சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் உள்ள வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசித்து வந்த சிறுமிகள் பாவனா, யுவஸ்ரீ கடந்த 1-ம் தேதி வீட்டின் முன்பு தேங்கியிருந்த மழை நீரில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த மின்சாரப் பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இது தெரியால் சிறுமிகள் இரண்டு பேரும் அந்தப் பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுமிகளும் உயிரிழந்தனர். இதனால் கொந்தளித்த அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் அமைச்சர் தங்கமணி.

மேலும், உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு மின்சாரத்துறை சார்பில் தலா இரண்டு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். முதல்வர் பழனிசாமியும் சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தார்.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ், சிறுமிகள் உயிரிழப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அப்போது, உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தார். இதையடுத்து, இதை வழக்காக எடுத்து உயர் நீதிமன்றம் விசாரணை செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதோடு, 7 நாள்களுக்குள் இந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!