றுக்கொள்கிறேன். அவற்றை முழுமையாகப் பின்பற்றாமல் இருந்தாலும், அவர் வாழ்விலிருந்து நான் கற்ற சில அனுபவங்களின் மூலமாகவே என் வாழ்க்கை மேம்பட்டது. அவர் பயணித்த அகிம்சை பாதையில் நானும் பயணித்திருக்கிறேன்.

தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை...  காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்! #Gandhi

`எல்லாச் சமயங்களிலும் இறைவன் இருக்கிறான். எல்லா மதங்களும் நம் மதமே. எதுவும் எனக்குச் சம்மதமே' என்று, தான் வாழ்ந்து காட்டியதுடன், அதை மக்களிடம் வலியுறுத்தியவர் காந்தி. எந்த மத மக்களையும் அவர் வெறுக்கவில்லை. காந்தியின் மூலமாகவே, எல்லாச் சமயங்களைப் பற்றியும் ஆழமான புரிதலும் நேசமும் எனக்குக் கிடைத்தது. இந்தப் புரிதல் வந்தாலே, பிறர் மீது எப்போதும் அன்பு நீடிக்கும். யாருக்கும் கெடுதல் செய்யும் உணர்வே ஏற்படாது. இதுவே காந்தியிடமிருந்து நான் கற்ற, பெற்ற பெரிய சொத்து" என்பவர், அரசியல்வாதிகள் காந்தியிடமிருந்து கற்க வேண்டிய தலைமைப் பண்பு குறித்து அழுத்தமாகப் பேசுகிறார்.

`மக்களுக்கு நல்லது செய்யப்போகிறோம்' என்று தேர்தல் நேரத்துக்கு மட்டும் சூளுரைக்கிற அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், முதலில் காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
சாலமன் பாப்பையா

``சுதந்திரம் கிடைக்கும் முன்பே அயல்நாட்டில் படித்தாலும், தன் படிப்பு, வழக்கறிஞர் அந்தஸ்து எல்லாவற்றையும் புறந்தள்ளி, அரைநிர்வாண ஆடையை விரும்பி ஏற்றுக்கொண்டவர் காந்தி. இந்தத் துணிச்சல், நம்மிள் எத்தனை பேருக்கு வரும். சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த காந்திக்கு, இந்தியாவை ஆளும் தலைமைப் பதவிகளும் தேடிவந்தன. கட்சிப் பதவிகளும் வந்தன. ஆனால், அவை எதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மக்களை வழிநடத்தும் தலைவர்களுக்கு முதலில் தேவை, எளிமைதான். காந்தியின் முதல் அடையாளமே அதுதான். அவரைப் போல எளிமையான அரசியல் தலைவர்களை விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். நம் நாட்டில் சாதி, மத பாகுபாடுகள் வேரூன்றி நம் மக்களின் வளர்ச்சியையும், ஒற்றுமையையும், நிம்மதியையும் பாதிக்கின்றன. எல்லோரும் சகோதர சகோதரிகளே என்ற உணர்வுடன் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், நமக்குள் எதற்கு ஏற்றத்தாழ்வுகள் உண்டாகப்போகிறது? நம்மைப் பிரிப்பது, சில அரசியல்வாதிகள்தான்.

Solomon Pappaiah
Solomon Pappaiah

பொதுப் பணம் என்று வந்துவிட்டால், தன் மனைவியே ஆனாலும் சரியான கணக்குத் தேவை என்பதில் காந்தி கடுமையாக இருந்தார். பதவிகளுக்காகவும், புகழுக்கும், பட்டங்களுக்கும் ஆசைப்படாமல், அதற்காக வாழாமலும் இருந்த மனிதர். மக்களின் நலனுக்கு பணிசெய்து கிடப்பதே என் பணி என்று வாழ்ந்துகாட்டியவர். குடும்பம், தனிப்பட்ட சந்தோஷங்கள் எல்லாவற்றையும் இழந்தார். இந்த எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிய காந்தியின் வாழ்க்கை, நம் எல்லோருக்கும் பாடம்.

காலந்தோறும் பின்பற்ற வேண்டிய காந்தி பொன்மொழிகள்! #VikatanPhotoCards

நம் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு எத்தனை மொழிகளையும், கலைகளையும், தகவல்களை வேண்டுமானாலும் சொல்லிக்கொடுங்கள் பெற்றோர்களே...! அதனால், நம் பிள்ளைகள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். அதேசமயம் காந்தியின் வாழ்க்கை வரலாறு, அவர் கண்ட கனவுகள் பற்றியும் நம் சந்ததியினருக்கு நிச்சயம் கற்றுக்கொடுங்கள். அப்போதுதான் பிள்ளைகள் மனித நேயத்துடன் வளர்வார்கள்.

தன்னை மறந்து மக்கள் மற்றும் நாட்டுக்காகப் பணி செய்ததால், மகாத்மா ஆனார் காந்தி. நாம் நம்மையும், நமக்கு வேண்டியவர்களின் நலன் சார்ந்தே சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் காந்திக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
சாலமன் பாப்பையா

தன்னை மறந்து மக்கள் மற்றும் நாட்டுக்காகப் பணி செய்ததால், மகாத்மா ஆனார் காந்தி. நாம் நம்மையும், நமக்கு வேண்டியவர்களின் நலன் சார்ந்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் காந்திக்கும் நமக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. தான், தன்னை, தனக்கு என்பதையெல்லாம் மறந்து, மக்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்தினால்தான் நேர்மையான தலைமைப் பண்பை அடைய முடியும்.

தேசத்தை, தான் மாற்றியமைக்க நினைத்ததுபோல வாழ்ந்துகாட்டினார் காந்தி. அதனால்தான் 150-வது பிறந்த நாளிலும் அவரைப் போற்றிக்கொண்டிருக்கிறோம். `மக்களுக்கு நல்லது செய்யப்போகிறோம்' என்று தேர்தல் நேரத்துக்கு மட்டும் சூளுரைக்கிற அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், முதலில் காந்தியின் வாழ்க்கைப் பயணத்தை அறிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அத்தகைய அரசியல்வாதிகள் காந்தியின் கொள்ளைகளைப் பேசி பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், காந்தியின் கொள்கைகளை பின்பற்றிப் பிழைக்க வேண்டும்.

  gandhi
gandhi

ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டுக்கு விடுதலைப் பெற்றுக்கொடுத்தாலும், ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வேண்டும்; பொருளாதாரத்திலும் நாடு வல்லரசாக வேண்டும் என்று நினைத்தார். நேர்மை மற்றும் மதிப்பு இரண்டுக்குமே நாணயத்தை உதாரணமாக நாம் கூறுகிறோம். அந்த வகையில் மிக நாணயமான மனிதரான காந்தியின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும். நம் கடைசித் தலைமுறை பிள்ளை வாழும்வரை, மனசாட்சி உள்ள மனிதர்கள் வாழும்வரை காந்தியின் புகழும் வாழும்; வாழ வேண்டும்!" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் சாலமன் பாப்பையா.

அடுத்த கட்டுரைக்கு