சென்னையில் 3 மணி நேரத்துக்கும் மேலாகக் கனமழை!

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மாலை 5 மணி முதல் 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னை மாநகரச் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராயப்பேட்டை, சாந்தோம் நெடுஞ்சாலை, எழும்பூர், அடையாறு, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, கிண்டி, வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.

மாலை 5 மணி முதல் பெய்து வரும் மழையில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை இன்னும் ஒருமணி நேரத்துக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகளான செங்கல்பட்டு, மறைமலைநகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!