Published:Updated:

`நாடாளுமன்றக் கட்டடம் வேண்டாம், தடுப்பூசிக்கு நிதி ஒதுக்குங்கள்' - மோடிக்குக் கடிதம் எழுதிய ஜோதிமணி

பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கீழ் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடித் தேவையான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது- ஜோதிமணி எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஆடம்பரத் திட்டங்களை விடுத்து, கொரோனா தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வயது மக்களுக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என்று பிரதமர் மோடிக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியிருக்கிறார்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

இது குறித்து, பிரதமர் மோடிக்கு ஜோதிமணி அனுப்பியுள்ள கடிதத்தில்,

``நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. பல நகரங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுவருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்தநிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே வருகிறது. மக்களிடத்திலும் பரவலாக அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவிவருவதாக அறிகின்றோம். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலுள்ள நகரங்களில் இந்தநிலை இருப்பதால், தடுப்பூசி முன்பதிவு நிறுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இத்தகைய காலத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதை அதிகரிக்க ரூ. 3,000 கோடி நிதி கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கைவைத்திருக்கிறது.

ஜோதிமணி எழுதிய கடிதம்
ஜோதிமணி எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

இப்படி ஒரு சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் பிரதிநிதியாக நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நிதி உட்பட, பிஎம் கேர்ஸ் - ன் கீழ் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி இருந்தும், உடனடித் தேவையான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய முன்வராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

காங்கிரஸ்: `துரோகம் செய்கிறார்கள்; ரத்தம் கொதிக்கிறது!’ - சொந்தக் கட்சியை விமர்சிக்கும் ஜோதிமணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகைய காலத்தில், ரூ. 20,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பரமாகப் புதிய நாடாளுமன்றம், அலுவலகங்கள் அமைக்க சென்ட்ரல் விஸ்தா புராஜெக்ட் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல், பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறீர்கள். இது அறமற்ற செயல். எனவே, மத்திய அரசு உடனடியாக முன்வந்து, தேவையில்லாத ஆடம்பர திட்டங்களுக்கு செலவு செய்வதை விடுத்து, தடுப்பூசிகளை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

ஜோதிமணி எழுதிய கடிதம்
ஜோதிமணி எழுதிய கடிதம்
நா.ராஜமுருகன்

இந்த நோய்ப் பரவலை குறைக்க வேண்டுமென்றால், வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கப்பெற வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கை பல நாடுகளில் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவதுடன், தடுப்பூசி மையங்கள் மூலம் அனைத்து வயது பிரிவினருக்கும் முன்பதிவுக்கான தேவை இல்லாமல் தடுப்பூசிகள் விரைந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு