வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (03/11/2017)

கடைசி தொடர்பு:18:33 (03/11/2017)

கனமழை எதிரொலி; அரைலிட்டர் பால் 50 ரூபாய், ஒரு லிட்டர் பால் 80 ரூபாய்..!

மழை

2015 ஆம் ஆண்டு மழைவெள்ளத்தினால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் வசித்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ளமுடியாமல் தத்தளித்த அந்த நேரத்தில் மக்களின் அந்த இக்கட்டைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு அத்தியாவசியப் பொருள்களின் விலையைக்கூட்டி லாபம் பார்த்தனர் சில 'மனிதர்கள்'. குறிப்பாக பால் விற்பனை. மழை, மனிதநேயத்தை அடையாளங்காட்டிய அதேநேரத்தில் இப்படிப்பட்டவர்களையும் கண்டது. மீண்டும் மழையின் பாதிப்பில் இயல்புவாழ்க்கை முடங்கத் தொடங்கியிருக்கும் நிலையில் அதே 'மனிதர்கள்' மீண்டும் கடைவிரித்திருக்கிறார்கள் இப்போது.

இந்த ஆண்டும் மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் முன்பே எச்சரிக்கைவிடுத்திருக்கிறது பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் அத்தியாவசிய உணவுப் பொருளான பால், அரை லிட்டர் பால் பாக்கெட் 40 ரூபாய் முதல் 50.00ரூபாய் வரையிலும், 1 லிட்டர் 80 ரூபாய் முதல் 100.00 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாகத் தகவல் வந்த நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது, பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம். 

பொன்னுசாமிஇதுகுறித்து இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு. ஆ.பொன்னுசாமியிடம் பேசினோம். “மழை வெள்ளத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் சக மனிதனுக்கு உதவியாக இருக்கவேண்டியது இந்தநேரத்தில் அவசியம். அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் மக்கள் தவித்துவரும் இந்த நேரத்தில் காசு பார்க்க நினைப்பது மனிதாபிமானமற்ற செயல். குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் தேவையான அத்தியாவசியப் பொருள் பால். மழை கடுமையாக உள்ள இந்த நேரத்தில் சில்லறைக்கடைகள் மூடப்பட்டுவிடுவது இந்த விஷமிகளுக்கு வாய்ப்பாக போய்விட்டது.

மடிப்பாக்கம், முடிச்சூர், வேளச்சேரி போன்ற மழை பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சில விஷமிகள் எங்களிடமிருந்து மொத்தமாக பால் பாக்கெட்டுகளை வாங்கி மக்களுக்குக் கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தடையற்ற சேவையை வழங்குபவர்கள் பால் முகவர்கள். ஆனால், கூடுதல் விலைக்கு விற்கும் இந்த விஷமிகளால் எங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகிறது.
 
பொதுவாக விசேஷங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் தனிநபர்களுக்கு மொத்தமாக பால் பாக்கெட்டுகளை விற்க மாட்டோம். அதனால், இந்த விஷமிகள் தங்கள் வீட்டில் விசேஷம் நடைபெறுவதாக எங்கள் முகவர்களை நம்பவைத்து மொத்தமாக 50, 100 எனப் பால்பாக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர். சில உள்ளுர் ஆசாமிகள் சில்லறைக்கடைக்காரர்களை மிரட்டி  மொத்தமாக வாங்கிச் சென்று சிறிதும் மனிதாபிமானமின்றி மும்மடங்கு விலை உயர்த்தி விற்கின்றனர். 

இந்தத் தகவல் கிடைத்தபிறகு நாங்கள் காவல்துறைக்குத் தகவல் தந்ததோடு, போதிய ஆதாரங்களின்றி தனிநபர் யாருக்கும் மொத்தமாக விற்கக் கூடாது என எங்கள் முகவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதையும் மீறி மிரட்டி வாங்க முயலும் நபர்களை உள்ளுர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படியும் கூறியிருக்கிறோம்” என்றார். 

மனிதம் இருந்தால்தான் மனிதர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் மக்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்