கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

ட்ரெண்டிங் : லைக்ஸ் அள்ளும் கிராமத்து யூடியூபர்ஸ்!

ட்ரெண்டிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரெண்டிங்

`ஒரு ஸ்மார்ட்போன், கொஞ்சம் டேட்டா , இது மட்டும் போதும் எங்களுக்கு' என VLOG தொடங்கி லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களைச் சம்பாதித்து, யூடியூபைக் கலக்கிக்கொண்டிருக்கும் எளிய மனிதர்கள் இவர்கள். எங்கிருந்து தொடங்கியது இந்தப் பயணம்..?

உங்கள் மீனவன் மூக்கையூர் கிங்ஸ்டன்

மீனவர்களின் வாழ்க்கை, கடல் பயணம், மீன்பிடித் தொழில், கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய அனுபவ தகவல்கள்... என மற்ற யூடியூப் சேனல்களிலிருந்து மாறுபட்டது கிங்ஸ்டனின் `உங்கள் மீனவன்' சேனல். ``ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர்தான் சொந்த ஊர். பதினோரு வயசுலயிருந்து கடலுக்குள்ள மீன் பிடிக்கப் போயிட்டு இருக்கேன். `டிக்டாக்’ வந்த புதுசுல எல்லார் மாதிரியும் சினிமா வசனத்துக்கு வாயசைச்சுக்கிட்டு இருந்தேன். லைக்கே வரலை. `என்னடா லைக்கே வரமாட்டேங்குது’ன்னு ஒரு நாள் கடலுக்குள்ள குதிச்சு சுறாமீன் பிடிச்சு தோள்ல தூக்கிப்போட்டுகிட்டு கொம்பன் சுறா பாட்டுக்கு டிக்டாக் பண்ணினேன். ஒரு லட்சம் லைக் வரை போச்சு. அப்போதான் தோணுச்சு, நமக்குன்னே கடல் இருக்கும்போது நாம ஏன் சினிமா பாட்டுக்கு டிக்டாக் பண்ணணும்னு. அப்போவுலருந்து தினமும் கடலுக்கு போயிட்டு வர்றப்ப ஏதாச்சும் ஒரு மீனைப் பத்தி என்னோட அனுபவத்த ஒரு முப்பது நாப்பது செகன்ட்டுக்கு டிக்டாக் வீடியோ பண்ணி போட ஆரம்பிச்சேன். என்னைத் தொடர்ச்சியா ஃபாலோ பண்ணவங்க, `யூடியூப் சேனல் ஆரம்பிங்க... ரொம்ப நேரத்துக்கு பேசலாம்'னு சொன்னாங்க. டிக்டாக்லயே `வணக்கம் உங்கள் மீனவன்'னுதான் பேச ஆரம்பிப்பேன். கூட ஊர் பெயரையும் சேர்த்து அதையே சேனலுக்கு, `உங்கள்மீனவன் மூக்கையூர்'னு பேரு வெச்சுட்டேன். அப்படித்தான் இரண்டு வருஷத்துக்கு முன்ன சேனல் ஆரம்பிச்சேன். கடலுக்குள்ள நான் பார்க்குற எல்லா விஷயத்தையும் வீடியோவா போட்டேன். காத்துலயும் மழையிலயும்் மீன் பிடிக்கிறதுல ஆரம்பிச்சு மீன் வகைகள் வரைக்கும் பேசி வீடியோ போட்டேன். `நாம சாப்பிடுற மீன்ல எதுல சத்து அதிகம்... எது ஒரிஜினல்... எது போலி'னு வீடியோ பார்க்கிறவங்க நிறைய கேள்விகள் கேட்க ஆரம்பிச்சாங்க.

ட்ரெண்டிங் : லைக்ஸ் அள்ளும் கிராமத்து யூடியூபர்ஸ்!

மூணே மாசத்துல ஆறு லட்சம் சப்ஸ்கிரைபர் வந்தாங்க. ஆனாலும் அப்போ யூடியூப் வருமானம் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஆறாவது வரைதான் படிச்சிருக்கேன். கம்ப்யூட்டர் கிடையாது, போன்லயே வீடியோ எடுத்து, போன்லயே எடிட் பண்ணித்தான் வீடியோ போடுறேன். யூடியூப்ல பணம் பண்ற விஷயமெல்லாம் நமக்குப் புரியலே. நைட்டு முழுசும் கடலுக்குள்ள இருந்துட்டு கரைக்கு வந்ததும் வீடியோவை எடிட் பண்ண ஆரம்பிச்சுருவேன். அப்லோடு பண்றதுக்கு ஊருக்குள்ள நெட் கனெக்‌ஷன் இருக்காது. அதுக்காக ஏழு கிலோமீட்டர் தாண்டி சாயல்குடில வந்துதான் அப்லோடு பண்ணுவேன். இதுல வருமானம் எடுக்கிறது பத்தியெல்லாம் யோசிச்சதேயில்லை. வீட்டுல இருக்கவங்க `என்னடா கிறுக்குத்தனம் பண்ணிட்டுத் திரியுறே'னு ஆரம்பத்துல திட்ட ஆரம்பிச்சாங்க. ஆனா, நமக்குத் தெரிஞ்ச தொழில் அனுபவத்தை மத்தவங்க ஆர்வமாவும் ஆச்சர்யாமவும் கேட்கிறதால எனக்கு வீடியோ போடுறதவிடக் கூடாதுனு தோணிச்சு. சில நண்பர்களோட உதவியால யூடியூப்ல இருந்து வருமானமும் வர ஆரம்பிச்சது. நாட்டுப்படகை எடுத்துக்்கிட்டு் கடலுக்குள்ள போய் திரும்பினா ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும். இப்போ யூடியூப் மெயின் வருமானமா மாறிடுச்சு’’ எனச் சிரிக்கிறார் கிங்ஸ்டன்.

``கடல் பத்தியும், கடல்வாழ் உயிரினங்கள் பத்தியும் நீங்க சொல்ற தகவல்களெல்லாம் சரியானதுதானா?’’

`` `ஜெல்லி மீன் கடிச்சா கை வீங்கும்’னு நீங்க படிச்சீங்கன்னா அதை நான் செஞ்சு காமிப்பேன். ஏன்னா, எனக்குத் தெரியும்... ஒரு ஜெல்லி மீன் பட்டா எவ்வளவு நேரத்துக்கு வீக்கம் இருக்கும், அதுல நச்சுத்தன்மை இருக்கா இல்லையான்னு. நான் சொல்றதெல்லாம் என்னோட அனுபவத்துல இருந்துதான். வீடியோ பார்த்துட்டு நிறைய பேரு பேசுவாங்க. பாராட்டுவாங்க. கடல் பத்தின ஆராய்ச்சியில இருக்கறவங்ககூட பேசுவாங்க.’’

``கடல் பத்தின ஆச்சர்யங்களைச் சொல்லுங்களேன்..?’’

``கடலே ஆச்சர்யம்தான். நீலத் திமிங்கிலத்தை பக்கத்துல இருந்து பார்த்துருக்கேன். கண்ணுக்கு எட்டுற தூரத்துல கூட்டங்கூட்டமா டால்பின் துள்ளிக்குதிக்கிறதைப் பார்த்துருக்கேன். திமிங்கலம் படகையெல்லாம் திருப்பிப் போட்றாதான்னு கேட்பாங்க. கடல்ல சுறா, திருக்கை ரெண்டும்தான் மனுசனை வேட்டையாடக்கூடியது. மீதி எந்த உயிரினமுமே நாம தொந்தரவு குடுக்காதவரை நம்மை எதுவும் செய்யாது. கடல் எங்களோட இன்னொரு அம்மா. எங்களைப் பிள்ளை மாதிரி பார்த்துக்கும்!’’

`my country foods'ஆனந்தி

ண் மணக்கும் கிராமத்துச் சமையல்... கூடவே பனம்பழச் சாறு அதிரசம், பனம்பழ அல்வா... என மரபுவழி உணவுகளைத் திகட்டத் திகட்ட அறிமுகம் செய்து my country foods சேனலுக்கு சப்ஸ்கிரைபர்ஸைக் குவிக்கிறார் ஆனந்தி.

ட்ரெண்டிங் : லைக்ஸ் அள்ளும் கிராமத்து யூடியூபர்ஸ்!

``மன்னார்குடிப் பக்கம், கிளுவத்தூர்தான் சொந்த ஊரு, டெய்லரிங் பண்ணிட்டு இருந்தேன். வீட்டுக்காரர் சலூன் கடைவெச்சிருக்கார்.நாலு வருஷத்துக்கு முன்ன `ஒரு சமையல் சேனல் ஆரம்பிக்கலாம்... நீ சமையல் பண்ணு... நான் வீடியோ எடுக்குறேன்'னு சொன்னார். ஆரம்ப நாள்கள்ல கேமரா முன்னாடி பேசவே ரொம்ப கூச்சமா இருக்கும். அதனால எதுவும் பேசாம சமையல் மட்டுமே பண்ணிட்டு இருப்பேன். போகப் போக என் வீட்டுக்காரர் சொல்லிச் சொல்லி நல்லாவும் பேச ஆரம்பிச்சேன்.

சமையல் சேனல் ஆரம்பிக்கப்போறோம்னு முடிவு செஞ்சாச்சு. ஆனா அதுல என்ன புதுசா செய்யப்போறோம்னு தோணலை. என் மாமியார், ஊர்ல இருக்குற பெரியவங்ககிட்டல்லாம் உட்கார்ந்து பேசுவோம்.அவங்களோட சின்ன வயசுல அவங்களுக்குக் கிடைச்ச உணவு வகையில நமக்குப் பாதிகூட இப்போ கிடைக்கிறது இல்லை. அதையே ஐடியாவா எடுத்து சேனலுக்கான அடையாளமா மாத்திட்டோம்’’ என்கிற ஆனந்தியின் சேனலுக்கு இப்போது பதினைந்து லட்சம் சப்ஸ்கிரைபர்கள்.

``ஊருக்குள்ள இருக்குற சின்னச் சின்ன விஷயங்களையும் வீடியோவா மாத்திருவோம். நாங்க நாலு குடும்பம் சேர்ந்து கூட்டுக்குடும்பமாத்தான் இன்னும் வாழ்ந்துட்டு இருக்கோம், மொத்தமா கிளம்பி காட்டுக்குள்ள போய் பனம்பழம் பறிப்போம். ஊமச்சி வேட்டைக்கு கிளம்புவோம். இது எல்லாமே வீடியோ பார்க்குறவங்களுக்கு புதுசா இருக்கும். நிறைய பேருக்கு அவங்க சின்ன வயசை நினைவுபடுத்துறதாவும் சொல்வாங்க."

``யூடியூபுக்கு முன்னும் பின்னும் வாழ்க்கை எப்படி இருக்கு?’’

(வெட்கத்தோடு சிரிக்கிறார்) ``ஊருக்குள்ள போனாலே சினிமா நடிகையைப் பார்க்குற மாதிரி பார்க்குறாங்க. `ஆனந்தி அக்கா உன் வீடியோ பார்த்தோம்... சூப்பரா பேசுறே'னு சொல்றப்ப சந்தோஷமா இருக்கும். நிறைய சமைப்போம். ஆதரவற்றவங்களுக்கு குடுத்துருவோம். அது மனசுக்கு இன்னும் நிறைவா இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு முகமா இருக்கறது உள்ளூர கொஞ்சம் தைரியமும் சந்தோஷமும் குடுக்குது" என்கிறார்.

`நாகை மீனவன்' குணசீலன்

``நாகப்பட்டினம் ஹார்பர் பக்கத்துல தான் எங்க குப்பம். மீன்பிடிக்கிறதுதான் எங்க வேலைன்னாலும் நினைச்ச நேரத்துல நினைச்ச இடத்துல வலையயைப் போட்டுற முடியாது, எங்களுக்கு சுருக்கு வலையில வேலை. அதனால நாங்க அறுபது பேரு மொத்தமா போவோம். மீன் எங்கே கூட்டமா வருதோ அங்கேதான் வலைய விரிக்க முடியும். அதுவரைக்கும் காத்திருக்கணும்.

ட்ரெண்டிங் : லைக்ஸ் அள்ளும் கிராமத்து யூடியூபர்ஸ்!

அப்படிக் காத்திருக்குற நேரத்துல நமக்கு பொழுது போகணுமே... அப்ப சும்மா தோணுனதுதான் யூடியூப் வீடியோ ஐடியா.சேனல் ஆரம்பிக்க ஆசை இருக்கு... ஆனா எப்படி பண்றதுனு தெரியலை. போகப் போக நண்பர்கள்கிட்டல்லாம் கேட்டுக் கேட்டு, போன்லயே வீடியோ எடுத்து எடிட் பண்ணிபோடப் பழகினேன். மீன்பிடிக்க கடலுக்குள்ள இறங்கினா திரும்பி வர நாலு நாள் ஆகலாம்... பத்து நாளும் ஆகலாம். போற இடத்துல்லாம் தங்கல் இருக்கும். நமக்கு என்ன வேலையோ அதை முடிச்சுட்டு கேமரா எடுத்து வீடியோ எடுக்க ஆரம்பிச்சுருவேன்.

சேனல் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. வலையில கிடைக்கிற மீனைப் பத்தியெல்லாம் பேசுவோம். ஆனா வீடியோ பார்த்துட்டு `இதெல்லாம் தடை செய்யப்பட்ட மீன்களாச்சே’னு சிலர் கமென்ட் போடுறப்போ தான் எங்களுக்கே தெரியவரும்.

ஆரம்பத்துல எங்களுக்கு உடல் உழைப்பு அதிகமா இருக்கும். வேலை வேலைனு ஓய்வெடுக்கக்கூட நேரமில்லாம ஓடுவோம்.இப்போ யூடியூப் மூலமாவும் வருமானம் வர்றதால கொஞ்சம் ரிலாக்ஸா வேலை பார்க்கிறோம்’’ என்கிறார் குணசீலன்.