Published:Updated:

உலக அளவில் அதிகரிக்கும் முட்டை ஏற்றுமதி! நாமக்கலில் வரலாறு காணாத விலை உயர்வு!

முட்டைகள்

மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்ய ஆர்டர் கிடைத்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்ந்திருக்கிறது. இதனால், நாமக்கலைச் சேர்ந்த முட்டை உற்பத்தியாளர்களும், முட்டை ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் அதிகரிக்கும் முட்டை ஏற்றுமதி! நாமக்கலில் வரலாறு காணாத விலை உயர்வு!

மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு முதன்முறையாக முட்டை ஏற்றுமதி செய்ய ஆர்டர் கிடைத்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்ந்திருக்கிறது. இதனால், நாமக்கலைச் சேர்ந்த முட்டை உற்பத்தியாளர்களும், முட்டை ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Published:Updated:
முட்டைகள்

நாமக்கல் மாவட்டம், கறிக்கோழி உற்பத்திக்கும், முட்டை உற்பத்திக்கும் பெயர் பெற்றது. நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. அவற்றில், ஐந்து கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம், தினசரி 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முட்டைகள்
முட்டைகள்

உலகக்கோப்பை கால்பந்து தொடரையொட்டி, வழக்கமாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில், தற்போது 4 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில், தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்த முட்டையின் விலை தற்போது 5 காசுகள் உயர்ந்து, இதுவரை விற்காத அளவுக்கு முட்டை ஒன்று ரூ.5.55 காசுகளுக்கு உயர்ந்திருக்கிறது.

இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் முட்டை ஏற்றுமதியாளர்கள், ``நாமக்கல் மண்டலத்தில் 300-க்கும் அதிகமான முட்டை ஏற்றுமதியாளர்கள் உள்ளோம். பொதுவாக, வருடத்தில் கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களும் முட்டையின் விலை குறைவாக இருக்கும். காரணம், இது ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் சீஸன் என்பதால், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு முட்டை ஏற்றுமதி கணிசமான அளவு குறைந்துவிடும்.

முட்டைகள்
முட்டைகள்

இந்த மூன்று மாதங்களும் குளிர் அதிகம் நிலவும் மாதங்கள் என்பதால், வடமாநிலங்களுக்கு ஓரளவு முட்டைகள் ஏற்றுமதி ஆகும். ஆனால், விலை உயர்வு இருக்காது. இந்நிலையில், இந்த வருடம் கார்த்திகை தொடங்கிய பிறகு, கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, அந்த நாட்டுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள் வருவதைக் கணக்கில் கொண்டு, வழக்கமாக வாங்கும் அளவைவிட, நான்கு மடங்கு முட்டைகளை அவர்கள் ஏற்றுமதி செய்தனர்.

இதனால், 4 கோடிக்கும் அதிகமான முட்டைகளை ஒரு மாதத்தில் மட்டும் அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்தோம். இந்நிலையில், மலேசியாவில் இருந்து முதல்முறையாக நாமக்கல்லில் முட்டைகள் வாங்க ஆர்டர் கிடைத்தது. இதன்மூலம், அங்கு மட்டும் 4 கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். அதோடு, வடமாநிலங்களில் இருந்தும் அதிக அளவு இங்கு முட்டைகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறார்கள்.

நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை
நா.ராஜமுருகன்

இதனால், மாதம் ஒன்றுக்கு வெளிநாடுகளுக்கு மட்டும் 10 கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன்காரணமாக, இந்த வருடம் விலை குறையவே இல்லை. அதோடு, பொதுமக்களிடம் முட்டை நுகர்வு அதிகரிப்பு, தீவன விலை உயர்வு போன்ற காரணிகளும், முட்டை விலை உயர்வுக்கு முக்கியமான காரணம். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகளாவிய அளவில் உள்ள மக்களிடம் உணவில் முட்டையை அதிகம் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த முட்டைகளுக்கான விலையை வாரத்தில் 3 நாள்கள் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயம் செய்கிறது. இந்த முட்டைக் கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, பண்டிகைக் காலங்களின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், நேற்று முட்டையின் கொள்முதல் விலையை 5 காசுகள் உயர்த்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. இதனால், முட்டைக் கொள்முதல் விலை ரூ.5.55 காசுகளாக உயர்ந்தது.

நாமக்கல் முட்டை
நாமக்கல் முட்டை

கடந்த ஜூன் மாதம் 25 -ம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.50 காசுகளாக இருந்தது. தற்போது, முட்டை கொள்முதல் விலை ரூ.5.55 காசுகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டு இருப்பதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த சில நாள்களாக ரூ.5.50 காசுகளாக நீடித்து வந்த முட்டைக் கொள்முதல் விலை தற்போது வரலாறு காணாத விலையைத் தொட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நாமக்கல் மாவட்ட முட்டைக்கோழி உற்பத்தியாளர்களும், முட்டை ஏற்றுமதி செய்பவர்களும் பயனடைவோம்" என்றார்கள்.