“கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும்..!” சென்னை, காஞ்சி, திருவள்ளூருக்கு எச்சரிக்கை

வானிலை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழை காரணமாக இந்த மூன்று மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க அதிக வாய்ப்பு ஏற்படலாம். கடந்த மூன்று நாள்கள் பெய்த மழையால் சென்னைக்குக் குடிநீர் வழக்கும் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

கடந்த 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களாக மழை வெளுத்து வாங்கிவருகிறது. சென்னையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால், போக்குவரத்து முடங்கியது. சென்னையில் 122 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையில் சிக்கித் தவித்த மக்களை மின்வெட்டும் வாட்டி வதைத்தது. மாநகரப் பேருந்து போக்குவரத்தில் தொய்வு ஏற்பட்டதால், ரயில்களும்  நிரம்பி வழிந்தன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் ரயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன. மேலும், மெட்ரோ ரயில்களில் நேற்றும், இன்றும் வழக்கத்துக்கு அதிகமான கூட்டம் இருந்தது. 

வானிலை

இந்நிலையில், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அதிக அளவில் மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேக்கங்களின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழையின் தாக்கம் இருப்பதால் இந்த ஏரிகளுக்கு நீரின் வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திரப் பகுதியிலிருந்து உபரி மழை நீர், கொசஸ்தலை ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளதால் பூண்டி ஏரி நீர் மட்டம்  உயர்ந்து கொண்டிருக்கிறது.  

பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்கலாம். ஆனால், இன்று காலை நிலவரப்படி ஏரியில் 368  மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 231 கன அடி தண்ணீர் வருகிறது. 11 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 749 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இங்கு மொத்தம் 3,645 மில்லியன் கன அடி நீரைச் சேமித்து வைக்கலாம். ஏரிக்கு 876 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 66 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 250 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஆனால், இதன் மொத்தக் கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு 289 கன அடி நீர் வருகிறது. உபரி நீர் வெளியேற்றம் இல்லை.  பூண்டி,செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து இப்போது ஒரு டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது.

வானிலை  

ஒரு வார வானிலை அறிவிப்பை நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

வெள்ளிக்கிழமை (3.11.17): அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சனிக்கிழமை (4.11.17): தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழைபெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யும்.

ஞாயிற்றுக்கிழமை (5.11.17): தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். ராயல சீமா மற்றும் ஆந்திராவின் தென் கடலோரப் பகுதியில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பெய்யும்.

 திங்கள்கிழமை (6.11.17): தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும். ராயலசீமா மற்றும் தென் ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மழையோ கனமழையோ பெய்யும். நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களிலும் ராயலசீமா மற்றும் ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்கள், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் கனமழையும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!