Published:Updated:

நாமக்கல்: மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை - நிம்மதிப் பெருமூச்சுவிடும் மலைகிராம மக்கள்!

ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல வருடங்களாக சாதிச்சான்றிதழ் கேட்டு கிடைக்காமல் அல்லாடி வந்த சுப்பிரமணி என்பவருக்கும், அவரின் மகள் ரூபிகாவுக்கும், ஆட்சியர் சாதிச்சான்றிதழ் உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல்லிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது, அடுக்கம்புதுகோம்பை என்ற கிராமம். கொல்லிமலையின் அடிவாரத்தில், சேலம், திருச்சி மாவட்டங்களின் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்திருக்கிறது. அடுக்கம்புதுகோம்பை கிராமத்தில் சுமார் 42 குடும்பங்களைச் சேர்ந்த, 155 பேர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்திலிருந்து நெடுஞ்சாலைப் பகுதிக்கு வருவதற்கு, திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி வழியாகச் சென்று, திருச்சி மாவட்ட சாலையை அடைய வேண்டும்.

மலைகிராமத்தில் ஆட்சியர்
மலைகிராமத்தில் ஆட்சியர்

வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில், தற்போது வரை சரியான சாலை வசதி, மின்விளக்கு வசதியும் இல்லை. பல வருடங்களாக, தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி செய்துதரும்படி, அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். அதேபோல், அருகிலுள்ள சூக்கலாம்பட்டி கிராமத்தில் 184 பேர் வசித்துவருகின்றனர். ஆனால், இந்த சூக்கலாம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லை.

மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள்; இலவச  ஆட்டோ ஏற்பாடு செய்த ஆட்சியர்! - கரூர் நெகிழ்ச்சி

இப்படி, அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்த சூக்கலாம்பட்டி மற்றும் அடுக்கன்புதுகோம்பை கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நிலைமையை அறிந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், அந்தக் கிராமங்களுக்கு கடந்த 11-ம் தேதி விசிட் அடித்தார். இரண்டு கிராம மக்களிடமும் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர், அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கிராம மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

மலைகிராமத்தில் ஆட்சியர்
மலைகிராமத்தில் ஆட்சியர்

தொடர்ந்து, அடுக்கம்புதுகோம்பை, சூக்கலாம்பட்டி கிராம மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார். மக்கள்தொகை அடிப்படையில் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படுவதால், 184 மக்கள் வசிக்கும் சூக்கலாம்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க இயலாத நிலை உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கிராமத்துக்கு அருகிலுள்ள திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டுவருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியர், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரை தொடர்புகொண்டு பேசியதால், கர்ப்பிணி தாயமார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகளுக்கு திருச்சி மாவட்ட சூக்கலாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மூலமாக உலர் உணவுப்பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல், சூக்கலாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய குளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர, ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி வழியாகச் செல்லும் பாதைக்கு அனுமதி பெற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சாலை அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கி, தற்போது அந்தப் பணி நடைபெற்றுவருகிறது. மொத்தம், ரூ. 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பல வருடங்களாக சாதிச்சான்றிதழ் கேட்டு கிடைக்காமல் அல்லாடி வந்த சுப்பிரமணி என்பவருக்கும், அவரின் மகள் ரூபிகாவுக்கும், ஆட்சியர் சாதிச்சான்றிதழ் உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

சாதிச்சான்றிதழ் வழங்கும் ஆட்சியர்
சாதிச்சான்றிதழ் வழங்கும் ஆட்சியர்

இதனால், நெகிழ்ந்துபோயிருக்கும் அந்த இரண்டு மலைகிராமங்களைச் சேர்ந்த மக்கள் நம்மிடம் பேசுகையில், "ரொம்ப காலமா சாலை வசதி இல்லாம தவிச்சுட்டு இருந்தோம். புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வெளியூர் போக அல்லாடிக்கிட்டிருந்தோம். கர்ப்பிணி பொண்ணுங்க, வயசானவங்கனு அத்தனை பேரும் மருத்துவ அவசரத்துக்குப் போறதுக்கு சாலை வசதி இல்லாம கஷ்டப்பட்டோம். பள்ளிக்கூடம் போகிற பசங்களும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஆட்சியர் எங்க பிரச்னையை தீர்க்க முயற்சி எடுத்தாங்க. அதேபோல், சாலை பிரச்னை, அங்கன்வாடி பிரச்னை, சாதிச்சான்றிதழ், நீர் நிலைனு எங்க ஊராட்சியிலுள்ள பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்திருக்காங்க. எங்க பல வருசப் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்திருப்பது, பெரிய நிம்மதியைத் தந்திருக்கு" என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு