வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (06/11/2017)

கடைசி தொடர்பு:16:02 (13/11/2018)

ஏரி தேடி வீடு போனதா... வீடு தேடி ஏரி வந்ததா... நீரால் சூழ்ந்த நன்மங்கலம்! #SpotReport

சென்னை மீண்டுமொரு பெருமழையைச் சந்தித்திருக்கிறது. 20 நாள்களுக்கு முன்னால் குப்பை அள்ளுகிற நேரத்தில் தென்படுகிற கால்வாய் பகுதிகளை தூர்வாறியிருக்கிறார்கள். பெயருக்கு கால்வாயை தூர்வாரி இருக்கிறார்கள். தென்சென்னையில் இருக்கும் நன்மங்கலம் கோவிலம்பாக்கம் பகுதிகளில் மழைப் பாதிப்புகளைக் காண சென்றிருந்தோம். நன்மங்கலம் ஏரியிலிருந்து வெளியேறுகிற உபரி நீரும் எங்கே செல்வதென தெரியாமல் எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. பலர் வீதிகளில் தேங்கி இருக்கிற நீரை  மோட்டார் உதவியுடன்  வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். தூர்வாரியும் தண்ணீர் எப்படி தேங்கி  நிற்கிறது என்கிற கேள்வி எழாமல் இல்லை. எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். கால்வாயின் வழிகளை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

நன்மங்கலம்

நன்மங்கலம் ஏரி 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடந்த  ஏரி. “ஒரு காலத்தில் ராஜா மாதிரி இருந்த மனுஷன்" என்பார்களே அப்படி இருந்த ஏரி, முப்பது வருடங்களுக்கு முன்பு விவசாயத்துக்கு மிக முக்கியமான ஏரியாக இருந்திருக்கிறது. காலங்களும் மனிதர்களும் மாற 1500 ஹெக்டேர் சுருங்கிவிட்டது. 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஏரியில் 50 அடி நீளத்தில் கலங்கல் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் நீர், கோவிலம்பாக்கம் வழியாக, கீழ்கட்டளை ஏரிக்குச் செல்லும். அங்கிருந்து பள்ளிக்கரணையை நோக்கி  உபரிநீர் செல்லும். 

இன்று  நன்மங்கலம் ஏரி  மழை நீரால் நிரம்பி வழிகிறது. அங்கிருக்கும் மக்கள் ஏரியின் கலங்கல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏரி தூர் வாரப்படாமல் முழுவதும் செடிகளால் படர்ந்திருக்கிறது. வெளியேறுகிற உபரி நீர் அங்கிருந்து கால்வாய் வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது. கால்வாய் வழியைப் பின்தொடர்ந்து சென்றால் பாலங்களை கடக்கிற முக்கிய இடங்களை மட்டும்  தூர்வாரி இருக்கிறார்கள். தூர்வாரிய இடங்களில் எல்லாம் சிறுவர்கள் பெரியவர்கள் எல்லோரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 40 அடியிலிருந்து அதற்கு கீழான அளவுக்கு கால்வாய் சுருங்குகிற இடங்களிலெல்லாம் உபரி நீர் கால்வாயை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து விடுகிறது. குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த நீரை மோட்டார் கொண்டு மீண்டும் கால்வாய்க்கே கொண்டு வருகிறார்கள். ஆக்கிரமிப்புகளும், கட்டடங்களும் கால்வாயை மறித்து கட்டப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாகவே மழை நீர் வீதிகளுக்கும் வீடுகளுக்கும் வந்துகொண்டிருக்கிறது.

நன்மங்கலம்


ஆக்கிரமிப்பு, பிளாட் போட்டது, கட்டடங்கள் கட்டியது என எல்லோரும் பார்க்க, எல்லோருக்கும் தெரிந்தே மொத்தமாய் கால்வாய்களின் முகத்தை சிதைத்திருக்கிறார்கள். நன்மங்கலம் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் ஏரியில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டு  தீபகற்ப பகுதியாகவே மாறிப் போய் இருக்கிறது நன்மங்கலம் ஊராட்சியின் குடியிருப்புப் பகுதிகள். குடியிருப்புப் பகுதியில் இருந்த ஒரு பெண்மணியிடம் பேசினேன்.

 “எங்களுக்கு ஊரு திண்டிவனம். இங்க வந்து 11 வருஷம் ஆயிடுச்சு இதுக்கு முன்னாடி இங்க இருந்தவங்க இந்த வீட்ட எங்களுக்கு ரூபாய் 1.20 லட்சத்துக்கு குடுத்துட்டு போனாங்க. இருக்குற வரைக்கும் இங்க இருந்துக்கலாம். எப்போ காலி பண்ணச் சொன்னாலும் காலி பண்ணனும். வீட்டுக்குப் பட்டாவும் இல்லை" என்கிறார். பட்டா இல்லை என்கிற பெண்மணியின் வீட்டில் மின்சாரம் இருக்கிறது. பட்டா இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்கிற சட்டமே இருக்கிறபோது  எப்படி மின்சாரம் வழங்கினார்கள் என்பது மின்சார வாரியத்துக்கே வெளிச்சம். 

2015 பருவ மழையின்போது ஏரி நிறைந்து உபரிநீர் வெளியேற வழியில்லாமல் நன்மங்கலம், கோவிலம்பாக்கம், நெமிலிச்சேரி, அஸ்தினாபுரம், கடைசிப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து வெள்ளமாக மாறியது. இதற்கு முழு முதல் காரணம் கால்வாய் செல்லும் வழிகள்  தடுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதுதான். ஏரியில் இருந்து பல்லாவரம் நகராட்சிக்குச் சொந்தமான இடம் வரை, கால்வாய் உள்ளது. கால்வாய் செல்லும் பாதையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி மழை  நீர் தேங்கி நிற்கிறது. 

நன்மங்கலம் பகுதியில் வசிக்கும் 65 வயதைக் கடந்த முதியவர் ஒருவர் நம்மிடம் பேசினார்,

“இனி ஏரிகளை மீட்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அந்தப் பகுதிகளையும் மீட்க முடியாது. 90 சதவிகித அழிவை இப்பகுதிகள் சந்தித்துவிட்டன. இங்க இருந்தது எல்லாமே விவசாய பூமி. எல்லாத்தையும் வீடு கட்ட வித்துட்டாங்க. தண்ணிப் போக இருந்த வழியையும் நாலு பக்கமும் அடைச்சிட்டாங்க. இனி மனுசனால வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் முடியும். 2015 வருஷம் எல்லாத்தையும் தொலைச்சிட்டு நின்ன ஒவ்வொரு மனுஷனையும் அரசாங்கம் ஒரு நிமிஷம் நெனச்சு பார்த்திருந்தால் இன்னக்கி எல்லாத்தையும் சரி பண்ணிருப்பாங்க. ஆனா ஏரியை மீட்க எதுவுமே பண்ணல. கால்வாய் சரி பண்ணல.  ஏரியும் கடந்த 10  ஆண்டுகளாக தூர்வாரப் படவில்லை. இப்பவும் செடி மண்டித்தான் கெடக்கு. ஏரிக் கரைகளை பலப்படுத்தி, ஏரியில் இருக்கும் செடிகளை அப்புறப்படுத்தினால், தண்ணி சுத்தமாகும்" என்கிறார்.

கண்முன்னே இருக்கும் தண்ணீரையும் கண்ணுக்குத் தெரியாத பலரது கண்ணீரையும் இந்த அரசு எப்போது மீட்டெடுக்கும் என்பதே எல்லோருடைய கேள்வியாகவும் இருக்கிறது.

நன்மங்கலம்

மேலும் படங்களுக்கு

நன்மங்கலத்தை சுற்றி நாராயணபுர ஏரி, பள்ளிக்கரணை ஏரி, சிட்லபாக்கம் ஏரிகள் இருக்கின்றன. அவையும் பராமரிப்பின்றி ஆகாயத்தாமரை சூழ்ந்து காணப்படுகின்றன. எல்லா ஏரிகளும் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், இப்போதும் ஏரிகளைச் சுற்றிய பகுதிகளில் வீட்டுமனைகளுக்கான அடையாள கற்கள் ஆங்காங்கே நிற்கின்றன. ரியல் எஸ்டேட் விளம்பர பதாகைளும் அவ்வளவு ஆக்கிரமித்திருக்கின்றன. ஒவ்வொரு திருப்பத்துக்கும் நான்கைந்து நில விற்பனை பதாகைகள் வைத்திருக்கிறார்கள். மழை அதிகமாகப் பெய்யும்போது ஏரியைச் சுற்றி இருக்கிற இடங்கள் மிதந்துகொண்டேதான் இருக்கின்றன. விளம்பரங்களுக்கு மயங்குகிற நடுத்தர மக்கள் சென்னையில் வீடு வேண்டும் என்பதால் குறைந்த விலையில் சேர்த்துவைத்த காசில் லேக்  வியூ என்கிற வார்த்தைக்கு மயங்கி வீடு வாங்கி விடுகிறார்கள்.

ஏரி பார்த்த வீடு என்பதெல்லாம் எவ்வளவு உண்மை என தெரியவில்லை. ஏரியில் வீடு என்பதுதான் உண்மை"


டிரெண்டிங் @ விகடன்