சென்னையின் பல இடங்களில் மின் துண்டிப்புக்குக் காரணம் என்ன? - அமைச்சர் விளக்கம்!

நேற்று மாலை சென்னையில் பொழிய ஆரம்பித்த மழை இன்னும் விட்டபாடில்லை. இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி

கடந்த மாதம் 27-ம் தேதி தமிழகத்தில் ஆரம்பித்த வட கிழக்கு பருவமழை, தற்போது மிகத் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மாநிலத்தில் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பொழிந்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மழையால் தேங்கிவரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, `சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பல இடங்களில் தேங்கியுள்ள நீரின் அளவு 4 அல்லது 5 அடியைத் தாண்டியுள்ளது. இப்படி அதிக நீர் சூழ்ந்துள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடியத் தொடங்கியுடன் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். பொது மக்களுக்கு வேறு ஏதாவது குறைகள் இருந்தால் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்' என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!