வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/11/2017)

கடைசி தொடர்பு:22:00 (02/11/2017)

மழை நிவாரணப் பணிகளுக்கு அமைச்சர்கள் நியமனம்: முதலமைச்சர் உத்தரவு

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ளும்பொருட்டு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த மூன்றாவது ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், சென்னைப் பெருநகர மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

மேலும், பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்கவைக்க ஏதுவாக கடலோர மாவட்டங்களில் 115 பல்நோக்குப் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மழைநீர் புகாத வண்ணம் தெருவோர மின்சாரப் பகிர்மான பெட்டிகளை நல்லமுறையில் பராமரித்து அவற்றை உயரத்தில் அமைத்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், மழை நீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் மின் மோட்டார்களைப் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் ஏற்படாவண்ணம் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்களை நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.