கட்டுரைகள்
Published:Updated:

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

முதல் சம்பளம்
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் சம்பளம்

‘முதல் சம்பளம்’தான் இப்போது ஃபேஸ்புக்கில் டிரெண்ட். ‘உங்கள் முதல் சம்பளம் என்ன?’ என்று பிரபலங்களிடம் கேட்டோம்.

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

தொல்.திருமாவளவன்

“1982. எனக்கு 22 வயது. மேற்கொண்டு படிக்குறதுக்கான முயற்சிகளில் இருந்தேன். அப்போ நண்பர் ஒருத்தர் சொல்லி கொத்தவால் சாவடியில் ஒரு காய்கறிக் கடையில் கணக்கு எழுதுற பணியல் சேர்ந்தேன். வரவுசெலவுக் கணக்குகள் எல்லாத்தையும் எடுத்து லெட்ஜரில் எழுதுறதுதான் என்னோட வேலை. முதல் மாதம் 200 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அதுதான் என்னோட முதல் சம்பளம். அந்தப் பணத்தை வெச்சுதான் உணவு, உடை, தேவைகளை சமாளிச்சேன்!”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

‘பரிதாபங்கள்’ கோபி

“2015-ல் ஜீ தமிழ் சேனலுக்காக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’னு ஒரு ஷோ பண்ணினோம். ஷூட்டிங் முடிச்சுட்டுக் கிளம்பும்போது எனக்கும் சுதாருக்கும் 1000 ரூபாய் கையில கொடுத்தாங்க. அதுதான் என் முதல் சம்பளம்.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

பாக்யராஜ்

“ ‘16 வயதினிலே’ படத்துக்காக அம்மன் கிரியேஷன்ஸ் கம்பெனில இருந்து 500 ரூபாய் கொடுத்தாங்க. அதுதான் என் முதல் சம்பளம்!’’

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

உதயச்சந்திரன்

“பொறியியல் முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதல் வேலை 23 வயதில் ஐ.ஏ.எஸ்தான். முதல் மாதம் முழுச் சம்பளம் தரவில்லை. பெற்ற 5,000 ரூபாயில் சிறிது என் அம்மாவிற்கு மணியார்டர் அனுப்பிவிட்டேன்.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

மிஷ்கின்: ஒரு பஞ்சாபி சிங்குகிட்ட சேல்ஸ் மேனா வேலை பார்த்தேன். அவர் எனக்கு 1,200 ரூபாய் சம்பளம் கொடுத்தார்.அதுதான் என்னோட முதல் சம்பளம்.

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

“1955-ல் ஏவிஎம் ஸ்டூடியோவுல எடிட்டிங் கத்துக்கிறதுக்காக அங்க அப்ரண்டீஸா வேலைக்குச் சேர்ந்தேன். அப்போ எனக்கு மாச சம்பளமா 60 ரூபாய் கொடுத்தாங்க. அதுதான் என் முதல் சம்பளமும்.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

கெளதம் கார்த்திக்

‘`நான் காலேஜ் படிக்கிறதுக்கு முன்னாடி 2008 ஆம் ஆண்டு மசினகுடியில் இருக்கிற ‘ஜங்கிள் ஹட்’ங்கிற ரெசார்ட்டில் வேலை பார்த்தேன். அங்க ஹவுஸ் கீப்பிங் மேனேஜரா, ரிசப்ஷனிஸ்ட்டா, ட்ரெக்கிங் கைடா, கெஸ்ட்டை என்டர்டெயின் பண்ணுற கிதாரிஸ்ட்டான்னு பாதி வேலைகளைப் பார்த்திட்டிருந்தேன். என்னுடைய முதல் மாதச் சம்பளமான 5,000 ரூபாயை அப்படியே எங்க அம்மாகிட்ட கொடுத்துட்டு, ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டேன்.’’

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

கு.ஞானசம்பந்தன்

“சோழவந்தான் பக்கத்துல நகரின்னு ஒரு ஊரு. அங்க ‘கோத்தாரி’ங்கிற பேருல ஒரு கெமிக்கல் கம்பெனி. பி.யூ.சி. பெயிலானதும், அங்கதான் லேப் அசிஸ்டென்ட் வேலைக்குப் போனேன். ஆறு மாசம் வேலை பார்த்திருப்பேன். வீட்டுல இருந்து பத்துக் கிலோ மீட்டர் சைக்கிள் மிதிச்சுதான் போகணும். ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா. வாரக் கடைசியில முப்பது ரூபாயாத் தருவாங்க. அந்த முப்பது ரூபாயை வாங்கிட்டு வந்து எங்கம்மா கிட்ட தந்திருக்கேன். அந்த ரூபாயை தன் கையால வாங்கின அம்மா நான் லட்சத்துல சம்பளம் வாங்கினப்ப அதை வாங்க இல்லையேன்னு வருத்தப்பட்டி ருக்கேன்.

பேசி வாங்கினது, பேராசியரா வாங்கினது, சினிமாவுல நடிச்சு வாங்கினது, சீரியல்ல வாங்கினதுன்னு மத்த எல்லா முதல் சம்பளத்துக்கும் முன்னோடி அந்த கெமிக்கல் கம்பெனி சம்பளம்தான்.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

விஜய் ஆண்டனி

“நான் அசிஸ்டென்ட் சவுண்ட் இன்ஜினீயரா வேலைக்குச் சேர்ந்த முதல் மாதம், எனக்கு 600 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. அந்தக் காசில் டாட் கேசட் ப்ளேயர் வாங்கினேன். நான் பார்த்திட்டிருந்த வேலைக்கும், இந்தப் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருந்தாலும், அதை வாங்குறதுல எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும்னு தோணுச்சு.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

கஸ்தூரி

‘`எனக்குப் பத்து வயசு இருக்கும்போது ஆல் இந்தியா ரேடியோவில் குழந்தைகளுக்கான கவிதைப் போட்டி வெச்சிருந்தாங்க. அதுக்கு நான் ஆங்கிலத்தில் கவிதை எழுதி அனுப்பியிருந்தேன். என் கவிதையைத் தேர்ந்தெடுத்து, அதை ரேடியோவில் என்னையே வாசிக்கவும் வெச்சாங்க. அதுக்கு எனக்கு 100 ரூபாய் கொடுத்தாங்க. அதுதான் என் முதல் சம்பளம். அந்த ரூபாயில் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைச்சிட்டு, என் அம்மாவுக்கு ஒரு சேலையும் வாங்கிக் கொடுத்தேன்.’’

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

பாத்திமா பாபு

“காலேஜ் படிக்கும்போது ஆல் இந்தியா ரேடியோவுல டிராமா பேசுறதுக்குப் போனேன். அப்போ எனக்கு சம்பளமா 40 ரூபாய் கொடுத்தாங்க. இதுதான் நான் வாங்கின முதல் சம்பளம். அப்புறம், காலேஜ் படிச்சு முடிச்சுட்டு ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனியில் ஆபீஸ் இன்சார்ஜா வேலைக்குச் சேர்ந்தேன். அங்க நான் வாங்குன முதல் மாசச் சம்பளம் 450 ரூபாய்.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

போஸ் வெங்கட்

“முதன் முதலா `சம்பளம்’னு நான் வாங்கினதுன்னா, அது ‘போஸ்’ கேரக்டர்ல நடிச்சு வாங்கினதுதான். அதுக்கு முன்னாடி காடு, தோட்டம்னு வேலை செஞ்சிருந்தாலும் அதெல்லாம் சொந்த வேலைங்க.

2002ன்னு ஞாபகம். ‘மெட்டி ஒலி’ சீரியலுக்காக அப்ப எனக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பளம். ஏழு நாள் நடிச்சிருந்தேன். 3,500 ரூபாய். அதுக்கான செக்கை ஷூட்டிங் ஸ்பாட்ல தந்தாங்க. அன்னைக்கு ஸ்பாட்டுக்கு டைரக்டர் திருமுருகன் சார் வரலை. அவர் கையாலதான் வாங்கணும்னு வெயிட் பண்ணி, ராத்திரி 11 மணிக்கு அவர் கால்ல விழுந்து வணங்கி அவர்கிட்ட வாங்கினேன்.

ஊருல என் அண்ணனுக்குக் கல்யாண ஏற்பாடு நடந்திட்டிருந்தது. பத்திரிகை அடிக்கிற செலவு என்னுடையதா இருக்கட்டும்னு அதுக்குக் கொடுத்தேன்.’’

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

பிரபு

“1981-ம் ஆண்டு `சங்கிலி’ படத்தில்தான் அறிமுகமானேன். அதில் அப்பாவுடன் இணைந்துதான் நடித்தேன். அந்தப் படத்துடைய தயாரிப்பாளர் குணசேகரன் சார் 5,000 ரூபாய்க்கு செக் எழுதிக் கொடுத்தார். அதை அப்படியே கொண்டு வந்து சித்தப்பாவிடமும், அம்மாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினேன்.”

இவங்க முதல் சம்பளம் இதுதான்!

ரம்யா பாண்டியன்

‘`நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, பார்ட் டைம் இன்சூரன்ஸ் ஏஜென்ட்டா வேலை பார்த்தேன். அதில் முதல் மாச சம்பளமாக எனக்கு 14,000 ரூபாய் கிடைச்சது. அந்தக் காசில் ஒரு தங்க மோதிரம் வாங்கி, எங்க அம்மாவுக்கு சர்ப்ரைஸா கிப்ட் பண்ணினேன்.’’