பிரசவ வலி எடுத்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றபோது, அந்த வாகனத்திலேயே ஆம்புலன்ஸ் ஊழியரின் உதவியோடு அப்பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், தோகை மலை அருகே உள்ள மாகாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. 21 வயதாகும் இவர் நிறைமாத கர்ப்பிணியாக, லாலாபேட்டை அருகில் உள்ள கள்ளபள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்குள்ள மருத்துவர்களின் அறிவுரையின் பெயரில், கள்ளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம், கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சரண்யா பிரசவத்துக்காக அனுப்பப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
108 ஆம்புலன்ஸில் கரூர் சென்று கொண்டிருந்த நேரத்தில், புலியூருக்கு முன்பு உள்ள வீரராக்கியம் அருகே ஆம்புலன்ஸ் வந்தபோது, திடீரென சரண்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது. வலியில் துடித்த சரண்யாவின் நிலைமை கண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த பயிற்சி பெற்ற உதவியாளர் பதறினார். நிலைமையைக் கண்டவர், சரண்யாவுக்கு வாகனத்தில் வைத்தே பிரசவம் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தார்.

உதவியாளர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உதவியோடு சரண்யாவுக்கு ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சீனிவாசன் மற்றும் பைலட் பிரபு ஆகியோர் சரண்யாவையும் அவரின் குழந்தையையும் கரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்த்தனர்.
கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும், தற்போது நலமாக உள்ளனர். அசாதாரண சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மருத்துவப் பணியாளர்கள் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளையும் சரண்யாவின் குடும்பத்தினர் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.