Published:Updated:

``18 வருஷம் கழித்து நிரம்பிய அணை; வீணடித்த அதிகாரிகள்!'' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

அணை நிரம்பி 4 நாள்கள் ஆனபிறகும், ஆளும் எடப்பாடி அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் மெத்தனப்போக்காக செயல்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையை நிர்வகிப்பதில் எடப்பாடி அரசு தோல்வி அடைந்துள்ளது.

அணையில் செந்தில் பாலாஜி
அணையில் செந்தில் பாலாஜி ( நா.ராஜமுருகன் )

``கரூர் அருகே உள்ள கார்வழி நொய்யல் அணை நிரம்பி வருவதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்னும் இரண்டு நாள்களில் அணையை திறக்காவிட்டால், அணைப்பகுதியில் அமர்ந்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவோம்" என அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Vikatan

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றித்தில் உள்ள கார்வழி அருகே உள்ளது நொய்யல் அணைத்துப்பாளையம் அணை. அந்தப் பகுதியில் பரவலாக மழை பெய்ததால், கடந்த 18 ஆண்டுகள் கழித்து இப்போது நிரம்பியுள்ளது. அந்த அணைப்பகுதியை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அணையில் செந்தில் பாலாஜி
அணையில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

``18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணை நிரம்பியுள்ளது. ஆனால், அதிகாரிகள் அணையைத் திறக்காமல் விட்டதால், வழிந்து ஒரு டி.எம்.சி தண்ணீர் வீணாகப் போய்விட்டது. எனது தொகுதியில் உள்ள இந்த அணையை நான் எம்.எல்.ஏ என்ற வகையில் பார்வையிட வந்தேன். ஆனால், மக்கள் பிரதிநிதியான நான் அணைப் பகுதியை பார்வையிட வரும்பொழுது, அதிகாரிகள் உடன் வர மறுக்கிறார்கள். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாயிகளின் நீர்ப்பாசன தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், அணை நிரம்பி நான்கு நாள்கள் ஆனபிறகும், ஆளும் எடப்பாடி அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் மெத்தனப் போக்காக செயல்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையை நிர்வகிப்பதில் எடப்பாடி அரசு தோல்வி அடைந்துள்ளது.

`செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் வரிசையில் புகழேந்தியா?' - `அமைதி’ புகழேந்தியின் பதில்

அணையில் உள்ள ஷட்டர்களை பராமரிப்பதற்கு, ரூ.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், தற்போது 2 ஷட்டர்களில் ஏற்பட்டுள்ள பழுதால் ஒரு டி.எம்.சி தண்ணீர் வீணாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏழு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணி முறையாக நடக்கவில்லை. அதில் முறைகேடு நடந்துள்ளது. தற்போது அணையில் நிரம்பியுள்ள மழைநீரானது, நொய்யல் மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் விவசாயத்துக்கு ஏற்ற வகையில் உள்ளதால், அதில் உள்ள உப்புத்தன்மை எவ்வளவு என்பது குறித்து விரைவில் ஆய்வுசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

அணையில் செந்தில் பாலாஜி
அணையில் செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இல்லாவிட்டால், அணைப் பகுதியில் அமர்ந்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபடுவேன்" என்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ``நொய்யல் சாயக்கழிவு நீர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அணையின் நீர்திறக்க வாய்ப்பில்லை என்கிறார்களே?" என்று கேட்டதற்கு, ``விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு நினைத்தால், ஒரே நாளில் வழக்கை முடித்து, விவசாயிகளுக்கு அணையிலிருந்து தண்ணீரை திறக்க முடியும்" என பதிலளித்தார் செந்தில் பாலாஜி.