களத்தில் இறங்கி மழை நீரை அகற்றும் பணியை ஆய்வு செய்தார் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்!

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் தேங்கி கிடந்த மழை நீரை அகற்றும் பணியை போலீஸ் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. ஆனாலும் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. நேற்றிரவு நான்கு மணி நேரம் கொட்டி கனமழையால் வீடுகள் மற்றும் கடைகளில் மழை நீர் புகுந்தது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதியின் வீட்டின் உள்ளே மழை நீர் புகுந்தது.

சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மழை நீர் வெள்ளம்போல் காட்சி அளித்துவருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் இணை ஆணையர்கள் அவ்வை சண்முகம் சாலையில் இறங்கி மழை நீரை அகற்றும் பணியைப் பார்வையிட்டார். அப்போது, கமிஷனரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமிஷனர் விஸ்வநாதன், நிவாரணப்பணி, மீட்பு பணி உட்பட அனைத்து பணிகளிலும் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, பொதுமக்களும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஆய்வுப் பணியை கமிஷனர் மேற்கொண்டு வருகிறார். 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!