வெளியிடப்பட்ட நேரம்: 17:05 (02/11/2017)

கடைசி தொடர்பு:17:18 (02/11/2017)

சிறுமிகள் மரணத்துக்கு மின்சார வாரியத்தின் 8 அலட்சியங்கள்! 

மின்வாரியத்தின் அலட்சியமான போக்கே சிறுமிகளின் மரணங்களுக்கான காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் இரண்டு நாள் மழையில் தேங்கி நின்ற நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியில் பாய்ந்த மின்சாரத்தால் இரண்டு பச்சிளங்குழந்தைகள் பலியாகியிருக்கிறார்கள். இது விபத்து என்பதைவிட கொலை என்றே சொல்லப்பட வேண்டும். மின்வாரியத்தின் கீழ்க்கண்ட அலட்சியமான போக்கே இந்த மரணங்களுக்கான காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

* 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும்வெள்ளத்துக்குப் பிறகு, சென்னை நகரத்தில் உள்ள மின்வாரிய பில்லர் பாக்ஸ் அனைத்தும் தரைமட்டத்திலிருந்து உயரமாக வைக்கப்பட வேண்டும் என்று  முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. குழந்தைகள் இறந்த இந்தப் பகுதி வியாசர்பாடி வட்டத்துக்கு உட்பட்டது. இந்த வட்டத்தில் பெரும்பாலான பில்லர் பாக்ஸ்கள் பழைய நிலையிலேயே தரைமட்டத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பில்லர் பாக்ஸ்களை உயரே வைப்பது தேவையில்லை என்று முடிவெடுத்தது யார்? அந்த நிதி என்ன ஆனது?

* கடந்த முறை பூமிக்கடியில் உள்ள மின் கடத்திகள் ஏதேனும் கசிவு ஏற்பட்டால் மின்சாரம் பாய்வதை உடனடியாகத் தடுக்கும் சர்க்யூட் பிரேக்கர்கள் அமைக்கலாம் என்ற தொழில் நுட்பம் இருந்த போதிலும் பூமிக்கடியில் செல்லும் புதைவட கேபிள் இருக்கின்ற இடங்களில் ஏன் அமைக்கப்படவில்லை.

* புதைவட கேபிள்கள் பூமிக்கடியில் செல்லும்போது கேபிளுக்கு மேல் V.trop என்ற சிமென்ட்  ஸ்லாப் போடவில்லை. கேபிள்களை இணைப்பதற்கான ஜாயின்ட் பாக்ஸ்சும், கேபிள்களை பில்லர் பாக்ஸ்சில் பொருத்தும்போது Glad என்ற சாமான்களும் பொருத்துவது இல்லை. மின்சாரம் செல்லும் கேபிளில் பழுது ஏற்பட்டால் உடனடியாக மின்தடை  ஏற்படுத்தும் H.R.C. ப்யூஸ் இல்லை. கேபிள்களைப் பூமிக்கடியில் புதைத்து சிமென்ட் ஸ்லாப் அதன் மேல் வைக்காமல் தரைக்கு மேலே கொண்டு சென்றது ஏன். அதனால்தானே மின் கசிவு ஏற்பட்டது.

* அனைத்துத் துறைகளிலும் பருவ காலத்துக்கு முந்தைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பல கூட்டங்கள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. மின்வாரியத்தில் பருவகாலத்துக்கு முந்தைய தயாரிப்புக் கூட்டங்கள் நடைபெற்று அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததற்கு யார் காரணம்?.

மற்ற துறைகளைவிட மின்சாரத் துறையில் பருவகாலத் தயாரிப்புகள் என்பது செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்படிப்பட்ட பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பழுதுப்பட்ட பில்லர் பாக்ஸை மாற்றியிருக்க முடியும், மின் கசிவும் ஏற்பட்டு இருக்காது உயிரிழப்பும் நடந்திருக்காது.

* பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அந்தப் பகுதியில் நடைபெறாததை விநியோகப் பகுதியின் உயர்மட்ட அதிகாரியான இயக்குநர், விநியோகம் போன்றவர்கள் மேற்பார்வையிடத் தவறியது ஏன்? 

* விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்ட பின்பும் தான், மின்துறை அமைச்சர்  குழுவை அமைத்து பருவகால முன்னெச்சரிக்கை நடடிவக்கை எடுக்கப்பட்டதா என உறுதி செய்ய உள்ளாரா, வாரியமே எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர்தான் அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?

* மழைக்காலங்களில் மட்டும் போதுமான பணிகள் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டுவது நீண்ட காலமாக மின்வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள்கூட நிரப்பப்படாமல் இருப்பதற்கு யார் காரணம். குழந்தைகள் இறந்த இந்தப் பகுதியில் 7 உதவியாளர்களுக்குப் பதில் 2 பேரும், 7 வயர்மேன்களுக்குப் பதிலாக 3 பேர் மட்டுமே நீண்ட நாள்களாகப் பணியாற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதுதான் நிலைமையாக உள்ளது. போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டியதில்லை என்று முடிவெடுத்தவர்கள் யார்?

இப்படி ஏராளமான கேள்விகளும் அரசு தரப்பு பலவீனங்களும் வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த இரண்டு உயிர்களின் மரணம் என்பது அரசு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கின் காரணமான கொலைகளே. கீழ் மட்டத்திலிருந்து அதிகாரிகள்மீது பழியைப் போட்டுவிட்டு அமைச்சரோ முடிவெடுத்த அதிகாரிகளோ தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க எடுக்கப்பட்ட முடிவுகள் அமலாவதற்கும் உரிய மனிதசக்தி, தேவையான உதிரிபாகங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததற்கு யார் காரணம் எனக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.