சிறுமிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் விழித்துக்கொண்ட தமிழ்நாடு மின்வாரியம்!

கொடுங்கையூர் சிறுமிகள் இரண்டு பேர் மரணத்துக்கு பின்னர்தான் தமிழக மின்சார வாரியம் விழித்துக்கொண்டு புதிய மின்வயர்களை நீக்கிவிட்டு புதிதாக மின்வயர்களை மாற்றி வருகிறது.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர். ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பி பிளாக்கில் வசித்து வரும் பார்த்திபன்- அனு தம்பதியின் மகள் பாவனா. 7 வயதான இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பு டி பிளாக்கில் வசித்து வந்த மூர்த்தியின் மகள் யுவஸ்ரீ. 9 வயதான இவர் 4-ம் வகுப்பு படித்து வந்தார். தொடர் மழையால் சென்னையில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழைக் காரணமாக அங்குள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் பாவனாவும் யுவஸ்ரீயும் மழை நீர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற இரண்டு பேரும் மழை நீரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

"ராஜரத்தினம் நகர் தெருவில் உள்ள மின்சாரப் பெட்டியிலிருந்து மற்றொரு மின்சாரப் பெட்டிக்குத் தரை வழியாக மின்சாரம் வயர் செல்கிறது. மண்ணில் புதைக்கப்படாமல் கிடந்த அந்த வயர் சேதம் அடைந்திருந்தது. தெருவில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. அப்போது, கடைக்குச் சென்ற இரண்டு குழந்தைகளும் அந்த வழியாகச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. உடனடியாக மின்சார வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தோம். 4 மணி நேரம் கழித்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்" என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி வியாசர்பாடி செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார், உதவிப் பொறியாளர் டெல்லி மற்றும் அப்பகுதியின் கண்காணிப்பாளர்கள் ஐந்து பேர் உட்பட 8 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழக அரசும் நிவாரணம் என்ற பெயரில் 5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.

தற்போது, இரண்டு சிறுமிகள் பறிகொடுத்த பின்னர் மின்சார வாரியம் விழித்துக்கொண்டு மின்சாரப் பெட்டியை இன்று சரி செய்து வருகிறது. 10 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு மின்வயர் பதிக்கும் பணி நடந்து வருகிறது. உடைந்த கிடந்த மின்பெட்டியை வைக்க இரண்டு பக்கம் சிறிது தூண் கட்டப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக இந்தப் பணி நடந்து வருகிறது.

கொடுங்கையூர் மட்டுமல்ல. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இதே நிலையில்தான் மின்சாரப் பெட்டிகள் இருக்கின்றன. அந்தந்த மண்டலங்களில் உள்ள மின்பொறியாளர்கள் களத்தில் இறங்கி இவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. 

இதனிடையே, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ உடல் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. சிறுமிகளின் உடல் அடக்கம் கொடுங்கையூரில் நடந்தது. இறுதிச் சடங்கில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன்  எம்.எல்.ஏ சேகர் பாபு உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!