Published:Updated:

திருநங்கைகளுக்கு சுயதொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு; கவனம் ஈர்த்த மாணவிகளின் ஆய்வுக்கட்டுரை!

திருநங்கை வாழ்வு உயர்வதற்கான தீர்வு

`` 'எங்களால் மாணவர் இருக்கையிலும் அமர முடியவில்லை, மாணவிகள் இருக்கையிலும் அமர முடியவில்லை, கழிவறை உபயோகப்படுத்துவதிலும் சிரமம்’ என்றனர். திருநங்கைகள் பள்ளிப்படிப்பை தொடர இயலாத நிலை மாற, பள்ளிக்கல்வி இடைநிற்றல் நடக்காமல் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.’’

திருநங்கைகளுக்கு சுயதொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு; கவனம் ஈர்த்த மாணவிகளின் ஆய்வுக்கட்டுரை!

`` 'எங்களால் மாணவர் இருக்கையிலும் அமர முடியவில்லை, மாணவிகள் இருக்கையிலும் அமர முடியவில்லை, கழிவறை உபயோகப்படுத்துவதிலும் சிரமம்’ என்றனர். திருநங்கைகள் பள்ளிப்படிப்பை தொடர இயலாத நிலை மாற, பள்ளிக்கல்வி இடைநிற்றல் நடக்காமல் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.’’

Published:Updated:
திருநங்கை வாழ்வு உயர்வதற்கான தீர்வு

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 2022 கல்வியாண்டிற்கான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், கரூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 39 ஆய்வுக்கட்டுரைகள் மாநில அளவிற்குத் தேர்வு செய்யப்பட்டன. அதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியில் இருந்து, இரு மாணவிகள் சமர்பித்த ஓர் ஆய்வுக்கட்டுரை மாநில அளவில் தேர்வாகியுள்ளது.

வழிகாட்டி ஆசிரியரான ராஜசேகரன் ஆலோசனைப்படி, 11-ம் வகுப்பு மாணவிகள் பிருந்தா மற்றும் தர்ஷினி இருவரும் இணைந்து ஆய்வு செய்து உருவாக்கிய, `திருநங்கைகளின் வாழ்வை திருப்புமுனையாக்கும் கல்வி' என்ற ஆய்வுக்கட்டுரை பலரது பாராட்டை பெற்றது.

வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரனுடன் மாணவிகள் தர்ஷிணி மற்றும் பிருந்தா
வழிகாட்டி ஆசிரியர் ராஜசேகரனுடன் மாணவிகள் தர்ஷிணி மற்றும் பிருந்தா

ஆய்வுக்கட்டுரை குறித்து, மாணவிகளின் வழிகாட்டி ஆசிரியரான ராஜசேகரனிடம் பேசினோம்.

``திருநங்கைகளுக்கு அந்த உடலியல் மாற்றம் நடக்கும்போது, அவர்கள் பெண்ணாக தங்களை உணரத்தொடங்கும்போது, பெரும்பாலும் குடும்பத்தாரால் நிராகரிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறும் அவலம் நடக்கிறது. விபரம் அறியாத அந்த வயதில் அவர்கள் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்திவிடுகிறார்கள். சக மாணவ, மாணவிகளின் கேலி, கிண்டல் மற்றும் சமூகத்தில் அவர்களை வித்தியாசமாகப் பார்க்கும் கண்ணோட்டம் அனைத்தும் சேர்ந்து அவர்களது வாழ்வை கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

இந்நிலையில், திருநங்கைகளுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு மற்ற திருநங்கைகளே. இதில், அவர்கள் சந்திக்கக்கூடிய மிக முக்கியப் பிரச்னை வருமானம். தங்கள் பணத்தேவைக்காக பிச்சை எடுப்பது முதல் பாலியல் தொழில் வரை மேற்கொள்கின்றனர். ஆனால், இவை இரண்டிலும் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை, நாங்கள் சந்தித்த திருநங்கைகள் இருவரிடம் பேசியபோது புரிந்து கொண்டோம். வருமானத்துக்கு வேறு வழியில்லாததால்தான், அப்படி செய்ய நேரிடுவதாக இருவரும் சொன்னார்கள். மேலும், அவர்களில் ஒருவர் பன்னிரண்டாம் வகுப்புப் படித்தவர். ஆனால், மேல்நிலைப்பள்ளி படிப்பை முடிப்பதற்குள் அவர் சந்திந்த பிரச்னைகள் பல. மற்றொரு திருநங்கை தனது பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார்.

மாணவிகள் தர்ஷிணி மற்றும் பிருந்தா
மாணவிகள் தர்ஷிணி மற்றும் பிருந்தா

அதற்கு, அவர்கள் இருவரும் கூறிய காரணங்கள், `எங்களால் மாணவர் இருக்கையிலும் அமர முடியவில்லை. மாணவிகள் இருக்கையிலும் அமர முடியவில்லை. மேலும், கழிவறை உபயோகப்படுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டது’ என்று கூறினார்கள். நாங்கள் சந்தித்த மற்றொரு திருநங்கையும், இதையே கூறினார்.

திருநங்கைகள் தங்களது உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிப்படிப்பை தொடர இயலாத நிலை மாற, பள்ளிக்கல்வி இடைநிற்றல் என்பது நடக்காமல் இருக்க வேண்டும் என்பது புரிந்தது.

பள்ளிப்படிப்பு முடிக்கப்படாத நிலையில், கல்லூரி படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அனைத்தும் அவர்களுக்குக் கனவாகிப் போகிறது. இதனால், சில மூத்த திருநங்கைகளின் தவறான வழிக்காட்டுதல், குடும்பத்தின் அன்பும் ஆதரவும் கிடைக்காத நிலை போன்ற காரணங்களால், இவர்கள் தவறான பாதைக்குத் தள்ளப்படுகிறார்கள். மூத்த திருநங்கைகளையும் இதில் குறைசொல்ல முடியாது. அவர்களும் இளம் திருநங்கைகள் போல் ஒரு காலத்தில், சமூக புறக்கணிப்பால், தவறான பாதைக்கு தள்ளப்பட்டவர்கள்தான்.

திருநங்கை வாழ்வு உயர்வதற்கான தீர்வு
திருநங்கை வாழ்வு உயர்வதற்கான தீர்வு

எனவே, இவர்களது வாழ்வு நிலை இன்றும் சரியில்லாமல் இருக்கிறது. திருநங்கைகளை அரவணைத்து, அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம் என்று அங்கீகரிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அவர்களுக்குள்ளும் அசாத்திய திறமைகள் பல உள்ளன. அவர்களாலும் இந்தச் சமூகத்தில் பல சாதனைகளை புரிய முடியும்" என்றார்.

திருநங்கைகளுக்குக் கல்வி வழங்கக்கூடிய நல்வாழ்வு குறித்து ஆய்வு செய்த மாணவிகளான தர்ஷினி மற்றும் பிருந்தாவிடம் பேசினோம். ``எங்கள் ஆய்வின் மூலம் ஆறு தீர்வுகளை முன்வைக்கிறோம்...

1. பதின்ம வயதில் ஏற்படும் கல்வி இடைநிற்றலை தவிர்க்க மாநிலம், மாவட்டம் வாரியாக திருநங்கைகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப உண்டு, உறைவிடப் பள்ளிகள் தனியாக அவர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும்.

2. மாநிலத்திற்கு குறைந்தபட்சம், ஒரு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரிகளை இவர்களுக்கென ஏற்படுத்த வேண்டும்.

3. இப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதிவாய்ந்த திருநங்கைகள் பணியமர்த்தப்பட வேண்டும். மேலும், மாவட்டத்திற்கு ஒரு கலந்தாய்வு மையம் நிறுவி, அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, அவர்கள் கல்வி தொடர உறுதுணையாக இருக்க வேண்டும்.

4. கல்லூரிப் படிப்பு முடிந்த வயதில் உள்ள நடுத்தர வயது திருநங்கைகளுக்கு தொழிற்பயிற்சி சிறப்பு முகாம்கள் நடத்தி, அவர்கள் சுயமாக வருமானம் பெற அரசு வழிவகை செய்ய வேண்டும். உதாரணமாக தையல் பயிற்சி, மொபைல்போன் சர்வீஸ், கைவினைப் பொருட்கள் பயிற்சி போன்றவற்றை நடத்தி, பயிற்சி சான்றிதழ் அளித்து, அவர்கள் வாழ்வு மேம்பட வழிவகை செய்யவேண்டும்.

5. தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு சதவிகிதம் திருநங்கைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

பரிசு பெறும் மாணவிகள்
பரிசு பெறும் மாணவிகள்

6. மேலும், சிறந்த உடல்பலம் கொண்ட இவர்களை பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தி, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும். மொத்தத்தில், திருநங்கைகளின் அனைத்து பிரச்னைகளையும் களையக்கூடிய சக்தி, கல்வி என்ற ஆயுதத்திற்கே உள்ளது.

`ஒரு தேசத்தின் மேன்மை என்பது, அதிலிருக்கும் எளியவர்கள் நடத்தப்படும் விதத்தை வைத்து மதிப்பிடப்படுகிறது' என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்துள்ளார். எனவே, ஊர்கூடி தேர் இழுப்பது போல, அரசும் மக்களும் இணைந்து அவர்களுக்கு நல்லதொரு வாழ்வினை உருவாக்கித் தர வேண்டும்.

எங்களது இந்த ஆய்வுக் கட்டுரை மாவட்ட அளவில் தேர்வு பெற்று, மாநில அளவிற்குத் தேர்வானது. தேசிய அளவுக்கு தேர்வாகவில்லை என்றாலும், பலரது கவனத்தை பெற்றது. இந்த கட்டுரை செயல்வடிவம் பெற்றால், திருநங்கைகளின் வாழ்வுக்கு ஒளி கிடைக்கும்" என்றார்கள்.