'நானே பொறுப்பேற்பேன்' - அமைச்சர் தங்கமணி  | minister thangamani

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (03/11/2017)

கடைசி தொடர்பு:15:20 (03/11/2017)

'நானே பொறுப்பேற்பேன்' - அமைச்சர் தங்கமணி 

மின்சாரம்தொடர்பாகப் புகார்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் நானே பொறுப்பேற்பேன் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சென்னை கொடுங்கையூரில் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு தேங்கி கிடந்த மழை நீரில் விளையாடிய பாவனா, யுவஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சென்னையில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. பொதுமக்கள் புகார் அளித்தும் அலட்சியமாகச் செயல்பட்ட மின்வாரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 8 பேரைப் பணியிடை நீக்கம் செய்தார் அமைச்சர தங்கமணி. இதையடுத்து, அந்தப் பகுதியில் சேதமடைந்திருந்த மின்சாரப் பெட்டி உடனடியாகச் சரி செய்யப்பட்டது. அரசின் அலட்சியத்தால்தான் இரண்டு உயிர்கள் பறிபோனதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். 

சென்னையில் நேற்றிரவு கொட்டித்தீர்த்த மழையால் சாலைகள், தெருக்களில் மழை நீர் தேங்கிநிற்பதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் இன்று மாலைக்குள் மின்சேவை சீராகும். மின்சாரத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் இணைப்புப் பெட்டிகள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே பொறுப்பேற்பேன்" என்று கூறினார்.