கால்பந்து விளையாட்டுக்கு உலகம் முழுக்க அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஒரு மாதகாலமாக ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கால்பந்துப் போட்டி நடைபெற்று வரும் நில்லையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
வரும் ஞாயிறன்று, அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட இருக்கின்றன. கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு ஆசிய கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் கால்பந்துப் போட்டி நடக்கிறது. இதனால், அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் அங்கு உணவுக்காக முட்டையின் தேவையும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் முட்டைக்குப் பிரசித்திபெற்றது. இங்கிருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி நடைபெற்று வந்தது... கத்தாரில் இப்போது அதிகரித்து வரும் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் கூட்டத்தால், கடந்த ஒருமாத காலமாக இங்கிருந்து ஏற்றுமதியாகும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வழக்கமாக, கத்தாருக்கு மாதா மாதம் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால், ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உணவில் முட்டை சேர்க்கும் சூழல் ஏற்பட்டதால், கடந்த 10 நாளுக்கு முன்புவரை 2 கோடி முட்டைகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால், முட்டையின் விலையும் அதிகரித்தது.
இந்நிலையில், ஒருமாதம் முடிவதற்குள் மேற்கொண்டு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, மொத்தமாக இதுவரை இரண்டு கோடியே, ஐம்பது லட்சம் எண்ணிக்கையிலான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள்,
``நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவுத் திட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அதோடு, குவைத், இரான், கத்தார், மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாகத் கத்தாரில் நடைபெறும் உலகக் கால்பந்து போட்டி எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வழக்கமாக கத்தாருக்கு 50 லட்சம் முட்டைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக அது 1 கோடி முட்டைகளாக கடந்த மாதம் உயர்ந்தது.

தற்போது மேலும் சுமார் 1 கோடி முட்டைகள் கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை மொத்தமாக சுமார் இரண்டு கோடியே, ஐம்பது லட்சம் முட்டைகள் நாமக்கல் மண்டலத்தில் இருந்து கத்தாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, வருகிற ஜனவரி மாதத்திற்குள் மேலும் 2 கோடி முட்டைகள் வரை கத்தாருக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். விலையும் உயர்ந்துள்ளது. வழக்கமாக ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் சீஸன் என்பதால், இந்த மாதத்தில் விலை குறையும். ஆனால், கால்பந்து போட்டி புண்ணியத்தில், விலை உயர்ந்தே உள்ளது" என்றார்கள்.